Saturday 22 July 2017

அப்துல் கலாம் அவர்களை பற்றிய இசை ஆல்பம் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்டார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களை பற்றிய இசை ஆல்பம் உருவாக்கியிருக்கிறார்கள். வைரமுத்து எழுதிய பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, இயக்குனர் வசந்த் சாய் இயக்கியிருக்கும் ஆல்பம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார்.


அப்துல் கலாம் காலம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து பல நூற்றாண்டுகளுக்கு நினைவு கூறப்பட வேண்டியவர். இந்த இசைத்தட்டை வெளியிட வேண்டிய அவசியம் நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளத் தான். அவர் இறந்த போது இந்தியாவில் இருக்கும் எல்லா சட்டமன்றங்களும் ஒரு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றின. அதில் எனக்கு பிடித்தது 19ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் விவேகானந்தர், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் காந்தி, 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் அப்துல் கலாம் என்ற ஆந்திர அரசு நிறைவேற்றிய தீர்மானம் தான். எல்லா துறைகளிலும் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து ஒரு சிறந்த மனிதர் இவர் தான். அவரை விட சிறந்த விஞ்ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர் குடியரசு தலைவர் என்பதற்காகவோ, விஞ்ஞானி என்பதற்காகவோ அவர் நினைக்கப்படவில்லை. சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இல்லாத மனிதர் என்பதற்காக தான் அவர் நினைக்கப்படுகிறார். நாட்டில் தண்ணீர், உணவு பஞ்சங்களை விட நல்ல தலைவர்கள் பஞ்சம் அதிகம். இந்த பஞ்சத்தில் முளைத்த ஒரு கற்பக விருட்சம் தான் தன்னலமற்ற அப்துல் கலாம். இந்தியாவில் உயரிய குடியரசு தலைவர் பீடத்தில் ஒரு தமிழர் கோலோச்சியிருக்கிறார். அவரை பார்க்க அங்கு போனபோது மனிதர்களுக்காக தான் மரபே தவிர, மரபுக்காக மனிதர்கள் இல்லை. ஒரு சிலர் பதவிக்கு போனவுடன் தனிமனித கூட்டத்தில் இருந்து தங்களி துண்டித்துக் கொள்கிறார்கள். பதவி என்பது உதவி செய்யும் ஒரு துணைக்கருவி தான். பதவி வந்தவுடன் தூங்காமல் இருக்கிறாரோ அவர் தான் தலைவர். அப்துல் கலாம் தன்னை குடியரசு தலைவராக நினைத்துக் கொண்டதில்லை. ராமேஸ்வரத்தில் பத்திரிக்கை வினியோகித்த ஒரு சிறுவன் அதே பத்திரிக்கையில் தலைப்பு செய்தியாக மாறுவார் என்று நினைத்து பார்த்திருப்பாரா?. வாழ்க்கையில் உண்மையாய் இரு உன்னதம் பெறுவாய், உழைத்து கொண்டு இரு உயரம் பெறுவாய் என்பதை நம்பியவர். அறிவு என்பது முயற்சியால் வருவது, ஆற்றல் என்பது பயிற்சியால் வருவது. அறிவாளி ஆவது எளிது, மனிதன் ஆவது தான் கஷ்டம். எவன் ஒருவன் தான் கற்றதை மண்ணுக்கு அளிக்கிறானோ அவர் நினைக்கப்படுகிறான். இந்த நூற்றாண்டில் கலாமினால் விண்ணில் ஒரு புரட்சியும், எம்.எஸ்.சுவாமிநாதனால் மண்ணில் புரட்சியும் அரங்கேறி இருக்கின்றன. கலாமுக்கு சலாம் என்றார் கவிப்பேரரசு வைரமுத்து.


வாழ்க்கையில் நான் ஆசைப்பட்ட மூன்று விஷயங்கள் நான் கேட்காமலே கிடைத்திருக்கின்றன. எனக்கு காந்தியை ரொம்ப பிடிக்கும். அவரின் சத்திய சோதனைப்படி வாழ முயற்சித்து வருகிறேன். அவரின் காந்தி படத்திற்கு வாய்ஸ் கொடுத்தது. அடுத்து என் குருநாதர் பாலச்சந்தர் அவர்களின் உதவியாளராக சேர்ந்தது என் பாக்கியம். மூன்றாவது கலாம் அவர்களின் புத்தகங்கள், சிந்தனைகள், எளிமை, வடக்கு தெற்கு பேதத்தை உடைத்து அகில இந்தியாவாலும் மதிக்கப்பட்ட தலைவர் கலாம் தான். அவரோடு எனக்கு நேரடியாக பரிச்சயம் இல்லை என்றாலும் அவர் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு தான் இந்த பாடலை செய்ய உந்தியது. அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பமும் அவரை போலவே சிறந்த மனிதர்கள். இந்த காலத்தின் வாழும் கண்ணதாசன் வைரமுத்து தான். கலாம் அவர்களை பற்றி பாடல் எழுத வைரமுத்து தான் சால பொருத்தம். ஜிப்ரான் இசையும், ஏகாம்பரம் ஒளிப்பதிவும் பெரிய தூண்கள். 10 நாட்கள் இந்தியா முழுக்க பயணித்து பாடலை படம் பிடித்திருக்கிறோம் என்றார் இயக்குனர் வசந்த் சாய்.


விக்ரம் சாராபாய் கலாமை தேர்ந்தெடுத்த போது, அவன் சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல இந்தியாவின் சிறந்த மனிதனாக வருவான் என்றார். அவர் மக்களின் குடியரசு தலைவர் என்று அழைக்கப்பட்டவர். நகரங்களோடு ஒப்பிடும் போது கிராமங்கள் இன்னும் முன்னேற வேண்டும். முதல் பொக்ரான் சோதனை இந்திரா காந்தி ஆட்சியிலும், இரண்டாம் பொக்ரான் சோதனை வாஜ்பாய் ஆட்சியிலும் செய்யப்பட்டன. இயற்கை வளங்களை பற்றிய புரிதலோடு இருந்தவர் கலாம். எந்த ஈகோவும் இல்லாத மனிதர். இளம் மாணவர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு, அவர்களின் கல்வி முக்கியம் என நம்பியவர். கல்வி, கிராமப்புற முன்னேற்றம் பற்றி எப்போதும் நினைப்பவர். அவரால் மாணவர்களிடத்தில் பேச முடியாத நேரத்தில் கூட அவரின் கார்டு கொடுத்து மெயில் அனுப்ப சொல்லி, அதற்கு பதில் அளித்த குடியரசு தலைவர் என பல விஷயங்களை நினைவு கூர்ந்தார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.


விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரான், அப்துல் கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...