Saturday 27 May 2017

தொண்டன் – விமர்சனம்

இந்த உலகம் மனிதர்களின் முழுமையான வாழ்க்கைக்கு உருவாக்கப்பட்டது. அந்த மானுட வாழ்க்கையில் எதிரியும், நண்பனும் வேறு வேறாக இருந்தாலும் இருவருக்குமான உயிர் பொது தான் என்பதை சமகால நிகழ்வுகளுடன் சொல்லும் படம் தான் இந்த ”தொண்டன்.”

ஆம்புலன்ஸ் வண்டியில் டிரைவராக வேலை செய்யும் சமுத்திரக்கனிக்கு உயிரைக் காப்பாற்றுவது தான் தலையாயப் பணி.

ஒருநாள் நடுரோட்டில் மந்திரி நமோ நாராயணனின் அடியாட்களால் கத்திகுத்துப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருக்கும் ஒருவரை தன் வண்டியில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு வேகம் எடுக்கிறார்.

உயிருக்கு போராடும் அவரை ஆம்புலன்ஸ் பின்னாலேயே துரத்தும் நமோவின் அடியாட்களை மீறி மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றுகிறார். எதிரியைத் தேடி வரும் நமோவிடமோ ”நாளைக்கு நீங்களும் இப்படி கிடந்தா கண்டிப்பா காப்பாத்துவேன் சார்” என்கிறார் கருணை உள்ளம் கொண்டவராக.

அன்று முதல் சமுத்திரக்கனிக்கு தொல்லைகள் கொடுக்க ஆரம்பிக்கிறார் நமோ நாராயணன். அவரின் அந்த தொல்லைகளிலிருந்து தப்பிக்க வன்முறை இல்லாத பாதையில் சென்று எப்படி தன்னை பாதுகாத்துக் கொள்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.

ஒரு மனிதனின் சமூக வாழ்க்கையில் எதிரியும், நண்பனும் வேறு வேறாக இருந்தாலும் இருவருக்குமான ”உயிர்” ஒன்று தான் என்பது தான் படம் சொல்லும் போதனைகளில் முக்கியமானது.

இந்த சமூகம் மீதான தன் பார்வையை திரையில் யார் வைத்தாலும் அது இரண்டு நிமிடத்துக்கு மேல் பார்க்கச் சகிக்காமல் ‘அட்வைஸ்’ ரணமாகி விடும். அதுவே சமுத்திரக்கனி போண்ற சமூகபொறுப்புள்ள படைப்பாளிகள் சொல்கிற போது நம்மையும் மறந்து காட்சிகளோடு ஒன்றி ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம்! இந்த வித்தை கை கொடுக்கும் வரை இன்னும் அரை டஜன் படங்கள் கூட இந்த டைப்பில் சமுத்திரக்கனி தரலாம்.

நண்பனாகப் பழகியவன் தன் தங்கையை டார்ச்சர் செய்கிறான் என்று தெரிந்தும் விக்ராந்த் மீது கோபத்தைக் கொட்டாமல் ஒரு பொண்ணுக்கு உங்களைப் பிடிச்சா துரத்துங்கடா, இல்லேன்னா அவளை விட்டுடுங்கடா என்று அட்வைஸ் பண்ணி அவரையும் தன்னோடு வேலைக்கு சேர்த்து ஆளையே மாற்றுகிற இடம் மனிதம்.

இப்படி படத்தில் வருகிற எப்பேர்ப்பட்ட கெட்டவனையும் அவனை நல்லவனாக மாற்ற முயற்சிப்பது தான் சமுத்திரக்கனியின் கேரக்டர். அவர் கூடவே வருகிற கஞ்சா கருப்புவுக்கு காமெடியும், காட்சிகளும் அவ்வளவாக இல்லை என்றாலும் குணச்சித்திரக் கேரக்டரில் வருகிற ஒரு சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

கடைசி வரை வஞ்சம் தீர்க்காமல் ஓயமாட்டேன் என்று அடம்பிடிக்கிற நமோவின் தம்பி செளந்தர்ராஜனின் முடிவு பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறது.

நாயகியாக வரும் சுனேனா இதில் ஒரு சுற்றுப் பெருத்துப் பொய் கொள்ளை அழகாய் தெரிகிறார். சமுத்திரக்கனியின் காதலைப் பெறுவதற்காக அவர் போடும் வேஷம் ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்கா புலி வேஷம் போட்டு தெருவைச் சுற்றி வருவதை ஞாகப்படுத்தினாலும் அவர்கள் காதலை நாகரீகமாகக் காட்சியமைத்திருப்பது அருமை.

இடைவேளைக்குப் பிறகு இரண்டு மூன்று சீன்களில் வந்தாலும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து விட்டுச் செல்கிறார்கள் சூரியும், தம்பி ராமையாவும்.

சமுத்திரக்கனியின் தங்கையாக வரும் அர்த்தனா கண்களே மிக அழகாக நடிக்கிறது. அவரெல்லாம் ஹீரோயின் பீஸ். டைரக்டர்ஸ் கொஞ்சம் இந்தப் பொண்ணுப்பக்கம் உங்க கேமராவைத் திருப்புங்கப்பா.

பல படங்களில் டம்மி அரசியல்வாதியாக வரும் நமோ நாராயணன் இதில் கொடூர வில்லனாக வருகிறார். அறிமுகக் காட்சியில் அவரைப் பார்க்கிற போது வழக்கமாக டம்மி அரசியல்வாதியாகத்தான் இருப்பாரோ? என்று நினைத்து சிரிக்க ஆரம்பித்தால், ”நான் இதுல சீரியஸான ஆளு தம்பி” என்று மிரட்டலான வில்லனாக பாஸ்மார்க் வாங்குகிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் கேட்பதற்கு ரம்மியம்.

படம் முழுக்க சாதி அரசியல், ஜாதி மறுப்புத் திருமணம், அரசு அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம், ஊழல், ஜல்லிக்கட்டு, டாஸ்மாக், மீத்தேன், வாடிவாசல், நெடுவாசல் என சமீபத்திய அத்தனை நிகழ்வுகளையும் படம் முழுக்க சமூகப்பொறுப்போடு பதிவு செய்திருக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் அதையெல்லாம் வசனங்களாக்கி அவர் பேசும்போது வெளிப்படுகிற சீரியஸ்னஸ் தான் அட்வைஸ் ஆக மாறி படம் பார்க்கிற சுவாரஷ்யத்தைக் கொஞ்சம் குறைக்கிறது. அடுத்தடுத்த படங்களில் அடக்கி வாசிங்க சார்…

அந்த சாதிக்கட்சி அரசியல்வாதியின் முன்னால் 200க்கும் மேற்பட்ட மாட்டு இன வகைகளை மூச்சிறைக்க சொல்லுகிற இடம் சரியாகப் பொருந்தவில்லை. வேறு இடத்துக்கு ஷிப்ட் பண்ணியிருக்கலாம்.

திரைக்கலைஞர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதுவே படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு உணர்வைத் தருவதற்குப் பதிலாக போதனையாகி விடக்கூடாது என்பதில் சமுத்திரக்கனி போன்ற சிறந்த திரைக்கலைஞர்கள் கூடுதல் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...