Monday 23 July 2018

‘புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள்’ - பிறந்தநாள் வாழ்த்துகள், சூர்யா - சூர்யா எனும் சாமானியன்

ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா


வாழ்க்கையை புதிய அனுபவங்கள்தான் மேம்படுத்தும். எப்போதும் புதுப்புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள் என்று நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் முன் தெரிவித்தார்.


‘‘நாம குழந்தையாக இருக்கும்போது முதன் முதல்ல சைக்கிள் வேணும்னு ஆசைப்படுவோம். அடுத்து கொஞ்சம் வளர்ந்ததும் பைக் வேணும்னு அப்பாகிட்ட அடம்பிடிப்போம். அதுவும் எந்த மாதிரி பைக்னுகூட ஒரு ஐடியாவோட சுத்துவோம். அடுத்து கார். இப்படி வாழ்க்கையில புதுசு புதுசுன்னு எப்பவும் ஒரு உற்சாகம் இருந்துகொண்டே இருக்கும். அது அப்படியே கல்லூரி, வேலை, திருமணம்னு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துக்கிட்டே இருக்கும். இந்தமாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்துல ஒவ்வொரு ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வம் இப்போ நிறைய பேருக்கு குறையுதோன்னு தோணுது. லைஃப்ல ‘இது போதும்டா’னு சிலர் நினைக்கிறாங்க. ஈஸியா சலிப்படையவும் செய்றாங்க.


எப்பவுமே ஒரு புது அனுபவம் வைத்துக்கோங்க. நம்ம செய்ற வேலையில நாம தான் பெஸ்ட்டா இருக்கணும்னு மனசுல ஆழமா நினைங்க. என்னென்ன விஷயங்கள் கற்றுக்கொண்டே இருக்க முடியுமோ கத்துக்கிட்டே இருங்க. லைஃப்ல ஒரு விஷயம் மட்டும் போதும்னு இங்கே இல்லை.


இப்போ எல்லாம் சந்தோஷம் ரொம்ப முக்கியம். கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிடுகிறது. எதுக்காகவோ அந்த சந்தோஷத்தை நாம விட்டுடுறோம். எந்த காரணத்துக்காகவும் அதை இழக்கக்கூடாது. சந்தோஷம் என்பது சுலபமான விஷயம் அல்ல. வீடு, பணம் மட்டுமே சந்தோஷத்தை கொடுத்துடாது. மனதை எப்பவும் சந்தோஷமா வைத்துக்கொள்வதே ஒரு கலை.


நிறைய படித்து, அறிவாளியா இருக்குற ஒருவர் எப்பவும் உர்ர்ர்னு யார்கிட்டயும் எதுவும் பேசாம இருந்தா அவரை யாரும் சீண்டக்கூட மாட்டாங்க. அதுவே எப்பவும் சிரிச்சிக்கிட்டே மகிழ்ச்சியாக இருக்குறவங்கக்கிட்ட காரணமே இல்லாம அவங்களை சுத்தி நிறைய பேர் சூழ்ந்திடுவாங்க. நாம வேலை செய்ற இடத்துல தொடங்கி எல்லா இடங்கள்லயும் சந்தோஷத்தை காட்டுறது ரொம்ப முக்கியம்.


யாரோடயும் யாரும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம். அது தேவையில்லாம மன உளைச்சலை கொடுக்கும். நம்ம வாழ்க்கை நம்ம ஓட்டம்னு இருக்கணும். நம்ம வேலை நமக்கு பெஸ்ட்னு இருக்கணும். அதுல என்ன புது அனுபவம் கிடைத்ததுன்னு பார்க்கணும். எதிலும் தனித்து நிற்கணும். இங்கே போதும்னு லைஃப் கிடையாது.


ரசிகர்கள் என் மேல் எவ்வளவு அக்கறை வைத்திருக்கீங்களோ அதே அளவுக்கு எனக்கும் உங்க மீது அக்கறை உண்டு. வயசு போய்க்கிட்டே இருக்கும். அதுக்குள்ள நல்ல உயரத்தை தொடணும். உடல் உறுப்பு தானம், ரத்த தானம்னு செய்ற என் ரசிகர்கள் ஒவ்வொருவரும் யாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது. இருக்க மாட்டீங்க. நல்ல பழக்கங்களை கடைபிடிங்க. மற்ற எல்லாத்தையும்விட முதல்ல குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்’’


இவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.


