தமிழ் சினிமாவில் பல அரசியல் திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், சற்று வித்தியாசமான அரசியல் படமாக உருவாகியிருக்கும் ‘ஆபரேஷன் ஜுஜுபி’ (Operation JuJuPi) அனைவரும் புரிந்துக் கொள்ளும் இந்திய ஆங்கிலப் படமாக, தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படி என்பதை பார்ப்போம்.
கதையின் நாயகனான சாம்ஸ், இந்த நாட்டின் சிஸ்டம் சரியில்லை என்று கவலைப்படுகிறார். இது குறித்து தனது நண்பர்களிடம் அவர் சொல்லும் போது, ”உனக்கு தான் பிரச்சனை, மருத்துவரை பாரு”, என்று அவருக்கு அறிவுரை சொல்கிறார்கள். திடீரென்று சாம்ஸ் முன்பு கடவுள் தோன்றி அவர் பிரச்சனை குறித்து கேட்பதோடு, அவரிடம் JuJuPi என்ற அதிசய பானத்தையும் வழங்குகிறார். அந்த பானத்தை பருகும் சாம்ஸ், நாட்டையே மாற்றும் அளவுக்கு ஒரு கனவு காண, அந்த கனவு மூலம் அரசியல் உலகில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது. அது என்ன என்பது தான் ‘Operation JuJuPi’.
இயக்குநர் அருண்காந்தின் வித்தியாசமான முயற்சி மட்டும் இன்றி, ஒவ்வொரு இளைஞர்களும் காணும் கனவாகவே இப்படத்தின் கதைக்கரு அமைந்துள்ளது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சாம்ஸ், தன்னால் சீரியஸான கதாப்பாத்திரங்களையும் கையாள முடியும், என்பதை மிக நேர்த்தியாக நிரூபித்திருக்கிறார்.
சாம்ஸின் மனைவியாக நடித்திருக்கும் வினோதினி மற்றும் மகளாக நடித்த நடிகை தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். சாம்ஸ் சீரியஸாக நடித்தாலும் வினோதினி அவ்வபோது நம்மை சிரிக்க வைக்கவும் செய்கிறார்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாக நடித்திருக்கும் வையாபுரி, வெங்கட் சுபா, இயக்குநர் சந்தானபாரதி, படவா கோபி, ஜெகன், மனோபாலா என முன்னணி காமெடி நடிகர்கள் அனைவரும், காமெடி என்ற தங்களது அடையாளத்தை காட்டாமல், கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற சீரியஸாக நடித்து அசத்தியிருக்கிறார்கள்.
ஸ்டைலிஷான இளம் பிரதமராக நடித்திருக்கும் ராகவின், திட்டங்கள் அனைத்தும் கைதட்டி வரவேற்கும்படி இருக்கிறது. அவரது ஆங்கில உச்சரிப்பு மற்றும் அந்த வசனங்களை அவர் பேசிய விதமும் பாராட்டும்படி உள்ளது.
ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத, கிழக்கு கடற்கரை சாலை லொக்கேஷன்களை தேடி பிடித்து படமாக்கியிருக்கிறார். கதாப்பாத்திரங்கள் பேசும் வசனங்கள் ரசிகர்களிடம் சென்று சேர வேண்டும், என்பதில் கவனமாக காட்டியிருப்பவர், தனது கேமரா பணியையும் ரசிகர்களிடம் கொண்டு செல்ல, கையாண்ட பிரேம்கள் அனைத்தும் பிரமாதம்.
ஆங்கிலப் படமாக இருந்தாலும், அனைத்து தரப்பினருக்கும் கதை புரியும்படி மிக கச்சிதமாக படத்தொகுப்பு செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் வினோத் ஸ்ரீதர்.
கதை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் அருண்காந்த், இசை, கலர் மிக்ஸிங், ஒலி கலவை உள்ளிட்ட 14 பணிகளை ஒருவராகவே செய்திருந்தாலும், எதிலும் குறை இல்லாமல் மிக நேர்த்தியாக பணியாற்றியுள்ளார்.
ஒரு நாடு முன்னேற்றம் அடைவது மட்டும் முன்னேற்றம் அல்ல, அந்த நாட்டு மக்கள் சந்தோஷமாக இருப்பது தான் உண்மையான முன்னேற்றம் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்யும் இயக்குநர் அருண்காந்த், அப்படி நடக்க வேண்டும் என்றால், நல்லவர்கள் அரசியலில் வெற்றி பெற்று, பதவிகளில் அமர வேண்டும், என்பதை வலியுறுத்துவதோடு, அதை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறார்.
இயக்குநர் அருண்காந்த் சொல்லும் அரசியல் தீர்வு மற்றும் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் அத்தனையும் அப்ளாஷ் கொடுக்கும் வகையில் இருப்பதோடு, க்ளைமாக்ஸ் காட்சியில் எழுந்து நின்று கைதட்டாமலும் இருக்க முடியாது.
நாட்டு மீது குறை சொல்லும் பலர், தாங்கள் சரியாக இருப்பதாக கூறிகொண்டு தவறான முறையில் வாழ்வதையும் இயக்குநர் சுட்டிக்காட்டிய விதம், அப்படிப்பட்டவர்களுகு நல்ல அறிவுரை.
நடிகர்கள் அனைவரும் அதிகம் பேசுவது மட்டும் சிறு குறையாக சிலருக்கு தோன்றலாம், ஆனால் இயக்குநர் அருண்காந்த், ஒவ்வொரு வசனங்களிலும் பேசும் கருத்துக்களின் ஆழத்தால், அது குறை அல்ல, தற்போது தேவையான ஒன்று, என்பதையும் அடுத்தடுத்த காட்சிகளில் அனைவரும் புரிந்துக்கொள்கிறார்கள்.
மொத்தத்தில், Operation JuJuPi நாட்டுக்கு மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான கருத்தை சொல்லும், வித்தியாசமான அரசியல் திரைப்படம்.
0 comments:
Post a Comment