Friday 3 March 2017

முப்பரிமாணம் – திரைவிமர்சனம்

காதல், ஆக்‌ஷன், நடிப்பு என்று சாந்தனு மட்டுமல்ல, நாயகி சிருஷ்டி டாங்கேவும் தனது அத்தனை திறமைகளையும் கொட்டியுள்ள படம் தான் இந்த ‘முப்பரிமாணம்’

சிறுவயது முதலே சாந்தனுவும், சிருஷ்டி டாங்கேவும் நண்பர்களாக இருக்க, சாந்தனுவின் குடும்பத்திற்கும், சிருஷ்டி டாங்கேவின் குடும்பத்திற்கும் இடையே பகை ஏற்படுகிறது.

பகையை கடந்தும் இருவருடமிடையே காதல் வளர, இந்த காதலால் தமது உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்று சிருஷ்டி டாங்கே சொல்ல, காதலைக் காட்டிலும் காதலியின் உயிர் முக்கியம் என்று காதலை விட்டுக் கொடுத்துவிட்டு கவலையில் போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார் சாந்தனு.

ஆனால், சிருஷ்டி டாங்கேவோ எந்தவித கவலையும் இல்லாமல், வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொள்ள தயாராக, சாந்தனு அவரை கடத்துவதுடன் கொலை செய்யவும் முடிவு செய்கிறார். காதலியின் உயிருக்காக காதலையே விட்டுக் கொடுத்த சாந்தனு சிருஷ்டி டாங்கேவை கொலை செய்ய என்ன காரணம், கொலை செய்தாரா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள இப்படத்தின் இயக்குநர் அதிரூபன், தனது குருநாதரின் பெயரைக் காப்பாற்றுவதற்காக பல காட்சிகளை ரியலாக படமாக்கியுள்ளார். இயக்குநரின் அதிரடிக்கு ஈடுகொடுத்து நடித்துள்ள நட்சத்திரங்களின் உழைப்பை பாராட்டியாகவே வேண்டும்.

சாக்லெட் பாயாக படத்தின் முதல் பாதியில் வரும் சாந்தனு, இரண்டாம் பாதியில் அசல் பாலா பட ஹீரோவைப் போல அதிரடியாக வந்து மிரட்டுகிறார். ஹீரோவுக்கு இணையாக ஹீரோயினின் வேடம் இருந்தாலும், அந்த வேடத்தில் சிருஷ்டி டாங்கே ஜொலிக்கவில்லை.

சிருஷ்ட்டி டாங்கேவின் அண்ணனாக நடித்துள்ள ரவி பிரகாஷின் வில்லத்தனம் ரசிக்கும்படியாக உள்ளது. அப்பு குட்டி, தம்பி ராமையா, லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் இருந்தாலும் படத்தில் காமெடிக்கு பெரும் பஞ்சம்.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் ஓரளவு என்ற நிலையில் இருந்தாலும், பின்னணி இசையில் காட்சிகளுக்கு கனம் சேர்த்துள்ளார். ராசாமதியின் ஒளிப்பதிவு படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு மூன்று பரிமாணங்களாக படத்தை வேறுபடுத்தி காட்டுகிறது.

காதல், ஊடல் என்று முதல் பாதி படம் சற்று தடுமாற்றத்துடன் பயணித்தாலும், சிருஷ்டி டாங்கேவை சாந்தனு கடத்திய பிறகும், அதற்கான சஸ்பென்ஸ் உடையும் போதும் படம் விறுவிறுப்படைகிறது. இருந்தாலும் படத்தில் வரும் சில தேவையற்ற காட்சிகள் படத்திற்கு வேகத்தடையாக அமைகிறது. இருப்பினும், கிளைமாக்ஸில் இயக்குநர் கைதட்டல் பெற்றுவிடுகிறார்.


மொத்தத்தில் முப்பரிமாணம் காதலியால் கழட்டிவிடப்பட்ட ஆண்களுக்கு சமர்ப்பணம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...