Sunday 25 December 2016

கத்தி சண்டை – விமர்சனம்

கண்டெய்னர் லாரி ஒன்றை மடக்கும் டெபுடி கமிஷனர் ஜெகபதி பாபு அதில் சிக்கும் 50 கோடி ரூபாயை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார்.

அவரின் தங்கையான தமன்னாவை உனக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்கு என்று பொய் சொல்லி காதலிக்கிறார் ஹீரோ விஷால்.

தங்கையை துரத்தும் விஷாலை ரெளடிகளை வைத்து மிரட்டிப் பார்த்தும் தன் காதலில் விஷால் உறுதியாக இருப்பதை அறிந்து கொள்ளும் ஜெகபதி பாபு இருவரின் காதலுக்கும் க்ரீன் சிக்னல் கொடுக்கிறார்.

இன்னொரு பக்கம் பணத்தை இழந்து சிறையில் இருக்கும் வில்லன் டெபுடி கமிஷனர் ஜெகபதிபாபுவை ஆட்களை வைத்து கடத்தி பணம் கேட்டு மிரட்டுகிறார்.

அவர்களிடமிருந்து ஜெகபதிபாபுவை காப்பாற்றி வீட்டுக்கு கூட்டி வரும் விஷால் அரசாங்கத்திடம் ஒப்படைத்தது 50 கோடி, ஆனால் அந்த கண்டெய்னரில் இருந்தது மொத்தம் 300 கோடி. அப்படியானால் அந்த மீதி 250 கோடி ரூபாயை எங்கே? என்று கேட்க, அதிர்ச்சியடையும் ஜெகபதி பாபு ”யார்டா நீ” என்கிறார்.

நான் சி.பி.ஐ ஆபீசர் என்று சொல்லும் விஷால் அந்த நொடியே அவர் வீட்டை ரெய்டு செய்து கிடைக்கிற பணம், நகை அத்தனையையும் அள்ளிக் கொண்டு போகிறார். அவர் போன பிறகு தான் தெரிகிறது விஷால் சி.பி.ஐ ஆபீசரே இல்லை என்கிற விஷயம்!

அப்படியானால் விஷால் யார்? வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு போன கோடிக்கணக்கான ரூபாய் என்னவானது? என்பதே ப்ளாஷ்பேக்குடன் விரியும் கிளைமாக்ஸ்.

தனக்கு என்ன வருதோ அதை மட்டுமே செஞ்சிட்டுப்போவோம் என்பதெல்லாம் சரி தான். அதற்காக நடிக்கிற படங்களில் எல்லாம் ஒரே மாதிரியான கேரக்டராக நடித்தால் ரசிகர்கள் டென்ஷன் ஆவதைத் தவிர வேறு வழியே இல்லை. இதுபோன்ற கேரக்டரை விடுங்கள் அதிரடி, அப்பாவி என மாறி மாறி விஷால் நடித்த படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட இந்த வகையறா தான். இருந்தாலும் படத்துக்கு மூன்று ஸ்டண்ட் மாஸ்டர்கள், இதுபோதாதா? விஷால் வில்லன்களுக்கு விடுகிற பஞ்ச்சில் தியேட்டரே உச்சக்கட்ட அதிர்வில் புரள்கிறது!

இடைவேளை வரை சூரியும், இடைவேளைக்குப் பிறகு வடிவேலுமாக பிரித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுராஜ். ”வைகைப்புயல் கம்பேக்” என்று படத்துக்கு கூவிக்கூவி விளம்பரம் செய்யப்பட்டாலும் ரசிகர்களை நிஜமாகவே சிரிக்க வைப்பதில் வடிவேலுவை விட சூரிதான் ஒருபடி மேல்.

சுண்டி விட்டால் ரத்தம் தெறிக்கிற அழகோடு வரும் தமன்னாவை வஞ்சனையில்லாமல் கவர்ச்சி காட்ட வைத்திருக்கிறார்கள். அவரும் அசராமல் அரைக்காலை விட சின்னதாய் டவுசரைப் போட்டுக் கொண்டு தாராளமாக காட்டியிருக்கிறார். ரசிக ஜனங்கள் குளிருக்கு இதமோ இதம்.

டாக்டர் பூத்ரி கேரக்டரில் வருகிறார் வடிவேலு. என்னதான் கம்பேக் காமெடியானாக இருந்தாலும் பெருத்த எதிர்பார்ப்போடு தியேட்டருக்குப் போனால் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்வதில் சற்றே தடுமாறிருக்கிறார். உடம்பைக் குறைத்து, குரல் டோனையும் கொஞ்சம் மாற்றினால் நல்லது.

ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசை ஆக்‌ஷன் படத்துக்குரிய அதிர்வை மிச்சம் வைக்காமல் திரையில் ஒலிக்க விடுகிறது. ”நான் கொஞ்சம் கறுப்பு தான்” பாடல் இந்நேரம் இளவட்டங்களின் காலர் ட்யூனாக செட் செய்யப்பட்டிருக்கும்!

விஜய்யின் கத்தி பட பாணியின் ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்காக போராடும் ஹீரோவின் கதையாக இருந்தாலும் படத்தில் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிற விதத்தை தைரியமான படம் பிடித்துக் காட்டி ரசிகர்களை யோசிக்க வைத்த விதத்தில் இந்த ‘கத்தி சண்டை’ ‘புத்தி சண்டை’யாக மாறி ரசிக்க மட்டுமில்லாமல் யோசிக்கவும் வைத்திருக்கிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...