Friday 10 February 2023

’டாடா’ திரைப்பட விமர்சனம்

ஒரே கல்லூரியில் படிக்கும் கவினும், அபர்ணா தாஸும் காதலிக்கிறார்கள். காதல் நெருக்கத்தால் அபர்ணா தாஸ் கர்ப்பமடைய, கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு அபர்ணா தாஸுடன் கவின் குடும்ப வாழ்க்கையை தொடங்குகிறார். ஆனால், வறுமை காரணமாக இவர்களது வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட, இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இதற்கிடையே குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையை கவினிடம் கொடுத்துவிட்டு, அபர்ணா தாஸை அவரது பெற்றோர் அழைத்து சென்று விடுகிறார்கள்.

 

தனது குழந்தை இறந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டதோடு, குழந்தை இறப்புக்கு கவின் தான் காரணம் என்று நினைத்து அவரை விட்டு அபர்ணா தாஸ் பிரிந்துவிடுகிறார். ஆனால், கைக்குழந்தையுடன் தனிமையில் கஷ்ட்டப்படும் கவின், அந்த குழந்தையை வளர்ப்பதோடு, பாதியில் விட்ட படிப்பை தொடரவும் செய்கிறார்.

 

காலங்கள் ஓட கவின் நல்ல நிலமைக்கு வருவதோடு, தனது குழந்தையை நல்லபடியாக வளர்த்து வரும் நிலையில், மீண்டும் அபர்ணா தாஸை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களையும்,  பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதையும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு சொல்வதே ‘டாடா’.

 

ரசிகர்களின் பல்சுக்கு ஏற்றபடி கதை தேர்வு செய்வதில் கவின் கவனம் செலுத்தி வருவது அவருடைய ஒவ்வொரு படங்களிலும் தெரிகிறது. காதல், கணவன், அப்பா என மூன்று வேடங்களிலும் உணர்ச்சி பொங்க நடித்திருப்பவர், எந்த இடத்திலும் ஓவராக நடிக்காமல் அளவாக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். அழுகையே வராது என்று ஆரம்பக் காட்சியில் கூறியவர், தன்னையும் அறியாமல் கண் கலங்கும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார். சிறு சிறு இடங்களில் மிக நேர்த்தியாக நடித்து கவனம் பெறும் கவன், தனது நடிப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.

 

முதல் படத்திலேயே நாயகனுக்கு இணையான வேடத்தில் அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகளில் குறைவான வசனங்கள் பேசியிருந்தாலும் கண்களினாலேயே நடித்திருப்பவர், இறுதிக் காட்சியில் தனக்கு பிறந்த குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்ததும் வெளிப்படுத்தும் நடிப்பு சிறப்பு. சில இடங்களில் வசனம் பேசும்போது மட்டும் மலையாள வாடை வீசுகிறது. அதை தவிர்த்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார்.

 

கவினின் நண்பராக நடித்திருக்கும் பிரதீப், சிறிய வேடம் என்றாலும் கவனம் பெறும்படி நடித்திருப்பதோடு, பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்.

 

விடிவி கணேஷின் வேடமும், அதில் அவர் நடித்த விதமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. அவர் அறிமுகமான பிறகு திரையரங்கே அதிரும் வகையில் சிரிப்பு சத்தம் கேட்பதோடு, காட்சிகள் வேகமாகவும் நகர்கிறது.

 

பாக்யராஜ், ஐஸ்வர்யா, ஹரிஷ், கமல், ஃபவுசி மற்றும் குழந்தை நட்சத்திரம் இலன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

 

எழிலரசனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. கல்லூரி, ஐடி நிறுவனம், குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பு என கதையில் வரும் களங்களையும், கதாபாத்திரங்களையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் காட்சிகள் மூலம் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். 

 

இசையமைப்பாளர் ஜென் மார்டினின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை மூலம் காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்திருப்பவர், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பின்னணி இசையையும், பீஜியமையும் கொடுத்து கவனம் பெறுகிறார்.

 

கதிரேஷ் அலகேஷின் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. இப்படி தான் கதை நகரும், இறுதியில் இது தான் நடக்கும் என்பது படத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்தாலும், காட்சிகளை தொகுத்த விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் கணேஷ் கே.பாபு, கதை எதுவாக இருந்தாலும் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் மட்டுமே ரசிகர்களை கவர முடியும் என்பதை நிரூபித்துள்ளார். 

 

கவின் மற்றும் அபர்ணா தாஸ் இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு ஒரு எளிமையான கதையை இளைஞர்கள் கொண்டாடும் ஜாலியான படமாகவும், அதே சமயம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாகவும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.

 

படத்தின் சில இடங்களில் சில சினிமாத்தமான காட்சிகளால் சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும், அதை குறையாக தெரியவிடாமல் மிக சாமர்த்தியமாக அடுத்தடுத்த காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர்  மிக நாகரீகமாக காட்சிகளை கையாண்டு, ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘டாடா’  ரசிகர்கள் கொண்டாடும் படம்.


Casting : Kavin, Aparna Dass, Pradeep, K.Bagyaraj, VTV Ganesh, Kamal, Aishwarya

Directed By : Ganesh K.Babu

Music By : Jen Martin

Produced By : Olympia Movies - Ambeth Kumar

 

 

ரேட்டிங் 3/5

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...