Friday 3 August 2018

’கடிகார மனிதர்கள்’ விமர்சனம்

கிஷோர் நடிப்பில் அடித்தட்டு மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக வெளியாகியிருக்கும் இந்த ‘கடிகார மனிதர்கள்’ எப்படி என்பதை பார்ப்போம்.வாழ்க்கையை தேடி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருபவர்கள், வாடகை வீடு என்ற நரகத்தில் சிறிது காலமாவது சிக்கி தவிக்காமல் இருக்க மாட்டார்கள். இந்தகைய நரக வேதனையில் சிக்கி சின்னா பின்னமாகும் வாடகை வீட்டு வாசிகள் ஒரு விதத்தில் உள்நாட்டிலேயே அகதிகள் என்று சொல்லும் அளவுக்கு நிரந்தரமாக ஒரு இடத்தில் இருக்க முடியாமல், வீடு வீடாக மாறுவதோடு, சில வீட்டு உரிமையாளர்களிடம் எப்படி அடிமைகளைப் போல இருக்கிறார்கள், என்பதை எதார்த்தமாக சொல்வது தான் ‘கடிகார மனிதர்கள்’ படத்தின் கதை.மனைவி, மூன்று பிள்ளைகளோடு, வீட்டு சாமானையும் வைத்துக் கொண்டு வாடகைக்கு வீடு தேடி அலையும் கிஷோருக்கு, பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ஒரு இடத்தில் வீடு ஒன்று கிடைத்தாலும், நான்கு பேர் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்படுகிறது. நான்கு பேருக்கு மேல் ஆள் இருப்பவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பதில்லை என்று வீட்டு உரிமையாளர் கராராக சொல்லிவிட, வேறு வழி இல்லாமல், தனது ஒரு பிள்ளையை மறைத்து, இரண்டு பிள்ளைகள் இருப்பதாக பொய் சொல்லி கிஷோர் அந்த வீட்டில் குடியேறுகிறார். தனது மூன்றாவது பிள்ளை இருப்பதை வீட்டு உரிமையாளரிடம் மட்டும் இன்றி, தனது காம்பவுண்ட்டில் இருப்பவர்கள் அனைவரிடமும் மறைத்து, பிள்ளையை மறைமுமகாக பள்ளிக்கு அழைத்து செல்வது, அழைத்து வருவது, அனைவரும் எழுந்திருப்பதற்கு முன்பாக அவனை குளிக்க வைத்து பள்ளிக்கு தயார் படுத்துவது என்று ஒரு புறம் பதுங்கு குழி வாழ்க்கை நடத்தும் கிஷோர், மறுபுறம் சரியான வருமானம் இல்லாமல் கஷ்ட்டப்பட்டாலும் இறப்பதற்கு முன்பாக சொந்த வீடு வாங்கிட வேண்டும் என்ற கனவோடு பயணிக்க, அவரது கனவு நிறைவேறியதா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.இதற்கு நடுவே கருணாகரனின் காதல் போராட்டம், சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தவரின் வாழ்க்கை என்று வாடகை வீடுகளில் வசிக்கும் பலவித மனிதர்களின் பலவித கஷ்ட்டங்களை ஒட்டு மொத்தமாக கொட்டி தீர்த்திருக்கிறார் இயக்குநர் வைகறை பாலன்.


தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் கிஷோர், வாடகை வீடு தேடி அலையும்போதே பெரிய அளவில் சிம்பத்தியை கிரியேட் செய்துவிடுபவர், தனது பிள்ளையை மறைத்து மறைத்து வாடகை வீட்டில் வளர்ப்பதும், அதனால் அவ்வபோது சில பிரச்சினைகளை சந்திப்பதும் என்று இயக்குநர் சொல்ல வந்ததை தனது கதாபாத்திரம் மூலம் ரொம்ப அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார்.மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாக கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக நடித்திருக்கும் லதா ராவுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை என்றாலும் கதாபாத்திரமாக கவர்கிறார். கருணாகரன் காமெடி நடிகராக அல்லாமல் குணச்சித்திர வேடமாக படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் பாலாசிங்கின் கராரான நடிப்பு டெரராக இருக்கிறது.உமா சங்கரின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்-ன் இசையும் திரைக்கதை ஏற்படுத்த நினைக்கும் தாக்கத்தை பலமாகவே ஏற்படுத்திவிடுகிறது.பிழைப்பதற்காக சென்னைக்கு வருபவர்கள் சொற்ப ஊதியத்தில் வாழ்க்கை நடத்த, அந்த சொற்ப வருமானம் வீட்டு வாடகை என்ற ஒன்றுக்கே போய்விடுவதால், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் படத்தின் க்ளைமாக்ஸை சற்று பாசிட்டிவாக முடித்திருக்கலாம், ஆனால் தியேட்டரை விட்டு வெளியே போகிறவர்கள் கனத்த இதயத்தோடு செல்ல வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் க்ளைமாக்ஸை சோகமயமாக்கியிருக்கிறார்.என்னதான் காமெடி, திகில் படங்கள் பல வெளியானாலும், இதுபோன்ற எதார்த்தமான மனிதர்களின் வாழ்வியலை சொல்லும் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. அவர்களுக்கான ஒரு படமாக மட்டும் இன்றி, ஒட்டு மொத்த மக்களுக்குமான படமாக இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் வைகறை பாலன் கையாண்டுள்ளார்.மொத்தத்தில், இந்த ‘கடிகார மனிதர்கள்’ எதிர்கொள்ளும் அனுபவத்தை பலர் கடந்து வந்திருந்தாலும், இப்படிப்பட்ட ஒரு வாழ்வியல் இருக்கிறது என்பதை அறியாமல், சொந்த ஊரை விட்டு கிளம்புகிறவர்களுக்கு, இப்படம் ஒரு பாடமாக இருப்பதோடு, ரசிகர்கள் பார்க்க வேண்டிய படமாகவும் இருக்கிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...