Saturday 1 August 2015

ஆரஞ்சு மிட்டாய் திரை விமர்சனம்

108 ஆம்புலன்ஸ் வண்டியில் பணிபுரியும் சத்யாவுக்கும் (ரமேஷ் திலக்) காவ்யாவுக்கும்(அஷ்ரிதா) லவ். ஆனால் காவ்யாவின் அப்பாவோ, சத்யாவிடம் ‘அந்த வேலையை விட்டு விட்டு தனது கடை கண்ணிகளை பார்த்துக் கொள்ள சம்மதித்தால் தன் மகளை திருமணம் செய்து வைக்கிறேன்’ என்கிறார்.

சத்யா மிகுந்த மனக் குழப்பத்துக்கு ஆளாகி இருக்கும் சூழலில் அவனுக்கும் அவனது நண்பனும் ஆம்புலன்ஸ் டிரைவருமான ஆறுமுகத்துக்கும் (ஆறு பாலா), பக்கத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கைலாசம் என்ற முதியவரை (விஜய் சேதுபதி) மருத்துவமனைக்கு அழைத்து வரும் பணி தரப்படுகிறது .

நகரை ஒட்டிய ஒரு கிராமத்தில் பெரிய வீட்டில் தனியாக வாழும் கைலாசத்தைப் போய்ப் பார்த்தால் அவர் அகம்பாவம் பிடித்த மனிதராக இருக்கிறார் . இதுவரை 27 முறை ஹார்ட் அட்டாக்குக்கு ஆளாகி இப்போது 28 ஆவது முறை ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக கூறும் அவர், மிக இயல்பாக எதோ சினிமாவுக்கு கிளம்புவது போல மருத்துவமனைக்குக் கிளம்புகிறார்.

அம்புலன்சில் வரும்போதே சத்யா, ஆறுமுகம் , வழியில் சந்திக்கும் போலீஸ் அதிகாரி எல்லோரிடமும் வம்பு இழுக்கிறார். அவரை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது . அவரது இந்த கர்வக் குணம் உள்ளிட்ட பல செயல்பாடுகள் காரணமாக அவரது மகன் உட்பட அனைத்து உறவுகளாலும் புறக்கணிக்கப்பட்டவராக இருக்கிறார் அவர்.

மருத்துவ மனைக்கு வந்ததும் கைலாசத்தைப் பரிசோதித்த டாக்டர் மிக ஆபத்தான நிலையில் கைலாசம் இருப்பதை சொல்கிறார் ஒரு நிலையில் அவரது அடிப்படைக் குண இயல்புகள் சத்யாவுக்குப் புரிய ஆரம்பிக்கிறது.

சத்யாவை அவமானப்படுத்தும் டாக்டரை கண்டித்து அதனால் பாதிக்கப்படுவது, காவ்யாவுடனான சத்யாவின் கல்யாண பிரச்னைக்கு தீர்வு கிடைக்க காரணமாக இருப்பது ஆகியவை நடக்கும்போதுதான் அவர் அடிப்படையில் நல்லவர் என்பது புரிகிறது.

யாருமே இல்லாத தனிமை காரணமாகவே அடிக்கடி இப்படி உடம்பு சரியில்லாததைப் பயன்படுத்தி 108 மருத்துவ நபர்களை வர வரவைத்து அவர்களோடு இருப்பதுவும் புரிகிறது.

அவர் மீது உண்மையாகவே சத்யாவுக்குப் பாசம் வரும் நிலையில் அடுத்து என்ன என்பதுதான்…

விஜய சேதுபதி புரடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் விஜய் சேதுபதியும் அவரது நண்பர் காமன் மேன் பி.கணேஷும் இணைந்து தயாரிக்க விஜயசேதுபதி, ரமேஷ் திலக், ஆறு பாலா, அஷ்ரிதா ஆகியோர் நடிக்க, விஜய சேதுபதியும் பிஜூ விஸ்வ நாத்தும் சேர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுத, படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு செய்து பிஜு விஸ்வநாத் இயக்கி இருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய் .

இப்படி ஒரு வயதான கேரக்டரை எடுத்துக் கொண்டு நிதானமாக அனுபவித்து நடித்து இருக்கும் விஜய் சேதுபதி முதல் பாராட்டுக்குரியவர் .

நாயகனாக அறிமுகமாகி இருக்கும் ரமேஷ் திலக் சிறப்பாக செய்து இருக்கிறார் .ஒரு பக்கம் காதல் பிரச்னை , இன்னொரு பக்கம் கைலாசம் பிரச்னை இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிப்பதை முக பாவங்களால் மட்டும் காட்ட முயலாமல், உடல் மொழிகளால் காட்டி இருக்கும் விதம் மிக அருமை.

நண்பராக வரும் ஆறு பாலாவின் குரலும் பாமரத்தனமான தோற்றமும் ரசிப்புக்கு உரிய விசயமாக ஆகி விடுகின்றன.

கதாநாயகி அஷ்ரிதா இயல்பாக இருக்கிறார் .

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அருமை.அழுத்தம் , சோகம் , அதிர்ச்சி , நகைச்சுவை இவற்றை பின்னனி இசை மூலமே கொண்டு வருகிறார் .

பெரிதாக சம்பவங்கள் இல்லாத ஒரு திரைக்கதையை , பெரிதாக போரடிக்காமல் கொண்டு போய் இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எடிட்டர் இயக்குனர் பிஜு விஸ்வநாத் .

அதே ஒரு குறும்படத்தை திரைப்படம் அளவுக்கு விரித்து இருப்பது போன்ற உணர்வைத் தருவது ….வெகு ஜன ரசனைக்கு தீனி போடுமா?

ஆரஞ்சு மிட்டாய் … ஒரு வித்தியாசமான அனுபவம் .

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...