Saturday 18 March 2017

ஒரு முகத்திரை விமர்சனம்


நடிகர் ரகுமானுக்கு தற்போதுள்ள மார்க்கெட் நிலவரத்தை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக வெளியாகி இருக்கும் படம் தான் ‘ஒரு முகத்திரை’.. ரகுமானின் ஸ்டார் வேல்யூவை இந்தப்படத்தில் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்களா..? பார்க்கலாம்.

சைக்காலஜி மாணவி அதிதி கல்லூரியில் படிக்கும்போதே சென்னையில் உள்ள ரோஹித் என்கிற முகம் தெரியா வாலிபனுடன் பேஸ்புக் நட்பை தொடர்கிறார்.. அதிதியின் வேண்டுகோளை ஏற்று, தலைசிறந்த சைக்காலஜிகல் டாக்டர் ரகுமானை, அதிதியின் கல்லூரிக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதற்காக அனுப்பி வைக்கிறான் ரோஹித்…

படிப்பு முடிந்ததும் சென்னை வரும்படியும் அங்கிருந்து வெளிநாட்டு சென்று படிக்க ஸ்காலர்ஷிப் ஏற்பாடு செய்து தருவதாகவும் ரோஹித் தந்த வாக்குறுதியை நம்பி சென்னை வருகிறார் அதிதி.. ஆனால் சொன்னபடி ரோஹித் வரவும் இல்லை. அவனை தொடர்புகொள்ளவும் முடியவில்லை.. ஏதேச்சையாக அங்கு வரும் ரகுமான் அதிதியின் நிலையறிந்து அவரை தனது வீட்டில் தங்கவைக்கிறார்.

ரோஹித் என்ன ஆனான் என அதிதி குழம்பி தவிக்க, இன்னொரு பக்கம் அதிதியின் மேல் அன்பு காட்டும் ரகுமான், அவர் வெளிநாடு சென்று படிப்பதற்கான ஸ்காலர்ஷிப் தொகையை தானே செலுத்துகிறார்.. இந்த நேரத்தில், ஏதேச்சையாக ரகுமான்தான், தன உண்மை முகம் மறைத்து ரோஹித்தாக தன்னுடன் பேஸ்புக் நட்பில் இருப்பவர் என்பது அதிதிக்கு தெரிய வருகிறது..

டாக்டரின் இன்னொரு முகம் அறிந்த அதிதி அதிர்ச்சியானாலும், அதை வெளிக்காட்டி கொள்ளாமல், தனது சைக்கலாஜி படிப்பின் முதல் பரீட்சையாக, ஒரு சவாலாக இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு இந்த மெண்டல் கேமில் இறங்குகிறார். அதன்பின் இருவருக்கும் இடையே கொஞ்சம் டீசண்டாக ஆரம்பித்து போகப்போக திரில்லிங்காக மாறும் ஆடுபுலி ஆட்டம் தான் மீதிக்கதை.. இதில் இறுதி வெற்றி யாருக்கு என்பதை திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.. ப்ளீஸ்..

படம் சில வருடங்களுக்கு முன்பு எடுத்து கிடப்பில் இருந்தது நன்றாகவே தெரிகிறது. ரகுமானுக்கு தற்போது திடீரென உருவாகியுள்ள மார்க்கெட் வேல்யூவால், அவர் நடித்த ஏதோ ஒரு சாதாரண படத்தை தூசி தட்டி வெளியிட்டு விட்டார்களோ என நினைத்தால்.. ஸாரி.. அந்த எண்ணத்தை நிச்சயம் மாற்றிக்கொள்ளுங்கள்.. அருமையான த்ரில்லர் கதையில் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார் ரகுமான்.

கதாநாயகிகள் அதிதி ஆச்சார்யா, ஸ்ரீதேவிகா என இருவர் இருந்தாலும் படம் முழுவதும் வந்து நம் மனதை ஆக்கிரமிப்பவர் அதிதி தான். ரோஹித் என்கிற பெயரில் தன்னை ஏமாற்றும் நபர் ரகுமான் தான் என்று தெரிந்ததும், அதன்பின் அவரைவிட்டு விலகாமல் அவர் போக்கிலேயே சென்று அவருக்கே ஆட்டம் காட்டும் வேலைகளை செய்யும்போது, இந்தப்பெண்ணுக்கு எதற்கு இவ்வளவு குருட்டு தைரியம் என நினைக்க வைத்தாலும், ஒரு கட்டத்தில் அந்த துணிச்சலுக்காகவே சபாஷ் போட வைக்கிறார்..

பணம் வசதிக்காக, ஜஸ்ட் லைக் தட் காதலனை மாற்றும் ஸ்ரீதேவிகா வில்லி முத்திரையை அழுத்தமின்றி பதித்துவிட்டு செல்கிறார். ஸ்ரீதேவிகா, அவரால் காதலித்து ஏமாற்றப்படும் அர்ஜுன் என கிளைக்கதை ஒன்றை உருவாக்கி, அந்த அர்ஜுனை ரகுமானின் திட்டத்திற்கு பலிகடாவாக சேர்த்திருக்கும் இயக்குனரின் உத்தி தலையை சுற்றி மூக்கை தொடுவதாகத்தான் இருக்கிறது.

குறைந்த அளவே கேரக்டர்கள் படத்தில் இடம்பிடித்திருந்தாலும் சலிப்பு தட்டாதவாறு கதையை நகர்த்துவதில் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் செந்தில் நாடன்.. ஆனால் ரகுமானின் பலவீனத்தை சொன்னவர், அதற்கான காரணத்தை சரியாக பதிவு செய்யாமலேயே விட்டிருக்கிறார்… அதேபோல சைக்காலஜி டாக்டரான ரகுமானுக்கு அதிதியின் பிந்தைய நடவடிக்கைகள் ஒருவேளை இப்படி மாறினால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாமல் போவதாக காட்டியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கொஞ்ச நாட்களே பழகிய அதிதிக்காக அவ்வளவு பெரிய தொகையை அவர் அசால்ட்டாக தூக்கி தருவது அதிதி மீதுள்ள அவரது வெளிப்படுத்த முடியாத அன்பின் மதிப்பு என்பதையும் ஜீரணிக்க ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. குறிப்பாக சைக்காலஜிகள் த்ரில்லராக அருமையாக முடிந்திருக்க வேண்டிய படம், சைக்கோ த்ரில்லராக மாறியிருப்பது தான் படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயின்ட்..

என்ன ஒன்று… படம் ஓஹோவென ஹிட் ஆகுமா என தெரியாது.. ஆனால் படம் பார்க்கவரும் ரசிகனை போரடிக்காமல் இரண்டு மணி நேர த்ரில்லிங் அனுபவத்துக்கு நிச்சயம் ஆளாக்கும் என்பது மட்டும் உறுதி…

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...