Wednesday 10 April 2019

குழந்தை ரசிகர்கள் கடவுள் கொடுத்த வரம் - டார்லிங் ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமாவின் டார்லிங் ஜிவி.பிரகாஷுக்கு இந்த ஆண்டு மிக சிறப்பாக தொடங்கி இருக்கிறது. சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிகின்றன.


குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகி விட்ட ஜிவி.பிரகாஷின் குழந்தை ரசிகர்களை கவரும் வகையில் ’வாட்ச்மேன்’ படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு எப்போதுமே விலங்குகள் மீது தனி பிரியம் உண்டு. விலங்குகள் நடிக்கும் படங்கள் என்றால் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துவிடும். அந்த வகையில் வாட்ச்மேன் படத்தில் புருனோ என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நாய் இடம்பெறும் சாகச காட்சிகளை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் என்பதாலேயே கோடைக் கொண்டாட்டமாக வரும் 12ந்தேதி ரிலீசாக இருக்கிறது.


தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கும் நாளான 12ந்தேதி ஒரு மாதத்துக்கும் மேலாக எக்சாம் டென்ஷனில் இருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாட்ச்மேன் படம் படம் ரிலாக்சாக இருக்கும்.


வாட்ச்மேன் படம் பற்றி ஜிவி.பிரகாஷ் அளித்த பேட்டி:-


விஜய் படத்தில் நடித்த அனுபவம்?


விஜய் தான் என்னை திரையில் முதன் முதலாக தோன்ற வைத்தவர். தலைவா படத்தில் தளபதியுடன் ஒரு பாடலில் ஆட வைத்தார். நாச்சியார் படத்தில் என் நடிப்பை பார்த்து தான் இந்த படத்தில் நடிக்க கேட்டார். அவர் இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாட்ச்மேன் படம் காமெடியுடன் கூடிய திரில்லர். தண்ணீர் கேன் போடும் பையனான நான் இரவில் ஒரு வீட்டுக்குள் போகிறேன். அந்த பங்களாவில் இருப்பவர்கள், நடக்கும் சம்பவங்களை கொண்டு படம் நகரும். புருனோ என்ற நாய் படம் முழுக்க வரும். அது செய்யும் சாகசங்கள் பிரமிக்க வைக்கும்.


நாயுடன் நடித்த அனுபவம்?


நாய்க்கு பயப்படும் ஒருவன் நாயுடனே இரவு முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான். அந்த நாய் அவனை காப்பாற்ற தான் முயற்சி செய்கிறது. ஆனால் அவனோ அந்த நாயை பார்த்து மிரள்கிறான். இப்படித்தான் கதை போகும். என்னை காப்பாற்ற நாய் செய்யும் செயல்களை குழந்தைகள் கைதட்டி ரசிப்பார்கள். அந்த நாயுடன் சுமார் 40 நாட்கள் நடித்தேன். நாய் குழந்தைகள் போலத் தான். அவற்றை அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. அவற்றின் போக்கில் சென்றுதான் படம் பிடிக்க வேண்டும். புருனோவை நண்பனாக்கி கொண்டேன். இருந்தாலும் சில சமயம் முறைக்கும். பயமாக இருக்கும்.


உங்கள் இசையில் பாடல்கள் இல்லாத படமா?


இது ஹாலிவுட் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படம். இதில் பாடல்கள் வைத்தால் ரசிகர்கள் இருக்கையில் நெளிய தொடங்கி விடுவார்கள். எனவே படத்தில் பாடல்கள் வைக்கவில்லை. ஒரு விளம்பர பாடல் எடுத்துள்ளோம். இதில் நான், யோகி பாபு, சாயிஷா மூவரும் நடனம் ஆடியுள்ளோம்.


எந்த மாதிரியான படத்தில் நடிக்க ஆசை?


வரலாற்று பின்னணி கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை.


பொள்ளாச்சியில் கேமராக்கள் பொருத்துவது?


இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வெளிநாடுகளில் படித்து தொழிலதிபராக இருந்தவர். வெறும் லாப நோக்கத்தோடு மட்டும் சினிமாவுக்கு வராமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று குறிக்கோள் கொண்டவர். படத்தின் விளம்பரத்துக்காக செய்யும் செலவை நல்ல நோக்கத்தோடு மக்களுக்கு பயன்படும் வகையில் செய்யவேண்டும் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. சமீபத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பொள்ளாச்சியில் இனி அதுபோன்ற சம்பவங்களோ குற்றங்களோ நடக்காத வகையில் கேமராக்கள் பொருத்துகிறார். இது மட்டும் அல்லாமல் கோடைகாலம் என்பதால் ஆங்காங்கே வெயிலில் தவிக்கும் சிறு வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் அமைப்பது, வாட்ச்மேன்களுக்கு குடை, தொப்பி வினியோகம் என்று நலத்திட்டங்களோடு சேர்ந்த விளம்பரம் செய்கிறார். அவருக்கு என் பாராட்டுகள்.


ரஜினி, விஜய், சிவகார்த்திகேயனுக்கு பிறகு குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகி விட்டீர்களே?


ஆமாம். பொது இடங்களுக்கு செல்லும்போது இதை உணர்கிறேன். குழந்தைகள் நம்மை ரசிக்கிறார்கள் என்னும்போது பத்து ஹிட் படங்கள் கொடுத்த மகிழ்ச்சி உருவாகிறது. குழந்தைகள் மட்டும் அல்லாமல் குடும்ப ரசிகர்கள் எனக்கு உருவாகி இருக்கிறார்கள். எங்க வீட்டு பையன் மாதிரியே இருக்கேப்பா... என்று சொல்லும்போது உலகிலேயே மகிழ்ச்சியான நபராக உணர்கிறேன். குழந்தைகள் மனதை கவர்வது எளிதான காரியம் அல்ல. அது குறைந்த காலகட்டத்திலேயே எனக்கு கிடைத்திருப்பது கடவுளின் வரம் தான்.
சமூகவலைதளங்களில் அதிக பாலோயர்கள் உள்ள நீங்கள் நல்ல விஷயங்களை செய்து வருகிறீர்கள்.


இதில் அடுத்த கட்டம் என்ன அரசியலா?


அடுத்த கட்டத்துக்கு எப்படி எடுத்து செல்லும் என்று தெரியவில்லை. ஆனால் என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சொல்லவேண்டியதை இன்னும் அதிகம் பேரை சென்று அடையும் வகையில் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். இதில் எந்தவிதமான எதிர்கால நோக்கமும் இல்லை. மனதுக்கு சரியென்று பட்டதை சொல்கிறேன். சொல்வேன். இந்த இடத்துக்கு செல்லவேண்டும் என்று திட்டமிட்டு எதையும் சொல்வதோ செய்வதோ இல்லை.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...