சூர்யா எனும் சாமானியன்

நடிகர் சூர்யாவுக்கு இன்று (ஜூலை 23) பிறந்தநாள். இந்திய திரையுலகில் பிரதானமாக உள்ள தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டு பெரும் வசூல் வேட்டை நாயகனாக ஓடிக்கொண்டிருப்பவர் நம் சூப்பர் ஹீரோ சூர்யா.  

தமிழ் சினிமாவில் எப்படி பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வலம் வருகிறாரோ அதற்கு சற்றும் குறையாமல் தெலுங்கில் இவரது படம் ரிலீஸ் என்றால் அங்கும் திருவிழாதான்.

புகைப்பிடிக்கும் காட்சிகள் சூர்யாவின் ஆரம்ப கால கட்ட சினிமாக்கள் சிலவற்றில் மட்டுமே பார்க்க முடியும். தனது மார்க்கெட் வேல்யூ உயர உயர தனக்கான ரசிகர்கள் பட்டாளம் சூழச் சூழ புகை பிடிக்கும் காட்சிகளுக்கு நடிகர் சூர்யா முற்றிலுமான முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டிருப்பவர்.

தமிழ் சினிமாவில் தான் பிரம்மாண்ட உயரத்துக்கு வளர்ந்த பிறகும் கதை கேட்பதில் தொடங்கி படப்பிடிப்புக்கு வந்து செல்வது வரைக்கும் அப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளரின் நாயகனாக இருந்து வருகிறார். அதேபோல, படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பி அணுகும்போது அவர்களை கைக்குளுக்கி வரவேற்று கொஞ்சமும் முகம் சுழிக்காமல் அவர்களுக்கு நேரம் ஒதுக்கும் எளிமையான கலைஞன். தேடி வரும் ரசிகர்கள் பட்டாளத்தில் பெண்கள் இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை விசாரித்து வழி அனுப்பும் அக்கரை மனிதன்.

படப்பிடிப்பு இருக்கும் தேதிகளில் நடிகர் சூர்யா எந்த ஒரு நிகழ்ச்சியும் ஒப்புக்கொள்வதில்லை. தன்னால் படம் தயாரிக்கும்  ஒரு தயாரிப்பாளர் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என அப்பா சிவக்குமார் சொன்ன வார்த்தைதான் அதற்கு காரணம். இதை சூர்யாவின் அன்புத் தம்பி நடிகர் கார்த்தியும் ஃபாலோ செய்துவருகிறார்.

ரசிகர்கள் மீதான அக்கறை!

தனக்கு ரசிகனாக இருப்பவர்கள் குடும்பத்துக்கு பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும்  என்பது சூர்யாவின் அலாதியான விருப்பம்.  ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கோ அல்லது   பொது நிகழ்ச்சிக்குச் சென்றாலும், ‘இளைஞர்கள் முதலில் குடும்பத்தை கவனியுங்கள். அப்பா, அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று பேசாமல் மேடை இறங்கவே மாட்டார். சமீபத்தில் கூட தான் காரில் செல்லும்போது தன்னை  பைக்கில் பின் தொடர்ந்து  ஒரு ரசிகன் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்ததும் காரை நிறுத்தி, ‘எதற்காக இப்படி ஒரு அபாயப் பயணம். நடிப்பது என் தொழில். அதேபோல உன் குடும்பத்துக்காக நீயும் உழைக்கணும். வீட்டுக்கு திரும்புங்க’ என பேசி அனுப்பி வைத்தபோது அந்த ரசிகனின் மனதில் ஆனந்தம் பூத்தது.  அதேமாதிரி தான்  காரில் வரும் வழியில் ஒரு பெண்ணிடம் கலாட்டா  செய்துகொண்டிருந்த சிலரை பார்த்து பெரும் கோபம் கொண்ட சூர்யா காரை விட்டு இறங்கி அவர்களை பேசிப்பார்த்து பின் முடியாமல் அடிக்கவும் செய்தவர். பெண்களை கவனமாக பார்த்துக்கொள்வது நம் கடமை.

