Tuesday 7 February 2017

இடது கை பழக்கமுள்ள ஒரு பிக் பாக்கெட் திருடனை மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது 'பீச்சாங்கை' திரைப்படம்

வித்தியாசமான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய தயாராக இருக்கின்றது, அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி இருக்கும் 'பீச்சாங்கை' திரைப்படம். இந்த படத்தை 'கர்ஸா என்டர்டைன்மெண்ட்' சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் 'பி ஜி மீடியா ஒர்க்ஸ்' சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.


புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த 'பீச்சாங்கை' படத்தில் எம் எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, பையா பொன்முடி, ஜோசப், கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர் கெளதம் ராஜேந்திரன் (அறிமுகம்), இசையமைப்பாளர் பால முரளி பாலு (அறிமுகம்) மற்றும் படத்தொகுப்பாளர் (அறிமுகம்) ஜோமின் மேதில் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த 'பீச்சாங்கை' படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.


"எங்கள் படத்தின் கதாநாயகன் இடது கை பழக்கம் உள்ள ஒரு பிக் பாக்கெட் திருடன். தான் செய்யும் திருட்டு தொழிலை மிகவும் கௌரவமாக கருதும் அவனுக்கு, ஒரு கட்டத்தில் 'ஏலியன் ஹாண்ட் சின்ட்றோம்' என்கின்ற ஒரு குறைபாடு ஏற்படுகின்றது. அதன் பின் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் 'பீச்சாங்கை' படத்தின் கதைக்களம் நகரும். கதாநாயகன் - கதாநாயகி உட்பட எங்களின் படத்தில் பணிபுரிந்திருக்கும் பெரும்பாலான தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் புதுமுகங்கள் தான். நிச்சயமாக இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'பீச்சாங்கை' படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான பி ஜி முத்தையா.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...