Friday 15 June 2018

'கோலி சோடா 2’ விமர்சனம்

எளிமையான கதையை வலிமையாக சொன்னதால் ஜெயித்த படம் ‘கோலி சோடா’. அந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘கோலி சோடா 2’ அதே வலிமையுடன் இறுக்கிறதா, இல்லையா என்பதை பார்ப்போம்.ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத மூன்று இளைஞர்கள், மூவருக்கும் ஒவ்வொரு லட்சியம். லட்சியம் என்றவுடன் பெருஷா ஒன்னும் இல்ல, ஆட்டோ ஓட்டும் இளைஞருக்கு கார் வாங்கி கால் டாக்‌ஷி ஓட்ட வேண்டும் என்ற லட்சியம். ஓட்டலில் சப்ளையராக வேலை செய்யும் இளைஞருக்கு தனக்கு தெரிந்த பாஸ்க்கட்பால் விளையாட்டு கோட்டாவில் பெரிய தனியார் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது லட்சியம். தாதா ஒருவருக்கு கார் டிரைவராக வேலை செய்யும் மற்றொரு இளைஞருக்கு, தனது காதலி ஆசைப்படுவது போல, அந்த வேலையை விட்டுவிட்டு, நல்ல வேலையில் சேர்ந்து வாழ வேண்டும், என்பது லட்சியம். இந்த மூன்று இளைஞர்களுக்கும் ஒருவருக்கொருவர் எந்த சம்மந்தமும் இல்லை என்றாலும், வாழ்க்கையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டு, அதனால் தனது வாழ்க்கையையே இழந்தவரான சமுத்திரக்கனிக்கும் இவர்களுக்கும் சம்மந்தம் இருக்கிறது. இந்த இளைஞர்களுக்கு அவ்வபோது அறிவுரை சொல்வதோடு, அவர்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும் சமுத்திரக்கனி, போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்துவிட்டு, தனக்கு நேர்ந்த அவமானத்தால் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார்.இதற்கிடையில், இந்த மூன்று இளைஞர்களின் லட்சியத்திற்கும் இடையூரு செய்யும் விதத்தில், மூன்று பேர் பிரச்சினை கொடுக்க, அவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள ஓடும் இவர்கள், ஒரு கட்டத்தில் ஓடுவதை விட்டுவிட்டு அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை.பிரச்சினையைக் கண்டு ஓடி ஒளிந்தால், பிரச்சினை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும், அதை எதிர்த்து நின்றால் தான், பிரச்சினை நம்மை விட்டு ஓடும், என்ற ‘கோலி சோடா’ வின் மெசஜ் தான் இந்த ‘கோலி சோடா 2’ விலும் சொல்லுப்பட்டிருந்தாலும், இதை வித்தியாசமாகவும், ஆக்‌ஷன் காட்சிகளை பிரம்மாண்டமாகவும் கையாண்டு இயக்குநர் விஜய் மில்டன் சொல்லியிருக்கிறார்.கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் பரத் சீனி, இசக்கி பரத், வினோத் ஆகிய மூன்று பேரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சுபிக்‌ஷா, கிரிஷா, ரக்‌ஷிதா என்ற மூன்று ஹீரோயின்களும் ஹீரோக்களுக்கு ஜோடியாக அல்லாமல் கதாபாத்திரங்களாகவே படம் முழுவதும் வலம் வருகிறார்கள்.மூன்று ஹீரோக்களுக்களைப் போல, படத்தில் வரும் மூன்று வில்லன்களான செம்பன் வினோத் ஜோஸ், ஸ்டண்ட் சிவா, சரவணா சுப்பையா ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.தான் நடிக்கும் படங்களில் கம்பீரமான வேடங்களில் நடித்து வரும் சமுத்திரக்கனி, இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். எந்த வேடமாக இருந்தாலும் அதில் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொள்பவர் வித்தியாசமான வேடம் என்றால், சும்மாவா விட்டுவிடுவாரா, அசத்திட்டாரு. அவருடன் இயக்குநர் கெளதம் மேனனும் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். தனது குரலால் மிரட்டியவர், இந்த படத்தில் தான் ஏற்றிருக்கும் சிரிய வேடம் மூலம் மிரட்டுகிறார்.’