Saturday 24 September 2022

’ட்ரிகர்’ திரைப்பட விமர்சனம்

Casting : Atharva, Tanya Ravichandran, Aurun Pandian, Raghul Dev Shetty, Setha, Munishkanth, Chinni Jayanth, Azhakamperumal


Directed By : Sam Anton


Music By : Ghibran


Produced By : Prateek Chakravorty and Shruthi Nallappaகாவல்துறையில் அண்டர்கவர் ஆபரேஷனில் பணியாற்றும் ஆதர்வாவுக்கு, குற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பற்றி தகவல் கொடுக்கும் பணி வழங்கப்படுகிறது. இதற்கிடையே அனாதை இல்லத்தில் இருந்து அதர்வாவின் அண்ணன் தத்தெடுக்கும் பெண் குழந்தையை ஒரு கும்பல் கடத்துகிறது. அந்த கும்பலிடம் இருந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் அதர்வாவுக்கு, அந்த கும்பல் செய்யும் அதிர்ச்சியூட்டும் குற்ற செயல் குறித்து தெரிய வருகிறது. ஆதாரத்துடன் அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதர்வா, அதை எப்படி செய்கிறார் என்பதே ‘ட்ரிகர்’.


அண்டர்கவர் ஆபரேஷனில் இருக்கும் போலீஸ் என்பதால், கல்லூரி மாணவரை போல் வலம் வரும் அதர்வா, ஆக்‌ஷன் காட்சிகளில் காட்டும் அதிரடியால் தன்னை அக்மார்க் ஆக்‌ஷன் ஹீரோவாக நிரூபித்திருக்கிறார். முன்னாள் போலீஸ் அதிகாரியான தனது அப்பா மீது விழுந்த களங்களத்தை துடைக்க வேண்டும், அதே சமயம் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் அதர்வா காட்டும் தீவிரமும், அதில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு கைதட்டல் பெறுகிறது.டூயட் பாட்டு மற்றும் காதல் காட்சிகள் இல்லாத கதாநாயகியாக தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் தான்யா ரவிச்சந்திரன், இந்த படத்திலும் அப்படி ஒரு வேடத்தில் தான் நடித்திருக்கிறார். கதாநாயகியாக அவருக்கு வேலை குறைவு என்றாலும், ஒரு கதாப்பாத்திரமாக நிறைவாகவே நடித்திருக்கிறார்.படத்தின் முக்கிய வில்லனான நடித்திருக்கும் பாலிவுட் வரவு ராகுல் தேவ் ஷெட்டி ஆரம்ப காட்சியில் மிரட்டலாக எண்ட்ரி கொடுக்கிறார். ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் தாடி வைத்துக்கொண்டு வருவதால் அவருடைய முகத்தில் காட்டப்படும் ரியாக்‌ஷன் தெரியாமல் போய்விடுகிறது. இருந்தாலும் அவர் செய்யும் குற்றம் அதிர்ச்சியூட்டுகிறது.அதர்வாவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் அருண் பாண்டியன், ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டவர் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.அதர்வாவின் அம்மாவாக நடித்திருக்கும் சீதா, போலீஸ் கமிஷ்னராக நடித்திருக்கும் அழகம்பெருமாள், முனீஷ்காந்த், சின்னி ஜெயந்த் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களுடைய வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.ஜிப்ரான் இசையில் பாடல்கள் நினைவில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக பயணித்துள்ளது.ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, சேசிங் காட்சியை பிரமிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.காவல்துறை தொடர்பாக பல படங்கள் வந்திருந்தாலும், இதுவரை காவல்துறை பற்றி சொல்லப்படாத ஒரு விஷயத்தை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சாம் ஆண்டன், படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.காக்கிச் சட்டை போட்டுக்கொண்டு பணியாற்றும் காவலர்களை விட, தங்களின் அடையாளத்தை காட்டாமல், உயிரை பணிய வைத்து பணியாற்றும் காவலர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர், தொழில்நுட்ப ரீதியாக காவல்துறை எப்படி எல்லாம் பணியாற்றுகிறார்கள் என்பதையும் நேர்த்தியாக காட்டியிருக்கிறார்.வில்லன் கூட்டம் செய்யும் குற்ற செயல், அதை கண்டுபிடிக்கும் அதர்வா, அவர்களை ஆதாரத்தோடு பிடிப்பது என்பது தான் முக்கிய கதையாக இருந்தாலும், அதனுடன் அதர்வாவின் அப்பா அருண் பாண்டியன் கதாப்பாத்திரத்திற்கு ஒரு கிளை கதை மற்றும் அவருடைய உடல் நிலை போன்றவை, முக்கிய கதையின் போக்கை மாற்றும்படி இருப்பதோடு, சற்று சலிப்பையும் ஏற்படுத்துகிறது.இந்த சிறு குறையை தவிர்த்துவிட்டு பார்த்தால், ‘ட்ரிகர்’ இதுவரை வெளியான போலீஸ் படங்களில் இருந்து சற்று வித்தியாசமான படமாக இருப்பதோடு, விறுவிறுப்பான ஆக்‌ஷன் படமாகவும் இருக்கிறது.மொத்தத்தில், ‘ட்ரிகர்’ வேகம்.ரேட்டிங் 3/5


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...