Saturday 7 October 2023

800 விமர்சனம்

 


பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் இந்த “800”. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி அசாத்திய சாதனை நிகழ்த்தி வைத்திருப்பதால் இப்படத்திற்கு “800” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தேயிலை பறிப்பதற்காக தமிழகத்தில் இருந்து இலங்கை செல்லும் தொழிலாளிகளின் வம்சாவளியில் பிறந்தவர் முரளிதரன். இவரது தந்தையாக வருபவர் வேலா ராமமூர்த்தி. சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகிறார் முரளிதரன். இவரின் பவுலிங் திறமையை கண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் டீமில் இணைத்துக் கொள்கிறது. இருந்தும் தமிழன் என்பதால் தொடர்ந்து விளையாட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இருந்தும் கிடைத்த வாய்ப்பில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். தொடர்ந்து பல தடங்கல்கள்.. எல்லாவற்றையும் தாண்டி எப்படி 800 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.


கதாநாயகனாக நடித்துள்ள மதூர் மிட்டல் என்பவருக்கு இந்த படத்தில் இரண்டு சவால்கள். ஒன்று முத்தையா போல நடிக்க வேண்டும்.. இன்னொன்று அவரைப் போல வேகமாக பந்து வீச வேண்டும். ஆனால் மிகப்பெரிய அளவில் பயிற்சி பெற்றதாலோ என்னவோ இந்த இரண்டு குணாதிசயங்களையும் ஒன்றாக கொண்டு வந்து படம் பார்ப்பவர்களுக்கு முத்தையா முரளிதரன் தான் திரைக்குள் இருக்கிறாரோ என்கிற எண்ணத்தை படம் முழுவதும் தனது நடிப்பால் ஏற்படுத்தி விடுகிறார் மாத்தூர் மிட்டல்.


இயக்குனர் ஸ்ரீபதி எந்த அளவிற்கு இந்த கதையை உயிர் உடன் கொடுக்க முயற்சித்து இருக்கிறாரோ அதில் ஓரளவுக்கு வெற்றியை பெற்று இருக்கிறார். முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களாக இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி காட்டியிருக்கும் பெரும்பாலான காட்சிகள் துணிச்சல் மிகுந்தவையாக தான் இருக்கின்றன. குறிப்பாக எண்பது 90 காலகட்டங்களின் நிகழ்வுகளையும் கிரிக்கெட் போட்டி மைதானம் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் வெகு நேர்த்தியாக கையாண்டு உள்ளார்.


முத்தையா முரளிதரனின் மனைவி கதாபாத்திரத்தில் மஹிமா நம்பியார். கிரிக்கெட் தான் களம் என்பதால் இவருக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்றாலும் ஒரு தமிழ் பெண்ணாக ஒரு இலங்கை கிரிக்கெட் வீரரின் மனைவியாக அவர் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களை ஒரு சில காட்சிகளிலேயே அற்புதமான வசனங்களால் உணர்த்தி விடுகிறார்.


இவர்களை தாண்டி கிங் ரத்தினம் என்கிற நடிகரும் இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரனதுங்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரையும் பொருத்தமான தேர்வு என்று சொல்லலாம். நரேனுக்கு தியேட்டரில் கிடைக்கும் கைதட்டல்கள் எந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தை அவர் பிரதிபலிக்கிறார் என்பதை உணர்த்தி விடுகின்றன. நாசர், வேலா ராமமூர்த்தி, வடிவுக்கரசி ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.


இது போன்ற படங்களில் சில இடங்களில் டாக்குமென்டரி பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அதே போன்று இந்தப் படத்திலும் அப்படிப்பட்ட சில காட்சிகள் இருக்கின்றன. கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு தான் படம் என்றாலும் நமக்கு பிடித்த நம் இந்திய நட்சத்திர வீரரின் படத்தை பார்ப்பதற்கும் வெளிநாட்டை சேர்ந்த ஒரு வீரரின் வாழ்க்கை வரலாறு பார்ப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு. அதை படம் பார்க்கும்போது உணர முடிகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...