நடிகர் சித்தார்த் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த சித்தா படத்தில் புதுவிதமாக தெரிகிறார், ஏனென்றால் இந்த படாதில் அவர் நடிப்பு சூப்பர், சரி கதைக்குள் போவோம்.
இறந்து போன தனது அண்ணன் மகள் சஹஷ்ரா ஶ்ரீயை சித்தார்த் பாசமாக வளர்க்கிறார். அப்பா இல்லையே என்ற ஏக்கம் ஏற்படாத வகையில் சஹஷ்ரா ஶ்ரீயை பாசமாகவும், பாதுகாப்பாகவும் வளர்க்கும் சித்தார்த், நிமிஷா சஜயனை காதலிக்கிறார். இதற்கிடையே திடீரென்று சஹஷ்ரா ஶ்ரீ காணாமல் போய்விடுகிறார். ஒரு பக்கம் சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் தேட, மறுபக்கம் போலீஸார் தேடுகிறார்கள். அப்படி இருந்தும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், காணாமல் போன 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டுபிடிக்கப்படுகிறார். ஆனால், அந்த சடலம் சித்தார்த்தின் மகள் அல்ல என்பது தெரிய வருகிறது. காணாமல் போன மகளுக்கு என்ன நடந்தது?, அவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
சித்தார்த் கதாநாயகனாக அல்லாமல் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். சித்தார்த்தை தொடர்ந்து நாம் பல படங்களில் பார்த்திருந்தாலும், இந்த படத்தில் முழுக்க முழுக்க புதியவராக தெரிகிறார். அழுக்கு சட்டை போட்டாலும், பணக்கார வீட்டு பையனாகவே தெரியும் சித்தார்த்தை முதல் முறையாக கதாபாத்திரத்திற்கான நடிகராக மாற்றியிருக்கிறார்கள். உருவத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரமாக வலம் வரும் சித்தார்த், தன் மீது பழி விழுந்ததும் என்ன நடந்தது என்று தெரியாமல் தடுமாறுவது, மகள் காணாமல் போனதால் நிலைகுலைந்து போவது, மகளுக்கு நடந்த கொடுமைக்கு காரணமானவர்களை கொலை செய்ய துடிப்பது, என அனைத்து காட்சிகளிலும் உணர்ச்சிரமான நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார்.
சித்தார்த்தின் காதலியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன், மிக இயல்பாக நடித்திருக்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி ஆக்ரோஷமாக பேசாமல் அளவாக பேசினாலும் அவர் பேசும் வசனங்கள் பார்வையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சித்தார்த் நாயகன் என்றாலும் சில இடங்களில் அவரையும் தாண்டி, கவனம் ஈர்க்கிறார்கள் சிறுமிகள் சஹஷ்ரா ஶ்ரீ மற்றும் எஸ்.ஆபியா தஷ்னீம். இந்த சிறுமிகளின் இயல்பான நடிப்பு திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. அதிலும், சித்தார்த்தின் அண்ணன் மகளாக நடித்திருக்கும் சஹஷ்ரா ஶ்ரீ காணாமல் போன பிறகு எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும், படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் நம் நினைவில் இருந்து நீங்காமல் இருப்பதோடு, குறைந்தது இரண்டு நாட்களாவது நம் மூளைக்குள் இருந்து நம்மை தூங்க விடாமல் செய்வது உறுதி.
பாம்பு என்ற வார்த்தையை கேட்டதும் மயக்க நிலையில் இருக்கும் குழந்தை அலறி துடிக்கும் காட்சி, தன்னை காப்பாற்ற தனது சித்தாவை அனுப்பி வைக்க சொல்லி கடவுளிடம் வேண்டும் காட்சி உள்ளிட்ட அனைத்து காட்சிகளிலும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை கண்கலங்க வைக்கும் சிறுமி சஹஷ்ரா ஶ்ரீ தேசிய விருதுக்கு மட்டும் அல்ல ஆஸ்கார் விருதுக்கே தகுதியானவர்.
