Thursday 23 September 2021

விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சூர்யாவின் “சூரரைப்போற்று

 


சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (SIIMA) வழங்கும் விழாவில் ‘சூரரைப்போற்று’ ஏழு விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது. 


இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டில் அமேசான் ப்ரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியான திரைப்படம் ‘சூரரை போற்று’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த ‘சூரரை போற்று’ 78 ஆவது கோல்டன் குளோப் விருதிற்கான போட்டிப்பிரிவில் இந்தியா சார்பில் திரையிட தேர்வானது. அதையடுத்து மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற 12-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படமாக ‘சூரரைப்போற்று’ தேர்வு செய்யப்பட்டது. அத்துடன் சிறந்த நடிகராக நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒன்பதாவது சைமா (SIIMA) விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படங்களுக்கான பல்வேறு பிரிவுகளில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றது.  இதில் சிறந்த நடிகர், சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை (விமர்சகர்), சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி பாடகர் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று, ஏழு விருதுகளை வென்றிருக்கிறது.


இதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில்‌ 2டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார், நடிகை அபர்ணா பாலமுரளி, ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, பாடகர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


இதனிடையே சிறந்த படங்களுக்கான ஐஎம்டிபி எனப்படும் சர்வதேச திரைப்படங்களை வரிசைப்படுத்தும் இணையதள பட்டியலில் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட மூன்றாவது படமாக ‘சூரரை போற்று’ (9.1) பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...