Sunday 2 July 2017

யானும் தீயவன் – விமர்சனம்

காதலே கண்ணும் கருத்துமாக இருக்கும் ஹீரோ சந்தப்ப சூழ்நிலையால் எப்படி தீயவன் ஆகிறான் என்பதைச் சொல்லும் படம் தான் ”யானும் தீயவன்.”

”சும்மா காத்தாட நடந்து விட்டு வரலாம்..” என்று கடற்கரைக்குச் செல்கிறார்கள் ஹீரோ அஸ்வின் ஜேரோமும், ஹீரோயின் வர்ஷாவும்.

போன இடத்தில் சைக்கோ கொலைகாரரான ராஜூ சுந்தரத்தின் ஆட்கள் இவர்களிடம் வம்பிழுக்க, அதனால் கோபப்படும் அஸ்வின் ராஜூசுந்தரம் உட்பட வம்பிழுக்கும் கோஷ்டியை நையப் புடைக்கிறார். இதனால் பழிவாங்கக் காத்துக் கொண்டிருக்கும் ராஜூசுந்தரத்திடம் அஸ்வினும், அவரது காதலி வர்ஷாவும் வசமாக ஒரு வீட்டில் சிக்குகிறார்கள்.

இருவரையும் சித்திரவதை செய்து கொலை செய்ய முடிவெடுத்து கட்டிப்போடுகிறார் ராஜூ சுந்தரம். இதற்கிடையே அவரை என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ள பொன்வண்ணம் தலைமையிலான போலீஸ் டீம் முடிவு செய்கிறது.

கொலைகாரன் ராஜூ சுந்தரத்திடமிருந்து காதலர்கள் தப்பித்தார்களா? போலீஸ் எண்கவுண்ட்டரிலிருந்து கொலைகாரன் ராஜூ சுந்தரம் தப்பித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

வழக்கமான கல்லூரிக் காதலர்கள் போலவே ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் ரசிக்கக்கூடிய புதிய ரொமான்ஸ் காட்சிகள் என்று படத்தில் எதுவுமில்லை.

அறிமுகப்படம் காதல் ப்ளஸ் ஆக்‌ஷன் படமாக அமைந்திருப்பதால் நாயகன் அஸ்வின் ஜெரோமுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. அவரும் நடிப்பு, காதல் காட்சிகள் குறிப்பாக சண்டைக்காட்சிகளில் எந்த வித தயக்கத்தையும் காட்டாமல் நடித்திருக்கிறார்.

நாயகியாக வரும் வர்ஷா அசப்பில் நஸ்ரியா மாதிரியே இருக்கிறார். ஆனால் நஸ்ரியாவின் நடிப்பில் வெளிப்படுகிற குறும்புத்தனம் இவரின் நடிப்பில் மிஸ்ஸிங்!.

காதல் திருமணத்துக்கு இருவரது வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிப்பது, அவர்களும் வீட்டை எதிர்த்து விட்டு நண்பர்களுடன் ஆதரவுடன் திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்துவது போன்ற காட்சிகள் எல்லாம் அறுதப்பழசு. அதற்கு மாற்றாக புதிதாக யோசித்திருக்கலாம் டைரக்டர் பிரசாந்த் ஜி. சேகர்.

வழக்கமாக பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து அவ்வப்போது காமெடி கேரக்டர்களிலும் நடிக்கும் ராஜூ சுந்தரம் இதில் முழு வில்லனாக வருகிறார். பரவாயில்லை. அவருடைய வில்லத்தனத்துக்கான பாவனைகள் மிக அழகாகக் பொருந்தியிருக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் பொன் வண்ணன், அரசியல்வாதியாக வரும் சந்தானபாரதி, வக்கீலாக வரும் வி.டி.வி கணேஷ், நாயகனின் நண்பராக வரும் அருண் காமராஜ் என மற்ற நட்சத்திரங்கள் தங்கள் பங்களிப்பை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

அரை கிலோ மீட்டருக்கு தடுப்புகளை வைத்து வாகனங்களை விடிய விடிய சோதனை செய்கிறது போலீஸ். அப்படிப்பட்ட இந்த காலகட்டத்திலும் போலீசுக்குப் போக்குக் காட்டிக்கொண்டு 20 வருடங்களாக சிட்டிக்குள்ளேயே சைக்கோ கொலைகாரன் ராஜூ சுந்தரம் ஹாயாக சுற்றி வருகிறார் என்பதை நம்பவே முடியவில்லை. இப்படிப்பட்ட அப்பட்டமாகத் தெரியும் லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

ஒரு சைக்கோ கொலைகாரனிடம் சிக்கும் நாயகன் – நாயகி, அந்த சைக்கோ கொலைகாரனை வலைவீசித் தேடும் போலீஸ் என அசத்தலான த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம். புதுப்பிக்கப்படாத காட்சியமைப்புகளால் தட்டுத் தடுமாறுகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...