Monday 8 November 2021

16 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் ‘வண்ண வண்ண பூக்கள் வினோதினி


“வண்ண வண்ண பூக்கள்” படம்  மூலம் பட்டி தொட்டியெங்கும் இளைஞர்களின் மனதை கிறங்கடித்தவர்  நடிகை வினோதினி.  12 வருடங்களாக நடிப்பிலிருந்து விலகியிருந்தவர் தற்போது மீண்டும் திரையில் நடிக்கவுள்ளார்.


இயக்குநர் நடிகர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர்  நடிகை வினோதினி. சிறு வயதிலேயே “நாயகன்”  படம் முதலாக பெரும் நடசத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 16 வயதில் கஸ்தூரி ராஜாவின் ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் இந்திய அளவில் பெரும் பிரபலத்தை பெற்று தந்தது. கன்னட, மலையாள மொழிகள் உட்பட, பல மொழிகளில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும்,   முன்னணி நாயகர்களுடனும் பல படங்களில் நடித்து, தென்னிந்தியாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்ந்தவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அவருக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புக்கள் தேடி வருவதால் மீண்டும் நடிப்பில் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார்.


தனது மலரும் நினைவுகள் குறித்தும் மீண்டும் நடிக்க இருப்பதை  குறித்தும்  நடிகை வினோதினி கூறியதாவது…

என் அம்மா ஒரு நாடக நடிகை, அப்போதே நாடகங்கள் நடிக்க செல்லும் போது என்னை அழைத்து செல்வார்.  அந்தப்பழக்கம்  மூலமாக நான் சிறு வயதிலேயே விசு சார் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன்.  அவர் படங்களில் மட்டுமே தொடர்ந்து 7 படங்கள் நடித்தேன். தொடர்ச்சியாக எனக்கு நிறைய வாய்புகள் குவிந்தன.  மணிரத்னம் சாரின் நாயகன் படத்தில் சிறு வயது சாராவாக நடித்தேன். மும்பையில் தான் ஷூட்டிங் நடந்தது. அங்கு தங்கியது நடித்தது எல்லாமே மிகச்சிறந்த அமனுபவமாக இருந்தது.


மணிரத்னம் சாரை அந்தப்படத்திற்கு பிறகு நான் பார்த்ததே இல்லை. சுஹாசினி மேடத்தை பார்க்கும்போது இதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பேன். மணிரத்னம் சாரை சந்தித்து உங்கள் நாயகன் படத்தில் நான் நடித்தேன்..!ஞாபகம் இருக்கிறதா எனக்கேட்க வேண்டும் என கேட்க வேண்டும் என நினைப்பேன்.


என் வாழ்க்கை முழுவதுமே சினிமாவை சுற்றித்தான் இருந்தது. 16 வயதிலேயே நாயகியாகிவிட்டேன். கஸ்தூரிராஜா சார் எங்கள் வீட்டுக்கு அருகில் தான் குடியிருந்தார்கள். அவரது ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்தப்படம் 100 நாட்கள் ஓடியது. அதைப்பார்த்து தான்  பாலுமகேந்திரா சார் வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடிக்க வைத்தார். அந்தப்படம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டது. கதை எல்லாம் சின்ன கதைதான். ஆனால் அதை அவர் படமாக்கிய விதம் தான் அற்புதமாக இருந்தது. பாலுமகேந்திரா எனக்கு ஒரு தந்தை போல் இருந்தார். எனக்கு திரைக்துறையில் மிகவும் பிடித்தவர்.


தமிழை விட கன்னடத்தில் நிறைய படங்களில் நாயகியாக  நடித்தேன். கன்னடத்தில்  நிறைய வாய்ப்புகள் வந்ததால் தமிழில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை, நான் திரும்பி வரும்போது இங்கு நிறைய புது நடிகைகள் வந்துவிட்டனர் அதனால் குணச்சித்திர பாத்திரங்கள் தான் செய்தேன். தமிழ் திரையுலகம் பிடிக்கும் என்பதால் அதிலும் தொடர்ந்து நடித்தேன். அப்போதைய நடசத்திரங்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளேன் என இப்போது நினைத்தால் பெருமையாக இருக்கிறது.


திருமணத்திற்கு பிறகு ஒரு கட்டத்தில் அம்மா அப்பாவை, அத்தை மாமா மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பும் சேர்ந்து வந்துவிட்டதால், சினிமாவிலிருந்து, ஒதுங்க வேண்டியதாகிவிட்டது. இது பெண்களின் வாழ்க்கையில் இயல்பான ஒன்றுதான். அந்த காலகட்டத்திலும் தொடர்ந்து  எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் என்னால் தான் நடிக்க முடியவில்லை.  கரு.பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஒரு  சின்ன பாத்திரத்தில் நடித்தேன். அவரது சதுரங்கம் படத்திலும் நடித்திருந்தேன். இடையில் எனக்கு நேரமே இல்லை. இப்போது தான் கொஞ்சம் நேரம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. என் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள், அவர்களே நீ நடிக்கலாமே அம்மா எனக் கூறுகிறார்கள். நல்ல நல்ல வாய்ப்புக்களும் தேடி வருகிறது. அதனால் நடிக்கலாம் என்றிருக்கிறேன்.

நான் இருந்த போது இருந்த சினிமா , இப்போது இல்லை, நிறைய  மாறிவிட்டது.  சினிமா டெக்னாலஜியில் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இப்போது சினிமா ஓடிடி மூலம் வீட்டுக்கே வருகிறது. கதைகளுக்கு நிறைய முக்கியத்துவம் தந்து, வெப் சீரிஸ்களும் வருகின்றன. எல்லோருக்குமான கதைகளும் இருக்கிறது. எனக்கு பொருந்தும் வித்தியாசமான பாத்திரங்களில் திரைப்படங்கள்,  வெப் சீரிஸில்  நடிக்க ஆசைப்படுகிறேன். விரைவில் என்னை நீங்கள் மீண்டும்,  திரையில் பார்க்கலாம் என்றார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...