பொது விஷயங்களிலும், மக்கள் சார்ந்த நிகழ்வுகளிலும் தன்னை ஒரு சாமானியனாக அடையாளப்படுத்திக் கொள்வதையே பின்பற்றுகிறவர்.  ‘கேரிங்’ என ஆங்கிலத்தில் சொல்வோமே நடிகர்களில் அதுவும் முன்னணி நடிகர்களில் மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர்  சூர்யா.  

 மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டும் அகரம்

கல்வியில் புதிய புரட்சிக்கு வித்திடும் விதமாக படிப்பு ஒரு எட்ட முடியாத உயரம் என நினைத்து ஏங்கும் திறமைமிகு மாணவ, மாணவிகளுக்காக சூர்யா உருவாக்கிய அமைப்புதான்  ‘அகரம் அறக்கட்டளை’. இந்த அமைப்பு வழியே பயிலும் ஒவ்வொரு மாணவர்களின் கல்வி, வளர்ச்சி, அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை கவனிக்க தனது அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு தனி நபரை அமைத்து மாணவர்களை வழி நடத்துகிறார், சூர்யா.   ஒவ்வொரு ஆண்டு தேர்வு முடிவு வரும்போது மாவட்டம் தோறும் தன் அகரம் ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வளர்களை அந்தந்த பகுதிகளுக்கே அனுப்பி திறமையான, அதே நேரத்தில் அவர்களால் படிக்க முடியாத சூழல் இருக்கிறது என்று தெரிந்து உடனே அவர்களை கண்டுபிடித்து படிக்க வைக்கும் செயலை முழு மூச்சாக எடுத்து செய்துகொண்டிருக்கும் ஒரு கல்வியாளன் சூர்யா.

 கடந்த ஆண்டு ப்ளஸ் - டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி படிப்பைத் தொடராமல் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். தனது அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வளர்கள் மூலம் இந்த தகவல் தன் கவனத்துக்கு வந்ததும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற தேடலில் இறங்கினார். எவ்வளவு முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த பகுதி மெடிக்கல் ஷாப் ஒன்றிற்கு வந்து அவ்வபோது யாரிடமோ போனில் பேசிவிட்டு செல்லும் தகவல் கிடைத்திருக்கிறது. ஒரு மாதம் அந்த கடைக்கு வருகிறாரா என பின் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அவரை கண்டுபிடித்திருக்கிறார். ஏன் படிக்கவில்லை என்று அந்த மாணவியிடம் கேட்டபோது ‘படிப்பு போதும். வேலைக்கு போ’ என அவரது சித்தி சொல்லி அனுப்பிய தகவல் தெரியவந்தது. உடனே அவர்களிடம் பேசி அந்த மாணவியை படிக்க ஏற்பாடு செய்தார்.  இப்படி மாணவ, மாணவிகளின் கல்வியை கூர்மையுடன் கவனித்து அவர்களின் எதிர்காலம் எந்த வகையிலும் பின்னுக்கு சென்றுவிடக்கூடாது என்கிற அக்கறையை எப்படி பாராட்டினாலும் தகும்.  

 விளம்பர படங்களில் நடிப்பது ஏன்?

‘முன்னணி நடிகர்கள் சிலர் விளம்பரப் படங்களில் கவனம் செலுத்துவதில்லை. அவ்வபோது சூர்யாவை விளம்பரப்படங்களில் பார்க்க முடிகிறதே?’ என பலரும் கேட்கிறார்கள். தான் விளம்பர படங்களில் நடித்து கிடைக்கும் கடைசி ஒரு ரூபாய் வரைக்கும் தனது  ‘அகரம் ஃபவுண்டேஷன்’ நிறுவனக் குழந்தைகளின் கல்வி பயனுக்காகவே செலவிடுகிறார். அதற்காக மட்டுமே விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.     


