Friday 22 March 2019

‘அக்னி தேவி’ விமர்சனம்

நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், நேர்மையற்ற அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் மோதலை ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘அக்னி தேவி’ எப்படி என்பதை பார்ப்போம்.நேர்மையான போலீஸ் அதிகாரியான பாபி சிம்ஹாவை இண்டர்வியூ எடுக்க வரும் பெண் நிருபர், பேருந்து நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்படுவதோடு, அவரது அண்ணனும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை நேரடியாக பாபி சிம்ஹா விசாரிக்க, அவருக்கு மேலதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதோடு, கொலை நடந்த போது பேருந்து நிலையத்தில் இருந்த அப்பாவி ஒருவரை குற்றவாளியாக்கமுயற்சிக்கிறார்கள்.அதே சமயம், தனது விசாரணை மூலம், நடந்த கொலைகளுக்கு பின்னாள் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் பாபி சிம்ஹா, அதற்கு பின்னாடி மாநில அமைச்சரான மதுபாலாவும், அவருக்கு துணையாக காவல் துறையும் இருப்பதை கண்டுபிடிக்கிறார். மதுபாலாவும் தனது வழியில் குறுக்கிடம் பாபி சிம்ஹாவுக்கு கட்டம் கட்ட, நேரடியாக மோதும் இவர்களில், யார் இறுதியில் வெற்றி பெற்றார்கள் என்பது தான் ‘அக்னி தேவி’ யின் முழுக்கதை.ராஜேஷ்குமார் நாவலை மையமாக வைத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஸ்வாதி கொலையை களமாக்கி அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையும், பணம் மதிப்பிழக்கம், கருப்பு பணம் பதுக்கல், அரசியல் பினாமிகள் என சமீபத்திய அரசியல் நிகழ்வுகளையும் சேர்த்து சொல்லப்பட்டிருப்பது படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.இந்த படத்தில் நான்கு நாட்கள் மட்டுமே நடித்தேன், என்று பாபி சிம்ஹா கூறியிருக்கிறார். ஆனால், படம் முழுவதுமே அவர் வருகிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும் டூப் போட்டு எடுத்திருக்கிறார்கள். நேர்மையான போலீஸ் வேடத்தில் கம்பீரமாக நடித்திருக்கும் பாபி சிம்ஹா, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அதே சமயம், அடக்கி வாசிக்க வேண்டிய இடத்தில் அடக்கியும் வாசித்திருக்கிறார். மொத்தத்தில், தனது வேலையை நூறு சதவீதம் சரியாக செய்திருக்கிறார்.வில்லியாக நடித்திருக்கும் மதுபாலாவின் கதாபாத்திரமும், அவரது கெட்டப்பும் தமிழக அரசியலில் சின்ன ராணியாக வலம் வந்த பெண்மணி ஒருவரை நினைவுப்படுத்துகிறது. ஆரம்ப காட்சியில் ஆக்ரோஷமாகவும், அமர்க்களமாகவும் எண்ட்ரிகொடுக்கும் மதுபாலா, அடுத்தடுத்த காட்சிகளில் தனது ஓவர் ஆக்டிங் நடிப்பால், அந்த கதாபாத்திரத்தையே சிதைத்து விடுகிறார். அதிலும், அவரது உடலில் இருக்கும் குறைபாடுகள் தேவையா? என கேள்வி எழுப்பும் வகையில், ஒட்டாமல் போகிறது.


எம்.எஸ்.பாஸ்கார், ரம்யா நம்பீசன், சதீஷ், லிவிங்ஸ்டன் என்று பிற நடிகர்கள் படத்தில் இருந்தாலும், சதீஷ் மட்டுமே அதிகமான காட்சிகளில் வருகிறார். ரம்யா நம்பீசன் எதற்கு இந்த படத்தில் நடித்தாரோ, அம்மணிக்கு சுத்தமாக வேலை இல்லை.படத்தின் ஓட்டத்திற்கு பாடல் தேவை இல்லை என்பதால், படத்தில் பாடல்கள் வைக்கவில்லை. அதனால், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பீஜாய், பின்னணி இசைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அது படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறது. ஜனாவின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அமர்க்களமாக உள்ளது.படத்தின் முதல் பாதி, தொடங்கியதும் முடிந்ததும் தெரியாதபடி படு வேகமாக நகர்கிறது. பேருந்து நிலையத்தில் பெண் கொலை, அதனை விசாரிக்க பாபி சிம்ஹா களத்தில் இறங்கியவுடன், விறுவிறுப்பாக நகரும் படம், ரசிகர்களிடமும் விறுவிறுப்பை தொற்றிக் கொள்ள செய்கிறது.நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த ஸ்வாதி கொலை வழக்கில், கைதாகி சிறையில் தற்கொலை செய்துக் கொண்ட ராம்குமார் உண்மையான குற்றவாளி அல்ல என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதோடு, தமிழகத்தில் சிக்கிய இரண்டு கண்டெய்னர் பணம், அரசியல் கலவரம் என பல நிஜ சம்பவங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து இயக்குநர் கதை சொல்லிய விதம் இண்டர்ஸ்டிங்காக இருக்கிறது.“என் வீல்சேர் டயர நக்கிட்டு இருந்தா இருங்க, இல்லாட்டி...” என்று மதுபாலா பேசும் வசனங்களும், பண மதிப்பிழக்கம் தொடர்பாக எம்.எஸ்.பாஸ்கர் பேசும் வசனங்கள் மூலமாக வசனகர்த்தா கருந்தேல் ராஜேஷ் கைதட்டல் பெறுகிறார்.ஆக்‌ஷன் திரில்லர் படத்தை சுவாரஸ்யமான அரசியல் பின்னணியோடு இயக்குநர்கள் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா நேர்த்தியாக சொன்னாலும், கமிஷ்னர், அமைச்சர் ஆகியோர் சொல்லியும் கேட்காமல் பாபி சிம்ஹா, தொடர்ந்து தனது வேலையை செய்வது, போன்ற விஷயங்கள் லாஜிக் மீறல்களாக இருப்பதால், படம் ரசிகர்கள் மனதில் நிற்காமல் போகிறது. அதிலும், படம் முடியும் தருவாயில், பாபி சிம்ஹாவுக்கும், மதுபாலாவுக்கும் ஒரு உறவு முறையை சொல்லியிருப்பது நம்மை 80 களுக்கு அழைத்து சென்றுவிடுகிறது.சமகால அரசியல் நிகழ்வுகள், மத்திய அரசு திட்டத்தின் மீதான விமர்சனம் என்று பல விஷயங்களை தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர், இறுதியில் இவை அனைத்துக்கும் கலவரம் தான் காரணம், என்று சொல்லியிருப்பது, ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும், எதிர்ப்பார்ப்பும், இரண்டாம் பாதியில் இல்லாமல் போவதும், மதுபாலாவின் ஓவர் ஆக்டிங்கை கட்டுப்படுத்த தவறியதும் படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்திருக்கிறது. இது போன்ற சிறு சிறு தவறுகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், அக்னி தேவி விறுவிறுப்பான அரசியல் ஆக்‌ஷன் திரில்லர் படமாகவே உள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...