Friday 14 April 2017

பவர் பாண்டி – விமர்சனம்

இறுதி காலத்தை பற்றியும்   இருக்கலாம், கடந்த காலத்தை பற்றியும் இருக்கலாம். பெற்ற பிள்ளைகள் கடைசி காலத்துல நம்மை எப்படி பார்ப்பார்கள் என்பதாகவும் இருக்கலாம். இந்த பவர் பாண்டியும் அதுமாதிரியான ஒரு படமாக உருவாக்கியிருக்கிறார் நடிகர்  இயக்குனர் தனுஷ்.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை முற்றிலும் ஒழிந்து விட்ட நவீன வாழ்க்கை முறையில் தாங்கள் பாசத்தோடு பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளைகளாலேயே பெற்றோர்கள் கைவிடப்படும் அவல நிலைக்குக் காரணமான ஒவ்வொரு இளைஞனும் சிந்தித்துப் பார்க்கும்படி ஒரு யதார்த்தப்படமாக தந்திருக்கிறார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் நடிகர் தனுஷ்!

கதாநாயகனாக பல வெற்றிகளைப் பார்த்து விட்ட தனுஷ், இயக்குநராக அவதாரமெடுத்திருக்கும் தனுஷ் முதல் படத்திலேயே ‘விஷயமுள்ளவர்’ என்பதை நிரூபித்து வெற்றி இயக்குநராக பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். இனி இந்த மாதிரி வாழ்க்கையைப் பாடமாக்கும் படங்களை வருஷத்துக்கு ஒன்றாகத் தந்தால் கூட கோடி புண்ணியம் ப்ரோ!

சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான ராஜ்கிரண் வயதாகி விட்ட காரணத்தால் தன் மகன் பிரசன்னா வீட்டில் ஓய்வெடுக்கிறார். ஒரே மகன், மருமகள், இரண்டு பேரப்பிள்ளைகள் என்றிருக்கிறவர் அடிக்கடி வெளியில் சென்று அங்கு நடக்கும் அநியாயங்களைக் கண்டு அடிதடியிலும் இறங்குகிறார்.

அப்பாவின் இந்த நடவடிக்கை மகன் பிரசன்னாவுக்குப் பிடிக்காமல் போய் ஒரு கட்டத்தில் எரிச்சலடைகிறார். மகனின் அந்த கோப முகம் கண்டு பொறுக்க முடியாமல் சரக்கடித்து விட்டு வீட்டையே ரணகளம் செய்கிறார் ராஜ்கிரண். விடிந்ததும் தான் நடந்து கொண்ட விதத்தை நினைத்து குற்ற உணர்வோடு இருக்கும் அவர் தனக்கான சுதந்திர வாழ்க்கை இங்கில்லை என்று மகனுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு தனது முதல் காதலியை தேடி ஹைதராபாத் செல்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பதே கண்கலங்க நிறையும் கிளைமாக்ஸ்.

எத்தனை வயதானாலும் எல்லோருக்குள்ளும் இருக்கும் அந்த முதல் காதலின் ஸ்பரிசம் மனசுக்குள் ஆழப்பதிந்த ஒன்று. அந்தக் காதலை நினைத்துப் பார்த்து அசை போடுகையில் கிடைக்கிற சுகமே அலாதியானது. அப்படிப்பட்ட உண்மையான காதலின் நிஜத்தை எந்தவித பாசாங்கும் இல்லாமல் கொஞ்சம் கூட விதி மீறலும் இல்லாமல் கதையினூலே ஒரு அழகியலாகக் கொட்டித் தந்திருக்கிறார்கள். அந்த எபிசோடுகளில் ராஜ்கிரணும், ரேவதியும் காட்டியிக்கும் எக்ஸ்பிரஷன்ஸ்கள் அடடா… அடடா…!

ஸ்டண்ட் மாஸ்டர் என்கிற கேரக்டருக்கு பொருத்தமான உடல்வாகுடன் கன கச்சிதம் காட்டுகிறார் ராஜ்கிரண். பேரப்பிள்ளைகளை உள்ளார்ந்த அன்போடு கொஞ்சுகிற போதும், படப்பிடிப்பில் தன்னை மதித்து காலில் விழும் சக ஸ்டண்ட் மாஸ்டர்களின் அன்பு கண்டு பெருமிதத்தோடு காலார நடந்தே வீட்டுக்கு வருகிற போதும் அவர் காட்டுகிற மிடுக்கு செம செம!