சித்தார்த்தின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்கள், அண்ணியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர், வில்லனாக நடித்திருக்கும் நடிகர், பெண் காவல்துறை அதிகாரி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
பழனியை அதன் அழகியலுடன் படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், நட்சத்திரங்களை கதைக்கான கதாபாத்திரங்களாக வலம் வர செய்வதோடு, அவர்களுடைய உணர்வுகளை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருப்பதோடு, கதையோட்டத்திற்கு ஏற்றவாறும் அமைந்திருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை திரைக்கதையின் அழுத்தத்தை சிதைக்காமல் சிறப்பாக பயணித்திருக்கிறது. பல இடங்களில் அமைதியே பலம் என்பதை புரிந்து இசையமைப்பாளர் பயணித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.
இரண்டு மணி நேரம் நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் படத்தொகுப்பாளர் சுரேஷ் ஏ.பிரசாத் காட்சிகளை தொகுத்திருக்கிறார். கதாபாத்திரங்களின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு தான் திரைக்கதையின் பலம் என்றாலும், திரைக்கதை வேகமாக பயணிக்கும் அனுபவத்தை நமக்கு கொடுத்து இருக்கையின் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.
தந்தை - மகள் பாசம் குறித்த திரைப்படங்கள் தான் அதிகமாக வெளியாகும் நிலையில், சித்தப்பா - மகள் இடையிலான உறவை மையப்படுத்திய கதையில் சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களையும் அதன் பின்னணியையும் இணைத்து ஒரு பரபரப்பான அதே சமயம் இதயத்தை கனக்க செய்யும் திரைக்கதை மற்றும் காட்சிகளோடு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார்.
கதைக்களம், கதாபாத்திர தேர்வு மற்றும் அவர்களிடம் நடிப்பு வாங்கிய விதம் ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருப்பதோடு, எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் திரைக்கதை மிக வலிமையாக பயணிக்கிறது.
சிறுமி காணாமல் போனவுடன் அவருடைய குடும்பம் அதை எப்படி எதிர்கொள்கிறது என்பதை இயல்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் காவல்துறை அதை கையாளும் விதத்தை மிக தைரியமாக சொல்லியிருக்கிறார். அதிலும், 24 மணி நேரம் ஆகட்டும் என்று காவல் ஆய்வாளர் சாதாரணமாக கடந்து போகும் காட்சிகள் எல்லாம் பேரதிர்ச்சி.
தான் எடுத்துக்கொண்ட கதையை எந்தவித சமரசமும் இல்லாமல் அதே சமயம் எந்தவித விரசமும் இன்றி இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் சொல்லியிருந்தாலும், சினிமாவுக்காக சில லாஜிக் மீறல்களையும் செய்திருக்கிறார். குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் சொந்த உறவினர்களாலேயே நடக்கிறது, என்ற புள்ளி விவரம் மற்றும் ஆய்வறிக்கையை பொய்யாக்கும் விதமாக சில காட்சிகளை வடிவமைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல், இரண்டு சிறுமிகள், சித்தார்த்தின் காதலி என படத்தில் வரும் பெரும்பாலான பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகியிருப்பதாக சொல்லப்படுவது சினிமாத்தனமாக இருப்பதோடு, பெண்கள் தனியாக இருந்தாலே அவர்களை நிச்சயம் யாராவது பாலியல் வன்கொடுமை செய்வார்கள் என்று சொல்வது போல் இருக்கிறது.
தான் எடுத்துக்கொண்ட கதையை முழுக்க முழுக்க சினிமாத்தனமாக அல்லாமல் எதார்த்தமான வாழ்வியலாக கொடுத்ததோடு, அதை விறுவிறுப்பாகவும், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாகவும் சொல்லியதில் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் வெற்றி பெற்றிருந்தாலும், சில இடங்களில் “இது தேவையா?” என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் எழுப்பவும் செய்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘சித்தா’ சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு.
ரேட்டிங் 3.5/5
0 comments:
Post a Comment