நல்ல படங்களுக்கான தயாரிப்பாளன்


நடிகர் சூர்யா தனது பிள்ளைகள் தியா, தேவ் பெயரில் தொடங்கப்பட்ட 2டி தயாரிப்பு நிறுவனம் வழியே அனைவரும் விரும்பும் நல்ல படங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் சமசரம் செய்துகொள்ளாதவர்.  அது குறித்து நிகழ்ச்சிகளில் பேசும்போதுகூட, ‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் கூடி அமர்ந்து கொண்டாடும் படங்களுக்கான களமே 2டி நிறுவனம்’ என்பார்.   தான் நடிக்கும் சினிமாவை  தேர்வு செய்வதில் எப்படி கவனம் செலுத்தி வருகிறாரோ அந்த அளவுக்கு தான் தயாரிக்கும் சினிமாவிலும் பெருத்த கவனம் செலுத்துபவர். தான் தயாரித்த முதல் படமான ‘பசங்க 2’ தொடங்கி தற்போது வெளிவந்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ வரைக்கும் அவரது தேர்வு ரசிக்கும் படியாகவே இருக்கிறது. 


உறவுகளைக் கொண்டாடும் குடும்பத் தலைவன்


’லட்சுமி இல்லம்’ என தனது அம்மா பெயரில் ஒரு அன்பு மாளிகையை உருவாக்கி அதில் தன் அப்பா, அம்மா, தம்பி  கார்த்தி குடும்பம், தன் குடும்பம் என எல்லோரையும் ஒரே இடத்தில் வசிக்கும் சூழலை உருவாக்கியிருப்பவர் சூர்யா. இன்றைக்கும் அவரது கூட்டுக் குடும்ப நேசத்தை வீட்டு விஷேசங்களுக்கு வரும் நெருக்கமான உறவினர்கள், ’‘மனைவியை கவனிச்சிருக்குறதுல நம்ம சூர்யா மாதிரி இருக்கணும்!’’னு எல்லோரும் சொல்வது வழக்கம். அதை எப்போதும் நிருபித்துக்கொண்டே இருப்பவர் அவர். அப்பா சிவக்குமார் மீதும், அம்மா லட்சுமி மீதும் அளவற்ற பாசம் வைத்திருக்கும் மகன் சூர்யா, பெற்றோர்களை இந்தியாவில் ஒரு இடம் விடாமல் சுற்றுலா அழைத்துப்போவதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தால் ஒரு மகனாக, ஒரு கணவனாக, பிள்ளைகளுக்கு அப்பாவாக பார்க்க முடியுமே தவிர நடிகனாக பார்க்கவே முடியாதவர். தன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஒரு நிகழ்ச்சி என்றால் தவறாமல் கலந்துகொள்ளும் ஒரு தந்தைக்கு உரிய பொறுப்பை எப்போதும் தவறாதவர்.

திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த மனைவி ஜோதிகா,  ‘குழந்தைகள் வளர்ந்துட்டாங்க. இனி சினிமாவில் நடிக்கலாமே?’ என அவர் நினைத்தபோது கொஞ்சமும் அதற்கு மறுப்பில்லாமல், அவரது திறமைக்கு எந்த வகையிலும் இடையூறாக இருந்துவிடக்கூடாது என ஊக்குவித்ததோடு நடிக்க அனுமதித்து உத்தம புருஷன் என்று பெயரெடுத்திருக்கிறார், சூர்யா. 

 தன்னை எப்போதும் ஒரு ஸ்டார் என ஒரு வட்டத்துக்குள் வைத்துக்கொள்ள விரும்பாத மனிதர். யாரும், எந்த நேரத்திலும் எளிதாக அணுகக்கூடியவராக இருப்பது ஒன்றே அவரது எதார்த்த உள்ளத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. சினிமா குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கல்யாண நிகழ்வுக்கு அழைக்கும்போது ஊரில் இருந்தால் கண்டிப்பாக போய் வருவதையும் அல்லது தம்பியையோ, அப்பாவையோ போய் அனுப்பி வைப்பதை கடமையாக நினைத்து செய்து வருகிறார். அந்த குணம்தான் சிறு வயதில் ஒரு  ஃபேக்ட்ரிக்கு வேலைக்கு போன ஒருவரை இன்று காலம் ஒரு பெரும்  ஃபேக்ட்ரியை உருவாக்கியுள்ள மாமனிதனாக உயர்த்தியிருக்கிறது என்றால் அதுதான் நிஜம். இப்படி ஒரு நடிகனாக, தயாரிப்பாளராக, சமூக சிந்தனையாளனாக, குடும்பத் தலைவனாக எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாகத்தான் இருந்து வருகிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...