Saturday 19 March 2022

'மாறன்’ விமர்சனம்

 


Casting : Dhanush, Malavika Mohanan, Samuthirakani, Ameer

Directed By : Karthik Naren

Music By : GV Prakash Kumar

Produced By : Sathya Jyothi Films

 

கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாறன்’. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது, என்பதை பார்ப்போம்.

 

நேர்மையான பத்திரிகை நிருபரான ராம்கி, தனது நேர்மையால் உயிரை விட, அவரது மகனான தனுஷும் அப்பாவை போல நேர்மையான அதே சமயம் தைரியமான பத்திரிகை நிருபராக வலம் வருகிறார். தனுஷுக்கும் அவரது நேர்மையால் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையால் தனுஷ் மட்டும் இன்றி, அவரது தங்கையும் பாதிக்கப்பட, அந்த பிரச்சனையை தனுஷ் எப்படி சரி செய்து, தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்றுகிறார் என்பதே ‘மாறன்’ கதை.

 

கதை சுருக்கத்தை படிக்கும் போது அதர பழசான கதை போல் தோன்றும், ஆனால் இரண்டாம் பாதியில், இயக்குநர் வைத்திருக்கும் இரண்டு திருப்புமுனைகள் நம்மை திக்குமுக்காட வைத்துவிடுகிறது. அது என்ன என்பதும், அந்த திருப்புமுனை சம்பவங்கள், பழைய திரைக்கதையை எப்படி புதிய ரூட்டில் பயணிக்க வைக்கிறது என்பதும் தான் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

 

‘அசுரன்’, ‘கர்ணன்’ போன்ற படங்களில் நடித்த தனுஷா இப்படி ஒரு படத்தில் நடித்தார்!, என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு தனுஷின் கதாப்பாத்திரம் அமைந்திருந்தாலும், தனது வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை உருமாற்றிக்கொண்டிருக்கும் தனுஷ், கல்லூரி மாணவரைப் போல் இருந்தாலும், துப்பரியும் நிருபராக, தனது சுறுசுறுப்பான நடிப்பு மூலம் நம்மை ஈர்த்துவிடுகிறார்.

 

மாடலிங் புகைப்படங்கள் மூலம் வைரலாகும் மாளவிகா மோகனன், திரைப்படங்களில் நாயகியாக நடிக்கும் போது மட்டும் மிக சாதாரணமாக வந்து போகிறார். அவருடைய கதாப்பாத்திரம் கதாநாயகனுடன் பயணித்தாலும், கதைக்கு முக்கியம் இல்லாத கதாப்பாத்திரமாகவே வலம் வருவது பெரும் சோகம்.

 

வில்லனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி வரும் காட்சிகள் குறைவு என்பதால் அவருடைய பேச்சும் குறைவாக இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல். மற்றொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் அமீரின் கதாப்பாத்திரமும், அவர் பேசும் வசனமும் கவனம் ஈர்த்தாலும், அது தேவையில்லாத அதே சமயம் நியாயமற்றதாக இருப்பது படத்தின் மாபெரும் குறைகளில் ஒன்று.

 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருப்பதோடு, புரியும் ரகமாகவும் இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.

 

விவேகானந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவு கதைக்கேற்ப பயணித்தாலும், காட்சிகளை மிக எளிமையாகவும், இயல்பாகவும் படமாக்கியிருக்கிறது. அதே சமயம், குறிப்பிட்ட ஒரு வட்டத்தை போட்டு அதற்குள் மட்டுமே கேமராவை சுழல வைத்திருக்கிறார்கள். பிரசன்னா ஜி.கே.-வின் படத்தொகுப்பு கச்சிதம்.

 

முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர் கார்த்திக் நரேன், தனது அடுத்தடுத்த படங்களின் திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் சொதப்புகிறார். அதற்கு மற்றொரு சான்றாக மாறன் திரைக்கதையும் அமைந்துள்ளது.

 

புலனாய்வு நிருபர் கதாப்பாத்திரத்தை வைத்துக்கொண்டு கார்த்திக் நரேன் எழுதியிருக்கும் கதை பழசாக இருந்தாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் சற்று கவனம் செலுத்தி வித்தியாசமாக காட்டியிருக்கலாம். ஆனால், அங்கேயும் பழைய பாணியை பயன்படுத்தியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.

 

இருந்தாலும், அமீரின் கதாப்பாத்திரத்தை வைத்துக்கொண்டு, இரண்டாம் பாதியில் வைத்திருக்கும் திருப்புமுனை திரைக்கதைக்கு வேகம் கொடுப்பதோடு, நம்மையும் சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.

 

இரண்டாம் பாதியில் இருந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் முதல் பாதியிலும் இருந்திருந்தால் ‘மாறன்’ தனுஷ் மார்த்தட்டிக் கொள்ளும் படங்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும்.

 

மொத்தத்தில் ‘மாறன்’ பெஸ்ட்டும் இல்லை வேஸ்ட்டும் இல்லை.

 

ரேட்டிங் 3/5

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...