Friday 13 July 2018

’தமிழ்ப் படம் 2’ விமர்சனம்

ஹிட் படங்களை கேலி செய்யும் விதத்தில் உருவாகி வெற்றிப் பெற்ற ‘தமிழ்ப் படம்’ படத்தின் இரண்டாம் பாகமாக, நடிகர்களையும், அரசியல் தலைவர்களையும் கேலி செய்யும் விதமாக உருவாகியுள்ள ‘தமிழ்ப் படம் 2’ எப்படி என்பதை பார்ப்போம்.


பி என்ற பயங்கரமான தீவிரவாதியை பிடிக்க முயற்சிக்கும் காவல் துறை அதிகாரி சிவா, பல விதமான பிரச்சினைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு, இறுதியில் அந்த பி யை அவர் எப்படி சாய்க்கிறார் என்பது தான் ‘தமிழ்ப் படம் 2’ படத்தின் கதை.இந்த கதையை வைத்துக் கொண்டு தமிழில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படங்கள், பெரிய பெரிய நடிகர்கள் மட்டும் அல்லாமல் தற்போதைய அரசியலில் காமெடியர்களாகப் பார்க்கப்படும் சில அரசியல் தலைவர்களையும் லைட்டாக கலாய்த்திருக்கிறார்கள்.


தமிழ்ப் படம் படத்தின் முதல் பாகம் பெற்ற வெற்றியாலும், தினமும் வெளியிடப்பட்ட போஸ்டர்களினாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குநர் சி.எஸ்.அமுதன், அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் படத்தை கையாளாமல் போனது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.


படத்தின் ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் சிரிக்கும் ரசிகர்கள் அடுத்தடுத்த காட்சிகளில் தூங்குகிறார்களா அல்லது தியேட்டரை விட்டே போய் விட்டார்களா, என்று நினைக்கும் அளவுக்கு திரையரங்கமே ரொம்ப அமைதியாகிவிடுகிறது. அதிலும் இரண்டாம் பாதி படம், “ஐய்யயோ... விடுங்கப்பா... போதும்...” என்று நம்மை கதற வைக்கிறது.பொதுவாக ஒரு விஷயத்தை கிண்டல் செய்வது என்பது எளிது என்றாலும், அதை கையாளும் விதத்தில் தான் பிறரை சிரிக்க வைக்க முடியும். அந்த வகையில் சிவாவின் டயலாக் டெலிவரி ரசிகர்களை ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே உண்மை. முதல் பாகத்தில் சிவா மட்டும் தனியாக கலக்க, அவரது நண்பர்கள் வேடத்தில் நடித்த வெண்ணிறாடை மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்களின் வேடமும் போனசாக நம்மை சிரிக்க வைத்தது. ஆனால், இந்த படத்தில் அப்படியான எந்த விஷயங்களும் இல்லாமல் போனது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.காமெடி என்ற பெயரில் சமீபத்திய படங்களில் கடுப்பேற்றி வரும் சதீஷ், இந்த படத்தில் கடுப்போ கடுப்பேற்றுகிறார். சிவா கூட சில இடங்களில் தனது டயலாக் டெலிவரி மூலம் சிரிக்க வைக்க முயற்சித்தாலும், சதீஷ் அப்படியான எந்த வேலையிலும் ஈடுபடாமல் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை மட்டுமே செய்துவிட்டு போகிறார்.ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன், நேராக பார்த்தாலும் சரி, சைட்ல பார்த்தாலும் சரி, எந்த கோணத்திலும் ஹீரோயினாக மட்டும் தெரியாததோடு, இந்த படத்தில் அவங்களுக்கு பெருஷா வேலையும் இல்லை.


துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்வது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டதும், தற்போதைய அரசியல் சூழலை வெச்சு செய்ய போறங்க, என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன், அரசியல் நையாண்டி என்ற ஒன்றை கொஞ்சம் கூட இந்த படத்தில் பயன்படுத்தவும் இல்லை, அது குறித்து பேசவும் இல்லை. ரஜினிகாந்தை அதிகமாக கலாய்த்திருப்பவர், ஒரு பாடலில் சிம்பு, விஷால், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் பேட்டியில் பேசியதை ஒரு பாடலாக கொடுத்திருக்கிறார்.கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், என்.கண்ணனின் இசையும் காமெடி படம் என்று பார்க்காமல் தங்களது பணியை திறம்பட செய்திருக்கிறார்கள். கண்ணனின் இசையில் மெட்டுக்கள் அனைத்தும் ரொம்பவே மென்மையாக இருக்கிறது.நடிகர்கள், டெக்னீஷீயன்கள், கான்சப்ட் என்று முதல் பாகத்திற்கும் இந்த பாகத்திற்கும் எந்தவித வித்தியாசத்தையும் கையாளத இயக்குநர் படத்தின் மீது எப்படி எல்லாம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு திரைக்கதையிலும், காட்சிகளிலும் பெரிதாக கோட்டை விட்டிருக்கிறார்.மற்ற படங்களை கலாய்க்குறேன் என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த படத்தையே பெரிய அளவில் கலாய்க்கலாம் போல, அந்த அளவுக்கு திரைக்கதையும், காட்சிகளும் குழம்பிய குட்டை போல இருக்க, கஸ்தூரியின் ஐட்டம் பாடலை வைத்து நம்மை கூடுதலாக கொல்லுறாங்க. (அந்தம்மா டிவிட்டர்ல கொல்றதே போதாதா!)”அப்படா..படம் முடியப் போகுது”, என்று ரசிகர்கள் பெருமூச்சு விடும் போது, அங்கே இருந்து இன்னோரு கதையுடனும் சில காட்சிகளுடனும் பாகுபலி படத்தை கலாய்த்து, சிரிக்க வைக்குறோம் என்ற பேரில் நம்மை அறுக்கும் இயக்குநர் மீது நமக்கு கொலைவெறியே ஏற்பட்டு விடுகிறது.மொத்தத்தில், போஸ்டர் மூலம் நாட்டு வெடியாக வெடித்த ;தமிழ்ப் படம் 2’ திரைப்படமாக புஸ்பானமாகிவிட்டது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...