Friday 7 April 2017

பிரபாஸ் - உலகமேங்கும் உற்று நோக்கும் உச்ச நட்சத்திரம்

பல தெலுங்கு வெற்றி படங்களில் நடித்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் தனது பிரம்மாண்ட நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உலகமே உற்று நோக்கும் உச்ச நட்சத்திரமானார்.


பிரம்மிப்பையும் பிரம்மாண்டத்தையும் இணை சேர்த்து அனைவரையும் கவர்ந்த S.S.ராஜமௌலியின் ’பாகுபலி’ படத்தின் வெற்றி உலகம் அறிந்ததே. தற்போது S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகமே பெரிதும் எதிர்பார்க்கும் 'பாகுபலி 2' திரைப்படம் உலகமெங்கும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ளது.


ஒவ்வொரு நடிகருமே ஒரு படத்தை ஒரு வருடத்துக்குள்ளாவது முடித்துவிட்டு, அடுத்த படத்துக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், 'பாகுபலி' 2 பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 3 ஆண்டுகள் ஒதுக்கி நடித்து முடித்துள்ளார் பிரபாஸ். படத்துக்கான அவருடைய உழைப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஒரு நடிகர் சினிமா மீது கொண்ட காதலினாலும் தனது ரசிகர்கள் மீது கொண்ட பாசத்தினாலும் இதையும் தாண்டி எதுவும் செய்யக்கூடுமா என்று அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்திருக்கிறது பிரபாஸின் உழைப்பு.


ஒரே படத்தில் 2 உடல் தோற்றங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் பட்ட கஷ்டங்கள் குறித்து அவருடைய உடற்பயிற்சியாளர் லட்சுமண் ரெட்டி, "பாகுபலி பாத்திரத்துக்காக கட்டுமஸ்தான உடலும், மகன் சிவடு பாத்திரத்துக்காக சற்று இளைத்தும் தெரியவேண்டும் என்று உழைத்தார். 4 வருடங்களாக அவருடைய உடலமைப்பை மாற்றிக் கொண்டே இருந்தார். அது மிகவும் கடினம்" என்று தெரிவித்தார்.


மேலும், 'பாகுபலி' படத்துக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வெற்றி பிரபாஸ் மீதான ஈர்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளதை பாலிவுட் திரையுலகம் உணர்ந்துள்ளது. பல்வேறு இயக்குநர்கள் அவரை இந்தி படத்தில் நடிக்க வைக்க அணுகிவருகிறார்கள். ஆனால், தெலுங்கில் 2 படங்கள் முடித்துவிட்டு நல்ல கதைகள் வந்தால் இந்தி திரையுலகிற்கும் தனது சிறகை விரிக்க திட்டமிட்டுள்ளார் பிரபாஸ்.


பிராபஸின் வியாபாரம் இந்தி திரையுலகின் கான் நடிகர்களுடைய வியாபாரத்தை மிஞ்சியிருப்பதாக 'பாகுபலி' ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். "பிரபாஸ் தான் இந்திய திரையுலகின் பெரிய நடிகராக பிரபாஸ் வளர்ந்துவிட்டார். அவருடைய படம் அநேகமாக முதன்முதலில் 1000 கோடியை தாண்டும் படமாக இருக்கும். அவரோடு சேர்ந்து பணியாற்றியிருப்பதில் மகிழ்ச்சி. அவ்வளவு எளிமையான மனிதர் அவர்." என்று கூறியுள்ளார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...