Friday 28 October 2016

கொடி – விமர்சனம்

தனுஷின் முதல் டூயல் ரோல் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்த படம்!

கருணாஸூக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் மூத்தவர் தனுஷ் கொடி, இளையவர் தனுஷ் அன்பு.

அண்ணன் கொடி பெயருக்கு ஏற்ற மாதிரியே எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவராக இருக்கும் கட்சியில் சேர்ந்து, அதே கட்சியில் தொண்டனாக இருந்து உயிரை விட்ட தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு மெல்ல மெல்ல முன்னேறி கட்சியில் இளைஞர் அணி தலைவர் ஆகிறார்.

இவருக்கும் ஆளும் கட்சியில் மேடைப் பேச்சாளராக இருக்கும் த்ரிஷாவுக்கும் லவ். இளையவரான அன்பு ஒரு கல்லூரியில் புரொபஸராக வேலை செய்கிறார். இவருக்கும் பிராய்லர் கோழி முட்டைகளை கலர் மாற்றி நாட்டுக்கோழி முட்டை என்று சொல்லி விற்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கும் லவ்.

பாதரசக் கழிவுகளால் ஊர் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மூடப்பட்டிருந்த ஒரு தொழிற்சாலை பற்றிய ஆதாரங்கள் தம்பி தனுஷ் மூலம் அரசியல்வாதி அண்ணன் தனுஷுன் கைக்கு கிடைக்கிறது. அதில் அவர் இருக்கும் கட்சியைத் சேர்ந்த தலைவர் உட்பட பலரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

இந்த ரகசியத்தை ஆளும் கட்சியைச் சேர்ந்த தன் காதலியான த்ரிஷாவிடம் யதேச்சையாகச் சொல்ல அவரோ அதை மீடியாக்களிடம் பேசி தன் கட்சி சார்பில் தான் போட்டியிடும் எம்.எல்.ஏ தேர்தலுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார். இதனால் தனுஷுக்கு அவர் கட்சியில் நெருக்கடி ஏற்படுகிறது.

அந்த நெருக்கடிகளிலிருந்து தப்பித்து அரசியலில் தனுஷின் கொடி உயரப் பறந்ததாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

அரசியல்வாதி கொடி; கல்லூரி பேராசியர் அன்பு என இரட்டை வேடங்களில் அசத்தியிருக்கிறார் தனுஷ். இரண்டு கேரக்டருக்கும் குரல் ஒன்று தான் என்றாலும் வசன உச்சரிப்புகளில் வித்தியாசம் காட்டி ரசிக்க வைக்கிறார்.

தாடி, மீசையோடு வெள்ளை வேட்டி, சட்டையோடு வந்தால் அண்ணன் கொடி தனுஷ்; க்ளீன் ஷேவ் செய்து பேண்ட் சட்டையோடு வந்தால் இளையவர் தனுஷ். நல்லவேளையாக இரட்டை கேரக்டர்களுக்கு வித்தியாசம் காட்டுகிறேன் பேர்வழி பதற வைக்கும் மேக்கப் இல்லாதது சிறப்பு.

கதை அரசியலைப் பற்றி பேசுவதால் இளையவர் தனுஷை விட மூத்தவர் கொடி தனுஷைச் சுற்றித்தான் கதை நகர்கிறது. அவருக்குத்தான் காட்சிகளும் அதிகம். அண்ணன் கொடி தனுஷ் திரையில் செம கெத்தாக எண்ட்ரி கொடுக்கும் போதே தியேட்டரில் விசில், கைதட்டல் சத்தம் காதைக் கிழிக்கிறது!

‘அரண்மனை 2’ வில் ஆவியாக பார்த்த த்ரிஷாவை இதில் அரசியல்வாதியாக பார்க்கலாம். பதவிக்காக எந்த லெவலுக்கும் இறக்கும் ஒரு தைரியமான பெண் அரசியல்வாதி அவர். லோ வெயிட்டில் அவரை பார்க்கும் போது பல காட்சிகளில் சிரிப்பை வரவழைத்தாலும் ஆக்ரோஷமான எக்ஸ்பிரஸன்கள் மூலம் அந்தக் குறை பெரிதாகத் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.

‘பிரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் இளைய தனுஷுக்கு ஜோடி. இவர் வரும் காட்சிகளில் துறுதுறுப்பான நடிப்பால் வசீகரம் செய்கிறார். குறைவான காட்சிகளிலும் நடிப்பில் நிறைவு.

வழக்கமாக பல படங்களில் பார்க்கும் ஹீரோக்களின் அம்மாவைப் போலவே இந்தப் படத்திலும் வந்து போகிறார் சரண்யா பொன் வண்ணன். எதிர்கட்சித் தலைவராக வரும் எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான வில்லத்தனம்! மாரிமுத்து, விஜயகுமார், காளி வெங்கட் என மற்ற கேரக்டர்களும் அவர்கள் வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பின்னணி இசை மாஸ் படத்துக்குரிய மிரட்டல். பாடல்களில் ”ஏ சுழலி” மனசை உருக்கும் மெலோடி! இரட்டை தனுஷூக்கும் இடையே உள்ள வேறுபாட்டையே ஈஸியாக கண்டுபிடிக்கிற வைகையில் தேர்ந்த ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் எஸ்.வெங்கடேஷ்

தொழிற்சாலை கழிவுகள் பிரச்சனை, அரசியலில் நீயா நானா போட்டி என சீரியஸான மேட்டரை கமர்ஷியல் கலந்து பக்கா அரசியல் படமாக தந்திருக்கிறார் இயக்குநர் துரை. செந்தில்குமார். ‘எல்லோரும் பொறக்கும் போது ‘சிங்கிள்’ தான். நான் பொறக்கும் போதே டபுள்ஸ்”, “சேர்க்கிறதுக்கு பேரு கூட்டம் இல்ல; சேர்றதுக்கு பேர் தான் கூட்டம் ” என தனுஷ் பேசுகிற பஞ்ச்சுகளுக்காகவே தனுஷின் கொடி ரொம்பவே உயரப் பறக்கிறது!!

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...