Sunday 23 April 2017

நகர்வலம் – விமர்சனம்


தண்ணீர் லாரியில் டிரைவராக வேலை செய்து வாழ்க்கையை ஓட்டும் நாயகன் பாலாஜிக்கும் அவர் தண்ணீர் லாரியை இயக்கும் ஏரியாவைச் சேர்ந்த கல்லூரி மாணவியான நாயகி தீக்‌ஷிதாவுக்கும் காதல் வருகிறது.

இருவருடைய காதலும் தீக்‌ஷிதாவின் அப்பாவுக்கும், ரெளடியாக இருக்கும் அவருடைய அண்ணனுக்கும், அரசியலில் பெரிய புள்ளியாக இருக்கும் சாதி வெறிப்பிடித்த சித்தப்பாவுக்கும் தெரிய வருகிறது.

ஒரு பக்கம் அப்பாவும், சித்தப்பாவும் ஹீரோவிடமிருந்து தீக்‌ஷீதாவை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். இன்னொரு பக்கம் தங்கச்சியின் உண்மையான காதலைப் புரிந்து கொண்டு அவளை ஹீரோ பாலாஜியுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார் அண்ணன்.

இதனால் சித்தப்பாவுக்கும், அண்ணனுக்கும் வருகிற மோதலில் காதலர்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே எதிர்பார்க்காத ட்வீஸ்ட்டோடு வரும் கிளைமாக்ஸ்.

‘காதல் சொல்ல வந்தேன்’ படத்துக்குப் பிறகு அப்படத்தின் நாயகன் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தண்ணீர் லாரியின் டிரைவர் கேரக்டருக்கு பொருத்தமான இளைஞனாகவும், ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான தனித்த அடையாளத்துக்கும் பொருத்தமாக வருகிறார்.

கேமரா கோணங்களில் க்யூட் கேர்ள் ஆக காட்சி தரும் நாயகி தீக்‌ஷிதா இளையராஜாவின் தீவிர ரசிகையாக காட்டப்படுகிறார். ஆனால் படத்தில் இளையராஜா பாடல்களை இன்னும் சில காட்சிகளில் கூடுதலாகச் சேர்த்து அதை பிரமாதப்படுத்தியிருக்கலாம்.

பாலாஜியின் நண்பர்களாக யோகிபாபுவும், பால சரவணனும் வருகிறார்கள். இருவருக்குமான காமெடி காட்சிகளில் அதிகம் வறட்சி மட்டுமே தெரிகிறது. குறிப்பாக மொட்டை நாக்கோடு படம் முழுக்க பேசும் யோகி பாபுவின் காமெடியை புரிந்து சிரிப்பது கடினம். அவரை நார்மலாகவே பேச விட்டிருந்தால் ரசிகர்களுக்கு கூடுதலாக சிரிக்கிற பாக்கியம் கிடைத்திருக்கும்.

நாயகியின் அண்ணனாக வரும் முத்துக்குமார், ரவி, ஜி.மாரிமுத்து, ‘அஞ்சாதே’ ஸ்ரீதர் ஆகியோரின் நடிப்பு நிறைவு. நமோ நாராயணன் எப்படி அவருடைய முந்தைய படங்களில் வருவாரோ? அப்படிப்பட்ட வழக்கமான கேரக்டரில் வந்து போகிறார்.

தமிழ்த்தென்றலின் ஒளிப்பதிவு சென்னையின் நெருக்கமான இடங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன. பவன் கார்த்திக்கின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் தான்.

தமிழ்சினிமாவில் வழக்கமாக வரும் காதல் கதை போல பார்த்து ரசித்த கதை என்பதால் திரைக்கதையையாவது கொஞ்சம் புதுமையாக அமைத்திருக்கலாம். ஆனால் அதிலும் மெனக்கிடாததால் படத்தின் காட்சிகளோடு ஒன்றிப்போவதென்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. சென்னையின் நெருக்கமான பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை முறை, கதாநாயகனின் தண்ணீர் லாரி டிரைவர் கேரக்டர், எதிர்பார்க்காத அந்த கிளைமாக்ஸ் ட்வீட்ஸ் ஆகியவை மட்டுமே ஆறுதல்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...