Saturday 17 June 2017

உரு – விமர்சனம்

அறிமுக இயக்குநர் விக்கி ஆனந்த் இயக்கத்தில் வந்திருக்கும் சைக்காலஜி த்ரில்லர் தான் இந்த ”உரு.”

பழைய பாணி பிரபல நாவல் எழுத்தாளரான கலையரசனின் நாவல்களுக்கு காலப்போக்கில் வாசிப்பாளர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காமல் போகிறது.

இதனால் நவீன ட்ரெண்ட்டுக்கு ஏற்ற மாதிரி புதிய பாணியில் ‘பயம்’ என்கிற கான்செப்ட்டில் நாவல் ஒன்றை எழுத மேகமலைக்கு தனியாகச் செல்கிறார்.

அங்கு தனியாக இருக்கும் வீட்டில் அவருக்கு சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. அதுவும் அவர் நாவலில் என்ன எழுதுகிறாரோ? அதன்படியே எல்லாம் நடக்கின்றன.

அதன் உச்சக்கட்டமாக அவரது கதையில் வரும் மூகமூடி மனிதன் கலையரசனையே கொலை செய்ய முயற்சிக்கிறான். யார் அந்த சீரியல் கில்லர்? ஏன் அவன் கலையரசனை கொலை செய்ய முயற்சிக்கிறான்? அதிலிருந்து கலையரசன் எப்படி தப்பிக்கிறான் என்பதே கிளைமாக்ஸ்.

மாஸ், கமர்ஷியல் என்கிற அரதப்பழசான வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும் கலையரசன் இந்தப்படத்திலும் அந்த வித்தியாசத்தை தொடர்ந்திருக்கிறார். ஒரு எழுத்தாளருக்குரிய உடல்மொழியும், அதற்கேற்ற அவர் தந்திருக்கும் நடிப்பும் பிரமாதம்.

”எங்க அம்மா ராணி”யில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாசமான அம்மாவாக வந்த தன்ஷிகா இந்தப்படத்தில் ஆக்‌ஷன் நாயகியாக அவதாரம் எடுத்திருக்கிறார். குறிப்பாக அவருடைய உயிருக்கு நேரம் குறித்து வைத்து விளையாடும் அந்த ‘கேம் கில்லரி’டமிருந்து தப்பிக்க அவர் முயற்சிக்கும் போராட்ட காட்சிகள் த்ரில்லிங்!

ஒட்டு மொத்தமாக இந்தப்படம் ஒரு சில ஹாலிவுட் படங்களை ஞாபகப்படுத்துகிறது. என்றாலும் பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதி, ஜோகனின் பின்னணி இசை, சவுண்ட் எபெக்ட்ஸ் என தொழில்நுட்ப விஷயங்கள் விறுவிறுப்புக்கு பெரிதும் கை கொடுத்திருக்கின்றன.

கிளைமாக்ஸ் காட்சிகளை இன்னும் கூடுதல் சுவாரஷ்யத்தோடு சுற்றி வளைக்காமல் இன்னும் எளிமையாக காட்சிப்படுத்தியிருந்தால் ”உரு” இன்னும் கொஞ்சம் மெருகேறியிருக்கும்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...