Sunday 16 October 2016

அம்மணி – விமர்சனம்

எளிய மனிதர்களின் வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை கதைகள். அப்படி ஒரு சொந்தக் கதையோடு ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு வந்த வாலாம்பா என்ற பாட்டியின் வாழ்க்கை தான் இந்த ‘அம்மணி’.

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படங்களைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வந்திருக்கும் மூன்றாவது படம்.

அரசு பொது மருத்துவமனையில் துப்புறவு வேலை செய்யும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தலைக்கு மேல் வளர்ந்த இரண்டு மகன்கள். மூத்தவன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவன் என்பதால் தான் சொந்தமாக கட்டிய வீட்டை ஆட்டோ ஓட்டும் இளைய மகன் நிதின் சத்யா பெயரில் எழுதி கொடுத்து விடுகிறார். இதனால் இரண்டு மகன்கள், அவர்களுடைய பொண்டாட்டிகள் மத்தியில் சண்டை எழுகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டை எழுதி வாங்கிய நிதின் சத்யா அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன், அண்ணன் குடும்பம் என எல்லோரையும் வீட்டை விட்டு அனுப்பி விடுகிறான்.

இளைய மகனின் சுயநலத்தால் மனசு உடைந்து போகும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது வீட்டிலேயே யாரும் இல்லாத அனாதை போல குப்பை பொறுக்கி இறுதிக் காலத்தை ஓட்டிய பாட்டி சுப்புலட்சுமியின் வாழ்க்கையைப் பார்த்து ஒரு அதிரடி முடிவை எடுக்கிறார்?

அந்த முடிவு என்ன என்பதே கிளைமாக்ஸ்.

இரண்டு மகன்கள், மருமகள்கள், மகள் என ரத்த சொந்தங்கள் அத்தனை பேரும் அருகில் இருந்தும் நிம்மதியில்லாத வாழ்க்கை வாழும் ஒரு பெண்மணி. வசதியான குடும்பத்தில் பிறந்தும் யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழும் காலம் வரை வாழ்க்கையை சந்தோஷமாக அனாதை போல வாழும் ஒரு வயதான பாட்டி என இரண்டு பெண்களின் வெவ்வேறு வாழ்க்கைப் பயணத்தை எவ்வளவு தூரத்துக்கு யதார்த்தமாக தர முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு சுவாரஷ்யமான திரைக்கதையமைப்போடு படமாக்கித் தந்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இதில் சாலம்மா கேரக்டரில் வியாசர்பாடி பகுதியில் வாழும் சேரிப் பெண்மணியாக லட்சுமி ராமகிருஷ்ணனே நடித்திருக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சுப்புலட்சுமி என்ற பாட்டி தான் படத்தின் டைட்டில் ‘அம்மணி’.சேரிப்பகுதியில் வாழும் ஒரு நடுத்தர வயதுக்குரிய பெண்ணின் மேக்கப் மட்டுமில்லாமல் நடை, உடை, பாஷை என எல்லா விஷயங்களிலும் மெனக்கிட்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதேபோல முதுகில் ஒரு கோணிப்பையை மாட்டிக்கொண்டு நடந்து போகிற காட்சிகளிலும், ரயில்வே ட்ராக் ஓரத்தில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு கடந்து செல்லும் ரயிலைப் பார்த்து வெள்ளந்தி சிரிப்புடன் கையசைக்கிற காட்சிகளிலும் ரசிகர்களின் மனசுக்கு ரொம்பவே நெருக்கமானவராகி விடுகிறார் அம்மணியாக வரும் சுப்புலட்சுமி பாட்டி!

அம்மாவின் ஓய்வூதியப் பணத்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று பெற்ற பிள்ளைகள் செய்யும் போலியான உபசரிப்புகளும், புண்சிரிப்புகளும் இளைய மகனாக வரும் நிதின் சத்யா மூத்த குடிகார மகனாக வரும் செல்வம், மருமகள்களாக வரும் ரேணுகா, எஸ்.அன்னம் ஆகியோர் கேரக்டர்களில் பளிச்சிடுகின்றன.

முதல் பாதியில் கொஞ்சம் ‘சீரியல்’தனம் தெரிந்தாலும் கே வின் ரம்மியமான பின்னணி இசையில் அந்தக் குறையை நாம் கடந்து விடுகிறோம். படத்தின் யதார்த்தமான காட்சி நகர்வுகளுக்கு கே பின்னணி இசையும், இம்ரான் ஹமத்.கே.ஆரின் ஒளிப்பதிவும் பக்க பலம்.

”மழை இங்கில்லையே, வெய்யிலும் இல்லையே வானவில் வந்ததே ஏன் அம்மணியே…!” என்கிற நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் மெல்லிசையாக ஒலிக்கிறது.

”வலையில மீன் மாட்டட்டும் அப்புறம் குழம்பு, வறுவல பத்தி முடிவு பண்ணலாம்” ”கண்ண மூடி போயிட்டா அமைதியா போறமா, ஆரவாரமா போறமான்னு யாருக்குத் தெரியும்?” ”நம்ம நாட்டு பிரதமரே குப்பை பொறுக்கதான் சொல்றார்டி” ”இந்த வெளிச்சம் போன நிழல் கூட சொந்தமில்லை” என வசனங்கள் வருகிற இடங்களிலெல்லாம் கைதட்டல்களை அள்ளுகின்றன.

வழக்கமான கமர்ஷியல் சமாச்சாரங்கள் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும் மனசை விட்டு வெளியேறாமல் ஒரு கணம் மெளனமாய் நம்மை யோசிக்க வைக்கிற இடத்தில் ரசிகர்களின் மனசை முழுவதுமாக ஜெயிக்கிறாள் இந்த அம்மணி.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...