Sunday 11 June 2017

ரங்கூன் – விமர்சனம்

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமாகிய கெளதம் கார்த்தியின் இதுவரை வெளிவந்த படங்கள் ஓடாத நிலையில், தற்போது இவர் நடித்து வெளிவந்துள்ள ரங்கூன் படம் கெளதம் கார்த்தி அடுத்த லெவல் தண்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து வந்த எல்லாப் படங்களும் அவரை நம்பி படமெடுத்த தயாரிப்பாளர்களை கலங்கடிக்க, ஆனாலும் அவருடைய கால்ஷீட் கிடைத்தாலே போதுமென்று படமெடுக்கும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒரு இயக்குநர் தான் இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

நல்லவேளை கார்த்தியை நம்பி படமெடுக்காமல் கதையை நம்பி படமெடுத்த வகையில் ராஜ்குமாரை பாராட்டலாம்.

‘பிறக்குறதும் ஈஸி, சாவுறவும் ஈஸி இந்த ரெண்டுக்கும் நடுவுல வாழ்றது தான் ரொம்பக் கஷ்டம்’ என்கிற லைன் தான் இப்படத்தின் கதை.

ரங்கூனிலிருந்து சென்னைக்கு அப்பா, அம்மாவோடு அகதியாக வரும் கெளதம் கார்த்திக் சென்னையிலுள்ள செளவுகார் பேட்டை ஏரியாவில் குடியிருக்கிறார். அங்கு தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தங்க பிஸ்கட் கடத்தல் வியாபாரி சித்திக்கிடம் வேலைக்குச் சேர்கிறார்.

இடையில் நாயகி சனாவுடன் காதல். காதலுக்காக கடத்தல் தொழிலை விட்டு விலகி நல்ல புள்ளையாக வாழ நினைக்கிற நேரத்தில்
தன்னுடைய 6 கோடி கடனை அடைப்பதற்காக கை விட்ட தங்க பிஸ்கட் கடத்தல் தொழிலை மீண்டும் செய்ய முடிவெடுக்கிறார் சித்திக்.

அந்த வேலையை கெளதம் கார்த்திக்கிடம் ஒப்படைக்கிறார். சித்திக் தரும் தங்க பிஸ்கட்டுகளை ரங்கூனுக்கு கடத்திக் கொண்டு போகும் கெளதம் கார்த்திக் அங்கு எதிர் பார்ட்டி தரும் 6 கோடி பணத்தை வாங்கி தன் அறைக்குத் திரும்புகிறார். அதன்பிறகு அந்தப்பணம் காணாமல் போகிறது.

இதனால் அதிர்ச்சியடையும் கார்த்திக் அந்தப் பிரச்சனையிலிருந்து எப்படி தப்பித்தார்? அவருடைய காதல் என்னவானது? என்பதே கிளைமாக்ஸ்.

கெளதம் கார்த்திக் இதுவரை நடித்த படங்களில் இந்தப்படத்தில் தான் பரவாயில்லப்பா ரேஞ்சில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். சிகப்பாக இருக்கும் அவருக்கு டல் மேக்கப்பைப் போட்டிருப்பது செயற்கைத்தனமாகத் தெரிகிறது. அதைத் தாண்டி அசல் செளகார்பேட்டை ஏரியாவைச் சேர்ந்த இளைஞனாக பொருந்திருப்பது சிறப்பு.

நாயகியாக அறிமுகமாகியிருக்கும் சனா கேமரா கோணங்களில் செம க்யூட். சில இடங்களில் அவர் கண்களில் காட்டும் நடிப்பே இளமை. ஆனாலும் பேசப்படுகிற கேரக்டர் இல்லை.

நல்லவன் போல நடித்து கொஞ்சம் கொஞ்சமாக வில்லத்தனம் செய்யும் பிரபல மலையாள நடிகர் சித்திக்கின் நடிப்பில் குறையொன்றுமில்லை.

இது தான் கள்ளக் கடத்தல் நடைபெறுகிற விதம் என்கிற வித்தையை டீட்டெயிலாக காட்சிப்படுத்தியிருக்கிற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி முதல் பாதியில் மட்டும் திரைக்கதையில் மெனக்கிட்டிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு 6 கோடியை புரட்டுவதற்காக கெளதம் கார்த்திக்கும் அவரது நண்பர்களும் சேர்ந்து போடும் கடத்தல் ப்ளான் திரைக்கதையின் பலவீனம்.

“பெரிய முடிவெடுக்க ஒரு சின்ன நேரம் போதும்” போன்ற ஒரு வரி வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. பர்மாவை கலர்புல்லாகக் காட்டிய வகையில் அன்ஷ் தருண் குமாரின் ஒளிப்பதிவு படு நேர்த்தி.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கூடுதல் விறுவிறுப்புக்கு பக்காவாக செட்டாகியிருக்கிறது.

முதல் பாதியில் இருந்த நேர்த்தியும், வேகமும் இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்திருந்தால் ஒரு பரபரப்பான பயணமாகியிருக்கும் இந்த ”ரங்கூன்”.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...