Sunday 24 April 2016

வெற்றிவேல் – விமர்சனம்


புதுசா எதையாவது முயற்சி பண்ணப் போய் எசகு பிசகாக மாட்டிக்கொள்கிற ரகமாகத் தான் ‘தாரைதப்பட்டை’யில் ஆகி விட்டிருந்தார் சசிகுமார். நல்ல வேளையாக அறிமுக இயக்குநர் வசந்தமணி மீண்டும் அவரை அவருக்கான ரூட்டிலேயே கூட்டி வந்து விட்டுருக்கிறார்.

என்ன இதில் கொஞ்சம் ஓப்பனிங் சாங் பில்டப், உட்பட சில மாற்றங்களை மட்டுமே செய்து அக்மார்க் சசிகுமாரின் படமாகவே வந்திருக்கிறது இந்த ‘வெற்றிவேல்’.

ஊரில் படிக்காமல் உரக்கடை வைத்திருக்கும் சசிக்கு அதே ஊரில் உள்ள வேளாண்மை கல்லூரியில் படிக்க வரும் மியா ஜார்ஜை பார்த்தவுடன் காதல் வருகிறது. விவசாயம் சம்பந்தமாக டவுட்டுகளை கேட்கப் போகிறேன் கல்லூரிக்குள் நுழைகிறவர் அடுத்தடுத்து பால்களைப் போட்டு மியாவின் காதலை வாங்கி விடுகிறார்.

”அக்காவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதை பார்க்கப் போகிறேன். வருவதற்கு பத்து நாட்கள் ஆகும்” என்று சொல்லி விட்டுப் போகிறார் மியா ஜார்ஜ். அந்த இடைவெளியில் சசி தன் தம்பியின் காதலுக்கு உதவப்போய் ஆரம்பமாகிறது பிரச்சனை?

அதே ‘நாடோடிகள்’ கோஷ்டியை களமிறக்கி தம்பி காதலிக்கும் பெண்ணை கடத்தச் சொல்ல, பெண் மாறிப்போகிறார். ”இன்னும் மூணு நாள்ல எனக்கு கல்யாணம். என்னை ஊர்ல என்ன நெனைப்பாங்க?” என்று பரிதாபத்தோடு கேட்கிறார் கடத்தப்படும் இன்னொரு நாயகி நிகிலா.

தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக அவளையே திருமணம் செய்ய வேண்டிய நிலை சசிகுமாருக்கு! பத்து நாட்கள் கழித்து திரும்பி வரும் மியா ஜார்ஜ் சசியின் ப்ளாஸ்பேக்கை கேட்டு கண்களில் கண்ணீரோடு நிற்கிறார். மியாவின் காதல் என்னவானது? திட்டமிட்டபடி சசிகுமார் தம்பியின் காதல் நிறைவேறியதா? என்பதே கிளைமாக்ஸ்.

படம் முழுக்க ‘தேவர் மகன்’ படத்தின் வாடை வீசுவதை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் தனது நேர்த்தியான திரைக்கதையால் சரி விடுங்க… என்று ரசிகர்களை சமாதானம் சொல்லிக்கொள்ள வைத்து விடுகிறார் இயக்குநர்.

‘வெற்றிவேல்’ ஆக வரும் சசி வேட்டி, சட்டையில் கன கச்சிதம். ரஜினி லெவலுக்கு ஓப்பனிங் சாங் வைத்து பில்டப்பெல்லாம் கொடுத்தாலும் வில்லனிடம் வாங்கிக் கட்டுகிற காட்சிகளில் கதைக்காக கொஞ்சம் ஹீரோவுக்கான கெத்தையும் விட்டுக் கொடுத்திருக்கிறார்.

அவரது காதலியாக வரும் மியா ஜார்ஜ் கேரள பெண்ணாகவே படத்திலும் வருகிறார். ”முத்தல் முகம்” அப்பட்டமாக ஸ்க்ரீனில் தெரிந்தாலும், சசிக்கு காதலி என்பதால் மன்னித்து விடலாம். பட் அவர்களுக்கிடையே உள்ள காதலில் புதுமை என்று எதுவுமில்லை.

சசியின் திடீர் மனைவியாக வரும் நிகிலா சில காட்சிகளில் கண் கலங்குகிறார். திருமணத்துக்குப் பிறகு சசியே உயிர் என மெல்ல மெல்ல அவரை புரிந்து கொள்ளும் பக்குவத்தில் குடும்பப் பெண்ணாக நம்மை ஈர்க்கிறார்.

சசியின் தம்பியாக வரும் ஆனந்த் நாக்- அவருடைய காதலி வர்ஷா இளவட்ட காதலால் இரண்டு குடும்பங்கள் சந்திக்கும் சாதிப் பிரச்சனைகளை காட்டியிருக்கிறார்கள்.

சமுத்திரக்கனி விஜய் வசந்த் உள்ளிட்ட ‘நாடோடிகள்’ கோஷ்டி இதில் பெண்ணை கடத்துகிற காட்சியில் சீரியஸாக வந்து, பின்னர் காமெடி பீஸ் ஆகி விடுகிறார்கள்.

படத்தின் ஆரம்பத்திலிருந்தே கம்பீரத்துடன் வரும் பிரபு கிளைமாக்ஸில் ”ப்ளீஸ் என் பொண்ணை காப்பாத்துங்க…” என்று ஹீரோவிடம் வந்து நிற்கும் காட்சியில் வெயிட் இறங்கி விடுகிறார்.

வில்லியாக வரும் விஜி கிராமத்து பொம்பளைக்கே உரிய அதே பழி வாங்கும் எண்ணத்துடனும், வைராக்கியத்துடனும் இருப்பது மிரட்டல். ஒரு இளம் பெண்ணை கட்டிக்கொண்டு அவளை நான்கு பேரிடமிருந்து பாதுகாக்க தம்பி ராமையா படுகிற பாடு அத்தனையும் காமெடிக்கு கியாரண்டி!

டி.இமானின் இசையில் வழக்கமான அதே பின்னணி அடி, அதே கேட்டு கேட்டு சலித்துப் போன ட்யூன்கள்! ஆனாலும் ரசித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் மனசுக்கு இதம்.

வசந்தமணியின் வழக்கமான கிராமத்து பின்னணி திரைக்கதையில் சிலாகிக்க ஒன்றுமில்லை, என்றாலும் அங்கங்கே சில ட்விஸ்ட்டுகளை வைத்து ரசிக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...