Friday 12 May 2017

திறப்பு விழா – விமர்சனம்

இந்தியா முழுவதுமுள்ள நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இருந்த டாஸ்மாக் கடைகளை உச்சநீதிமன்றம் மூட உத்தரவிட்டதும் அவை எல்லாவற்றையும் அருகில் இருக்கின்ற ஊர்களுக்குள் திறக்கிற வேலைகளை வேகமாகச் செய்து வருகின்றன மாநில அரசுகள்.

குறிப்பாக தமிழக அரசு இந்த வேலையை கண்ணும் கருத்துமாக செய்ய ஆரம்பித்திருப்பதால் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்களும், குழந்தைகளும், பொதுமக்களும் திரளாக வந்து போராட்டத்தில் ஈடுபடுவதோடு மட்டுமில்லாமல் அந்தக் கடைகளை அடித்து நொறுக்குகிற செயலிலும் இறங்கி வருகிறார்கள்.

இதனால் கடந்த சில நாட்களாகவே இந்த மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் குறித்த செய்திகள் ஊடகங்களில் தினந்தோறும் செய்திகளாக வருகின்றன.

அந்தளவுக்கு மனித குலத்துக்கு பெரும் அழிவைத் தரக்கூடிய மதுவுக்கு எதிரான ஒரு விழிப்புணர்வுப் படமாக வந்திருக்கும் படம் தான் இந்த ”திறப்பு விழா.”

கிராமம் ஒன்றில் புதிதாக திறக்கப்படும் மதுக்கடையில் விற்பனையாளராக வேலைக்குச் சேர வருகிறார் நாயகன் ஜெய ஆனந்த். என்னதான் மதுக்கடையில் வேலை செய்தாலும் குடிப்பழக்கம் அறவே இல்லாதவர். அதே சமயம் அந்த சரக்குகள் மீது 10 ரூபாய் அதிக விலைக்கு விற்று அந்தப் பணத்தை அதே ஊரில் வறுமையில் வாடும் குடும்பங்களுக்காகச் செலவிடுகிறார். அவரின் அந்த நல்ல குணத்தைப் பார்த்து காதலில் விழுகிறார் நாயகி ரஹானா.

இதற்கிடையே மதுக்கடையில் போலி சரக்கை குடித்து விட்டு நாயகியின் அப்பா ஜி.எம்.குமார் உட்பட கிராமத்தைச் சேர்ந்த சிலர் இறந்து விடுகிறார். அந்த விவகாரத்தில் கைதாகி பின்னர் ஜாமீனில் ஊருக்குள் திரும்பும் ஜெய ஆனந்த்தை ஊரை விட்டு மக்கள் வெளியேறச் சொல்கிறார்கள்.

ஆனால் அந்த போலி மதுவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றும் சொல்லும் ஜெய ஆனந்த் தான் யார்? அவருடைய குடும்பப் பின்னணி? எதற்காக இந்த ஊரில் உள்ள மதுக்கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்? என்கிற ரகசியத்தை ப்ளாஷ்பேக் போட்டுச் சொல்கிறார்.

அவரது கதையைக் கேட்டு மனம் மாறும் ஊர்மக்கள் அவரோடு சேர்ந்து அங்கிருக்கும் மதுக்கடையை மூட போராட்டத்தில் இறங்குகிறார்கள். அவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

பட்ஜெட் படங்களில் அதிக செலவும் இருக்காது. அதே போல நாயகன், நாயகிக்கு அதிக ஒப்பனையும் இருக்காது. இந்தப்படத்தின் ஹீரோவும் ஒரு கிராமத்து இளைஞராக மேக்கப் பார்க்காத முகமாக பொருத்தமான முகம். முதல் படம் என்றாலும் இது முதல் படம் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு முழுமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சில படங்களில் மனிஷாஜித் ஆக வந்த நாயகி தான் இந்தப்படத்தில் ரஹானாவாக வருகிறார். கிராமத்திலுள்ள சிறுவர், சிறுமிகளுடன் ஓடியாடி விளையாடுவதும், நாயகனை காதலிப்பதற்காக பின்னால் துரத்துவதுமாக துறுதுறுவென்று இருக்கிறார். கிளைமாக்ஸில் டாஸ்மாக் கடைக்கு எதிரான அவர் எடுக்கிற முடிவு அந்தோ பரிதாபம்.

விடிந்தால் திருமணத்தை வைத்துக் கொண்டு வீட்டில் இருக்கிற நெல்லை வி்ற்று காசாக்கிக் கொண்டு திரும்புகிற வழியில் மதுக்கடையைப் பார்த்ததும் சபலம் ஏற்பட அதனால் பணத்தை தொலைத்து விட்டு கண்ணீர் விட்டு கதறுகிற காட்சிகளும், தன்னால் தன் மகளின் திருமணம் நின்று போனதே என்று நினைத்து பசங்க சிவகுமார் எடுக்கிற முடிவும் அதிர்ச்சி.

அக்மார்க் கிராமத்து மண் வாசனையை தனது கேமரா வழியே திரையில் கொண்டு வந்த ஒளிப்பதிவாளருக்கும், அதற்கேற்ற பின்னணி இசையைக் கொடுத்த இசையமைப்பாளருக்கும் பாராட்டுகள்.

மதுக்கடை வேண்டாம் என்பது தான் மக்களின் எண்ணமாக இருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் கே.ஜி. வீரமணியும் அதையே தான் வலியுறுத்துகிறார்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் திரண்டிருக்கும் மக்களோடு மக்களாக இப்படக்குழுவும் சரியான நேரத்தில் இணைந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...