Saturday 23 June 2018

‘டிக் டிக் டிக்’ விமர்சனம்

'கிராவிட்டி', 'இன்டர்ஸ்டெல்லார்' போன்ற ஹாலிவுட் விண்வெளிப் படங்களைப் பார்த்து பிரம்மித்துப் போன தமிழ் ரசிகர்களுக்காக உள்ளூரில் உருவாக்கப்பட்ட விண்வெளிப்படமான இந்த ‘டிக் டிக் டிக்’ அதே பிரமிப்பை கொடுத்ததா இல்லையா, என்பதை பார்ப்போம்.பூமியை நோக்கி வரும் பெரிய விண்கல் ஒன்று வங்காள விரிகுடாவில் விழப்போவதையும், அந்த கல் விழுவதால் ஏற்படும் சுனாமி மற்றும் நில அதிர்வால் தமிழகம் மட்டும் இன்றி, அதன் அண்டை மாநிலங்களும் அழிந்துவிடும் அபாயம் இருப்பதையும் விஞ்ஞானிகள் குழு கணிக்கிறது. விண்ணில் வைத்தே அந்த கல்லை வெடிக்க வைத்தால் மட்டுமே இந்த பேராபத்தில் இருந்து தப்பிக்க முடியும், என்ற முடிவுக்கு வரும் இந்திய ராணுவம், அதற்கான வெடி மருந்தை தேடும் போது, ஒரே ஒரு நாடு மட்டும் அந்த வெடி மருந்தை சட்ட விரோதமாக ஸ்பேஷில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வருகிறது. நியாயமாக கேட்டால் கிடைத்தாது என்பதால், குறுக்கு வழில் சென்று அந்த வெடி மருந்தை கைப்பற்றி விண்கல்லை வெடிக்க வைக்கும் திட்டம் போடும் ராணுவ துறை, அதற்கான பணியில் ஜெயம் ரவி மற்றும் அவரது நண்பர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு விண்ணில் பறக்க, கல்லை வெற்றிகரமாக உடைத்து ஆபத்தை தடுத்தார்களா இல்லையா, என்பது தான் ‘டிக் டிக் டிக்’ படத்தின் கதை.கிராவிட்டி போன்ற படத்தை பார்த்து ரசிகர்கள் பிரமித்தார்கள் என்றால், இப்படத்தின் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன், அப்படி ஒரு படத்தை நாம் எடுக்கவில்லை என்றாலும், அதுபோன்ற ஒரு படத்தை எடுக்கலாம் என்ற முயற்சியில் இறங்கியதற்காகவே அவரை ஒரு முறை பாராட்டி விடலாம்.விஜயகாந்த் தனி ஒருவராக பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடுவதை எப்படி ரசிகர்கள் கலாய்ப்பார்களோ, அதுபோல தான், இந்த படத்தின் லாஜிக்குகள் இருக்கின்றன என்றாலும், படத்தை காப்பாற்றியிருப்பது கிராபிக்ஸ் மற்றும் ஸ்பேஷ் செட்டும் தான்.ஆட்டம், பாட்டம் என்று வலம் வரும் ஜெயம் ரவி, நடிப்பில் ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார். படத்தின் சீரியஸ்னஸ் புரிந்து தனது கதாபாத்திரத்தை கையாண்ட ஜெயம் ரவி, மகன் விஷயத்தில் மட்டும் லைட்டாக புன்னகைக்கிக்கிறார். மற்றபடி ரொம்பவே கொய்ட்டான நடிப்பால் குட் வாங்கிவிடுகிறார்.கமர்ஷியல் கதாநாயகியான நிவேதா பெத்துராஜுக்கு கம்பீரமான ராணுவ அதிகாரி வேடம். ஆரம்பத்தில் ஒட்டாமல் போனாலும், ஸ்பேஷ் புறப்பட்டு செல்ல செல்ல இவரும் கதாபாத்திரத்திற்குள் புகுந்துவிடுகிறார்.அர்ஜுனன் மற்றும் ரமேஷ் திலக், இருவரது காமெடியும் காட்சிகளுடன் தொடர்பு படுத்தியே நகர்வதால் நம்மை எந்தவிதத்திலும் கடுப்பேற்றவில்லை. அதே சமயத்தில் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடிக்கும் ஜெயபிரகாஷுக்கு கொஞ்சமான வேலையை மட்டுமே கொடுத்தது மட்டும் இல்லாமல், அவரது வேடத்தை கெடுத்தும் இருக்கிறார்கள்.டி.இமானின் இசையில் பாடல்களை திரும்ப திரும்ப கேட்க முடிவது போல, பின்னணி இசையையும் ரசிக்க முடிகிறது. ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷின் லைட்டிங்கும், காட்சிகளை கையாண்ட விதமும் படத்திற்கு மட்டும் பலம் சேர்க்கவில்லை, கிராபிக்ஸ் பணிகள் சிறப்பாக வருவதற்கும் பெரிய சப்போர்ட்டாக இருந்திருக்கிறது. கலை இயக்குநர் மூர்த்தியின் வேலை அபாராம். இப்படிதான் ஸ்பேஷ் இருக்குமோ! என்று நமக்கு மனிதர் ஷாக் கொடுத்துவிடுகிறார்.முதல் இந்திய விண்வெளி திரைப்படம் மட்டும் அல்ல, நிலவில் முதன் முதலில் கால் வைத்த நடிகர் ஜெயம் ரவி என்ற தமிழ் நடிகர் என்ற பெருமையையும் பெற்றிருக்கும் இந்த படம் விண்வெளியை மையப்படுத்தி இருந்தாலும், திரைக்கதையை கையாண்ட விதம் என்னமோ, சாதாரண கமர்ஷியல் படம் பாணியில் தான் இருக்கிறது.மொத்தத்தில், இயக்குநர் சக்தி சவுந்தராஜனின் ஐடியா புதிதாக இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் என்னமோ ரொம்ப பழசாக தான் இருக்கிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...