Saturday 27 May 2017

பிருந்தாவனம் – விமர்சனம்

ராதாமோகனின் ஆகச்சிறந்த படங்களில் தமிழ்சினிமா ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்ட படைப்பு ‘மொழி.’
அப்படத்தில் ஜோதிகா ஏற்று நடித்த வாய் பேச முடியாத, காது கேளாத கேரக்டர் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து சில படங்களை ராதாமோகன் இயக்கியிருந்தாலும் அவையெல்லாம் ‘மொழி’ அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதனாலோ என்னவோ மீண்டும் ஒரு காது கேளாத, வாய் பேச முடியாத கேரக்டரில் ஹீரோ அருள்நிதியை நடிக்க வைத்து ஒரு முழுமையான வெற்றிக்கு முயன்றிருக்கும் படம் தான் இந்த ‘பிருந்தாவனம்.’
ஊட்டியில் வசிக்கும் வாய் பேச முடியாத, காது கேளாத ஹீரோ அருள்நிதி. சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த அவரை அதே ஊரைச் சேர்ந்த எம்.எஸ்.பாஸ்கர்  தான் அங்குள்ள ஹோம் ஒன்றில் சேர்த்து விடுகிறார். ஹோமில் வளர்ந்து இளைஞர் ஆனதும் வேலை நிமித்தமாக ஹோமை விட்டு வெளியேறி அங்குள்ள சலூன் கடை ஒன்றில் வேலை செய்கிறார். அதோடு ஏரியாவாசிகளுடன் நட்பு பாராட்டி எல்லோருக்கும் பிடித்தமானவராகி விடுகிறார்.
அப்படிப்பட்ட அருள்நிதியுடன் சிறு வயதிலிருந்தே நட்போடு பழகி , குமரிப் பெண் ஆனதும் காதல் வயப்பட்டு அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார் நாயகி தான்யா. ஆனால் அருள்நிதியோ தான்யாவின் காதலை ஏற்க மறுக்கிறார். இதற்கிடையே தன் சொந்த வேலையாக ஊட்டிக்கு நடிகராகவே வரும் நடிகர் விவேக்கிடம் நண்பராகிறார் அருள்நிதி. அந்த நெருங்கிய நட்பின் அடிப்படையில் தான்யாவின் காதலை ஏற்க மறுக்கும் அருள்நிதியை எப்படியாவது அவருடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார் விவேக்.
ஆனால் முடியவே முடியாது என்று அடம்பிடிக்கும் அருள்நிதி அதற்கான காரணத்தை ப்ளாஷ்பேக்குடன் சொல்லும் போது கதையில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒருட்விஸ்ட். அது என்ன? தான்யாவின் காதல் கை கூடியதா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
வாய் பேச முடியாத, காது கேளாத கேரக்டரில் வசனங்களே இல்லாமல் வெறும் மெளனமொழிகளால் அருள்நிதி நடிப்பை வெளிப்படுத்துகிற விதம் குறை சொல்ல முடியாத நிறைவான நடிப்பு.
சசிகுமாரின் ”பலே வெள்ளையத் தேவா” படத்தில் அறிமுகமான தான்யாவுக்கு அந்தப் படத்தில் கிடைக்காத முக்கியத்துவம் இதில் கிடைத்திருக்கிறது. அவரும் இதுதான் சான்ஸ் என்று துறுதுறு பெண்ணாக அசால்ட் செய்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக்கின் பழைய ஃபார்முலா காமெடியை இந்தப்படத்தில் பார்த்து ரசித்துச் சிரிக்க முடிகிறது. ‘வாழ்க்கைங்கிறது வாழைக்காய் மாதிரி, நீளமா சீவினா பஜ்ஜி; குறுக்கே சீவினா சிப்ஸ்” போன்ற அவருக்கே உரிய தனித்தன்மையான காமெடி வசனங்களோடு படத்தில் நடிகராகவே வரும் விவேக்கின் ரசிகர் உடனான நட்பும், உரையாடலும் தமிழ்சினிமா ரசிகர்கள் பார்த்திராத சுவாரஷ்யங்கள்!
டவுட்டு செந்திலும், தலை வாசல் விஜய்யும் அளவாக வருகிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் சொல்லும் ப்ளாஷ்பேக் அருதப்பழசு தான் என்றாலும் அதை தன் நடிப்பால் வெளிப்படுத்தும் போது கண்கள் கலங்குவது நிச்சயம்.
ராதாமோகனின் படங்களில் நெகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. அதே நேரம் காமெடியும் தூக்கலாக இருக்கும். அது இந்தப்படத்திலும் இருக்கிறது. ஆனால் அவருடைய படங்களில் பார்த்து பார்த்து சலித்துப் போன நட்சத்திரங்களையும், அதே நாடகத்தனமான காட்சிகளையும் இதிலும் தொடர்ந்திருப்பது தான் பெரும் சோதனை.
எம்.எஸ்.விவேக் ஆனந்த்தின் ஒளிப்பதிவில் பல படங்களில் பார்த்த ஊட்டியை மீண்டும் ஒரு புதுப்படத்தில் பார்த்த உணர்வு மட்டும் தான். விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கவரத் திணறினாலும், பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
வசனங்கள் எப்போதுமே அழுத்தமாகவும், நிஜங்களை பேசுபவையாகவும், கைதட்டல்களுக்கு உரியவாகவும் இருப்பது தான் ராதாமோகன் படங்களில் ஸ்பெஷல். அந்த வகையில் இந்தப் படத்திலும் பொன். பார்த்திபனின் வசனங்கள் காமெடியும், உண்மையும் கலந்த வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகின்றன.
நிஜம் பேசும் வசனங்கள், காமெடி இழையோடும் திரைக்கதை, குடும்ப உறவுகளை நெகிழ்ச்சியாகக் காட்சிப்படுத்துதல் இவைதான் ராதாமோகனின் அடையாளம். அந்த அடையாளம் அச்சுப்பிசகாமல் இந்தப்படத்திலும் இருக்கிறது. அடுத்தடுத்த படங்களில் இதைக்கூட மாற்ற வேண்டாம்.  அட்லிஸ்ட் செட் பிராப்பர்ட்டி போல வரும் சில நடிகர், நடிகைகளையாவது மாற்றுங்களேன்..

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...