கோலி சோடா’ போல தான் இந்த படமும் இருக்கிறது, என்று ரசிகர்கள் சொல்லிவிடக் கூடாது, என்பதற்காகவே திரைக்கதையை கையாள்வதில் இயக்குநர் விஜய் மில்டன் அதீத கவனம் செலுத்தியிருப்பதோடு, காட்சிகளில் பிரம்மாண்டத்தையும் கையாண்டிருப்பது இப்படத்தின் ஸ்பெஷல் அம்சம் என்று சொல்லலாம்.பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் பழி தீர்க்க கிளம்பும் போது, சத்தமே இல்லாம பெரிய ரவுடியை போட்டு தள்ள திடீரென்று பரத் சீனி களத்தில் இறங்க, அவரது குறி தப்பிவிடுகிறது. ஜாதி அரசியல் கட்சி கூட்டம், ரவுடியின் அடியாட்கள் என்று பல பேர் அவரை சூழ்ந்துக்கொள்ள, அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்க போகிறார், என்பது நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது. சொல்ல போனால், கில்லியில் விஜய் பிரகாஷ்ராஜியிடம் சிக்கிக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகும் காட்சி எப்படி இருக்குமோ, அதுபோன்ற ஒரு பரபரப்பு அந்த காட்சியில் இருக்கிறது.மூன்று இளைஞர்களின் லட்சியத்தை விளக்குவது, அவர்களின் காதல் போன்றவை திரைக்கதைக்கு வேகத்தடையாக இருந்தாலும், மூன்று இளைஞர்களும் ஒன்றாக சேர்ந்து தங்களது எதிரிகளை எதிர்கொள்ள தொடங்கியவுடன் படம் பரபர என்று நகர்கிறது.படத்தின் க்ளைமாக்ஸை ரசிகர்கள் யூகித்துவிடக் கூடாது, அல்லது ”இதுவா க்ளைமாக்ஸ்”, என்று நினைத்துவிடக் கூடாது என்பதில் இயக்குநர் விஜய் மில்டன் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அதுவே படத்தின் நீளத்தை அதிகரிக்கவும் காரணமாகவிடுகிறது. இருந்தாலும் படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் கதையை விட ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தான் ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்தது போலவும் தோன்றுகிறது.அச்சுவின் இசையில் பாடல்கள் ஓகே, பின்னணி இசை டபுள் ஓகே. விஜய் மில்டனின் கேமரா, திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தரைப் போல அதிரடியையும் காட்டியிருக்கிறது.எப்படி ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறதோ அதுபோல படத்தின் வசனமும் கைதட்டல் பெறும் விதத்தில் இருக்கிறது. ”காதலில் ஜாதி பார்ப்பவர்கள், அந்த அந்த ஜாதியினர் வேலை இல்லாமல், பசியில் இருக்கிறார்களே அதை முதல்ல பாருங்க” என்று சொல்லும் இடத்தில் கைதட்டல் திரையரங்கையே அதிர வைக்கிறது. அதே சமயம், ரோஹினியின் ஓவிய விளக்கம், ரேகாவின் பிளாஷ்பேக் போன்றவை சினிமாத்தனமாக இருக்கிறது.இருந்தாலும், இரண்டாம் பாதி மற்றும் க்ளைமாக்ஸ் நெருங்கும் இடங்களில் வரும் ட்விஸ்ட்டுகள் அத்தனை குறைகளையும் நிவர்த்தி செய்துவிடுகிறது.மொத்தத்தில், எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வெளியான ‘கோலி சோடா’ எப்படி பெரிய சர்பிரஸை கொடுத்ததோ, அதுபோன்ற ஒரு சர்பிரஸை எதிர்ப்பார்ப்போடு வெளியாகியிருக்கும் இந்த ‘கோலி சோடா 2’- வும் கொடுக்கிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...