Sunday 2 July 2017

இவன் யாரென்று தெரிகிறதா – விமர்சனம்

”அழகான பெண்ணை காதலித்துக் காட்டுகிறேன் பார்க்கிறாயா?” என்று நண்பர்களிடம் சவால் விடும் ஹீரோ அதற்காக என்னென்ன செய்கிறார் என்பதை நகைச்சுவையாக சொல்லும் படம் தான் ”இவன் யாரென்று தெரிகிறதா.”

உன்னால் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய முடியுமா என்று சவால் விடுகிறார்கள் ஹீரோ விஷ்ணுவின் நண்பர்கள். நண்பர்களின் சவாலை ஏற்கும் விஷ்ணு அதற்கான முயற்சியில் இறங்குகிறார். சில தோல்விகளுக்குப் பிறகு தன்னுடைய பழைய தோழியான இஷாராவைத் தேடிப்போகிறார். அவருக்கோ திருமணமாகி குழந்தை இருப்பது தெரிய வருகிறது.

இருந்தாலும் சவாலில் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற முடிவில் இருக்கும் விஷ்ணு இன்னொரு நாயகியான வர்ஷாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். பிறகு தான் அவர் சப்-இன்ஸ்பெக்டர் என்கிற விபரம் தெரிய வருகிறது. போலீசாக இருந்தாலும் பரவாயில்லை என்று தனது காதல் பயணத்தைத் தொடரும் விஷ்ணுவுக்கு காதல் கைகூடியதா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

மிக எளிதான தமிழ்சினிமாவில் பார்த்துப் போன பல காதல் கதைகளில் ஒன்று தான் என்றாலும் அதை காமெடியாக திரைக்கதை அமைத்துக் கொடுத்த விதத்தில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ்குமார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த விஷ்ணு, இந்தப் படத்தில் வெகுளித்தனமான கேரக்டரில் வரும் அவர் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்து தேர்ந்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவரெல்லாம் சப் – இன்ஸ்பெக்டரா என்று சந்தேகப்பட வைத்தாலும் குறையில்லாத நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார் நாயகி வர்ஷா.

ஹீரோ ஒரு வெகுளி என்றால் தானும் வெகுளியாகவே வருகிறார் இன்னொரு நாயகியான இஷாரா. நடிக்க ஆரம்பித்து அடை டஜன் படங்கள் கூட ரிலீசாகவில்லை. அதற்குள் ஒரு குழந்தைக்கு தாய் கேரக்டரில் நடிக்க முன்வந்ததை மனதாரப் பாராட்டலாம்.

ஹீரோவின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ், ஹீரோவின் நண்பர்களாக நடித்துள்ள அர்ஜுன், ராஜ்குமார் என படத்தில் வருகின்ற எல்லா கேரக்டர்களையும் நகைச்சுவையாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

பி & ஜி-யின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்பட பயணிப்பதுடன், மும்பய் பாஸ்களுடன் இரண்டு ஹீரோயின்கள் ஆட்டம் போடும் பாடலை கலர்புல்லா படமாக்கியிருக்கிறார்.

முதல் பாதி முழுவதுமே ஹீரோ மற்றும் அவரது நண்பர்களின் காதல் காமெடிகளால் ரசிகர்களை சிரிக்க வைத்துவிட்டு, இரண்டாம் பாதியில் மும்பை பாய்ஸ் கூட்டணியை களம் இறக்கி நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார் இயக்குநர் சுரேஷ்குமார்.

தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் மனசுவிட்டு இரண்டு மணி நேரம் சிரித்தால் போதும் என்கிற ஒரே நோக்கத்தில் ஒரு காதல் கலந்த காமெடிப்படத்தை தந்ததற்காக ”இவன் யாரென்று” கண்டிப்பாக பார்க்கலாம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...