குழந்தையைப் போல முகம் முழுக்க சிரிப்போடும், தனது முதல் காதலி ரேவதியைப் பார்த்த மாத்திரத்தில் அவர் கண்களில் காதலை வெளிப்படுத்துகிற போதும் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறார்.

சின்ன வயசு ராஜ்கிரணாக ப்ளாஷ்பேக் காட்சிகளில் வருகிறார் தனுஷ். மாஸ் ஹீரோவுக்கான பில்டப் ஓவராக இல்லாமல் அளவெடுத்தாற் போல வைத்திருக்கிறார். மடோனா வீட்டை விட்டு காரில் கிளம்புகிற போது சுவற்றுக்குப் பின்னால் மறைந்தபடியே காதலோடு கண்ணீர் வழிய எட்டிப் பார்க்கும் போது இந்த அற்புதமான காதல் ஜோடி ஒன்று சேரக்கூடாதா கடவுளே? என்று மனசு அடித்துக் கொள்கிறது!

பாவாடை தாவணியும் ரெட்டை ஜடையுமாக வரும் மடோனா மனசுக்குள் மத்தாப்புவாக ஜொலிக்கிறார். மகனாக வரும் பிரசன்னா இக்கால இளைஞர்களுக்கு படிப்பினை. அப்பாவின் கால்களை கட்டிப்பிடித்து அழுகிற போது தியேட்டரை அமைதி சூழ்கிறது! மருமகளாக அமைதியே உருவாக வருகிற சாயாசிங் பொருத்தமான தேர்வு.

கிராமத்தின் பகல் பொழுதின் புழுதி வாசனையைக் கூட தனது ஒளிப்பதிவில் நுகர வைக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். இளையராஜாவுக்குப் பிறகு நிஜமான கிராமத்து மண் மணக்கும் இசையை சமீபகாலமாக எந்த இசையமைப்பாளரிடமும் கேட்க முடிவதில்லை. அந்தக் குறையை இந்தப் படத்தில் முழுமையாக நிவர்த்தி செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். குறிப்பாக ப்ளாஷ்பேக் காட்சிகளில் வருகிற பின்னணி இசையும், ‘பார்த்தேன்’ மெலோடியும் மனசை உருக்குகிற மெல்லிசை! அனிருத் இடத்தை நிரப்ப நூறு சதவீதம் சரியான ஆள் தான்!

வருகிற காட்சி சிறியதாக இருந்தாலும் தனக்கே உரிய படபட பேச்சால் அசால்ட் செய்து விட்டுப் போகிறார் டிடி. தாத்தா மீது கொள்ளைப் பாசத்தை எந்த வித பாசாங்கும் இல்லாமல் காட்டும் அந்தக் பேரக்குழந்தைகள் மாஸ்டர் ராகவன், பேபி சவி ஷர்மா இருவரும் சோ கியூட்.

பக்கத்து வீட்டுப் பையனாக வரும் ரின்சன் வரும் காட்சிகள் எல்லாம் சிரிக்காமல் இருக்க முடியாது. ”அவங்களுக்கான வாழ்க்கையை நீ வாழ்ற, உனக்கான வாழ்க்கையை நீ எப்ப வாழப்போற?” என்று போகிற போக்கில் அவர் அடிக்கிற பஞ்ச்சுகளில் தான் எத்தனை எத்தனை உண்மைகள்! இப்படிப்பட்ட வசனங்களும் கூடுதல் ஈர்ப்பு.

அம்மாக்களையும், அம்மாக்களையும் அவர்களுக்கான வாழ்க்கையை வாழ நாம் போதிய சுதந்திரம் கொடுக்குறோமா?

இதுவரை இல்லை என்றாலும் இனிமேலாவது கொடுப்போம் என்கிற எண்ணத்தை இக்கால இளவட்டங்கள் மனசுக்குள் ஆழப்பதிக்கும் பவர்ஃபுல் படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...