Monday 31 August 2015

போலிசும் போலிசும் மோதும் தற்காப்பு

போலீஸ் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. போலீஸ் கதை என்றாலே சில பொதுவான சூத்திரங்கள் இருக்கும்.

போலீஸ் கதாநாயக பிம்பத்துடன் இருப்பார். ஒரு வில்லன் இருப்பான். அல்லது தாதா, மோசடிக் கும்பல் இருக்கும். இவர்களுக்கிடையில் நமக்கும் மோதல்கள் முடிவு இதுதான் கதை விதிகளாக இருக்கும். இப்படிப்பட்ட கதைகளில் காக்கிசட்டை அணிந்து நடிக்காத கதாநாயகர்களே இல்லை எனலாம்.

ஆனால் போலீஸ் பற்றி மாறுபட்ட கோணத்தில் அணுகும் படம்தான் 'தற்காப்பு'. போலீசுக்கும் போலீசுக்கும் மோதல், போலீசுக்குள் போலீஸ் என்று போகிற கதை இது.

காக்கிச் சட்டை அணிந்து பணியாற்றும் முன் போலீசுக்குள்ள கடமை ,பொறுப்புகளைப் பேசுகிற படம் 'தற்காப்பு'.

இயக்குபவர் ஆர்.பி.ரவி. இவர் பல இயக்குநர்களிடம் சினிமா கற்றவர். ஒளிப்பதிவு ஜோன்ஸ் ஆனந்த் DF TECh, இசை- எஃப்.எஸ். ஃபைசல், பாடல்கள் -மோகன்ராஜ். ஸ்டண்ட்- பில்லா ஜெகன், படத்தொகுப்பு -ஷான் லோகேஷ், கலை- எம். ஜி. முருகன்.

கினெடாஸ் கோப் நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரிக்கிறார்கள். இணை தயாரிப்பு பி.பழனி, பி.முருகேஷ் .

படம் பற்றி இயக்குநர் ஆர்.பி.ரவி பேசும் போது.

" இன்றைக்கு ஒரு போலீசால் நியாயமாக நேர்மையாக இருக்க முடியாத சூழல் இருக்கிறது . ஏன் போலீஸ் நல்லவனாக இருக்க முடியவில்லை?அவர்கள் இருப்பதில்லையா? இருக்க விடுவதில்லையா? காரணம் அமைப்பா, சமூகமா, மக்களா? எல்லாவற்றையும் அலசுகிறது படம். இந்தப் படத்தில் அரசியல் உள்ளது. அரசியல்வாதிகள். இல்லை. ஏன் கரை வேட்டிய ஒருவர் கூட படத்தில் வரமாட்டார்கள்.ஆனாலும் அரசியல் உள்ளது''என்கிறார்.

படத்தில் கதாநாயகன், நாயகி என்கிற வழக்கமான உளுத்துப் போன சூத்திரம் இல்லை.

நான்கு பேர் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ஒருவர் இயக்குநர் பி.வாசுவின் மகனான சக்திவேல் வாசு. இன்னொருவர் சமுத்திரக்கனி. இவர்கள் தவிர 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்த வத்சன் சக்கரவர்த்தி, 'மானாட மயிலாட' புகழ் சதிஷ் என மேலும் இருவரும் உண்டு.

வைஷாலி, அமிதா இருவரும் மரத்தைச் சுற்றி டூயட் பாட்டுப் பாடாமல் அடர்த்தியான பாத்திரம் சுமந்துள்ளனர்.

  • ''எல்லாத்துறைகளிலும் நியாயமாக இருப்பவனுக்குப் பல தடைகள் ,இடையூறுகள் இருக்கும். காரணமே இல்லாமல் சமூகம் எதிராகிவிடும். போராடித் தோற்று விடுகின்றனர். அந்தத் தனிமனிதன் எழுப்பிய பொறி வளர்ந்து பெரிய போராக மாறும். நம் தேச சுதந்திரம் கூட யாரோ முதலில் தோற்ற ஒருவர் பற்றவைத்த தீப்பொறிதானே? முதலில் சுதந்திரத்துக்கு குரல் கொடுத்தவன் அதாவது முதலில் சுதந்திரம் கேட்டமனிதன் தோற்றுவிட்டான். ஆனால் அந்தப் பொறி அணையவில்லை. 200 ஆண்டு கனிந்து சுதந்திரப் போராக மாறவில்லையா? அது போல்தான் போலீசும்" என்கிறார் இயக்குநர்.

'தற்காப்பு' படத்துக்காக சக்திவேல் வாசு 90 கிலோ எடை இருந்தவர் 20 கிலோ குறைத்து 70 கிலோ ஆகி முழு போலீஸ் உடற்தகுதியுடன் மாறி நடித்துள்ளார். அவர் போலீஸ், மாபியா என இரு வேடம் ஏற்று இரு நிறம்காட்டி யுள்ளார்.

சமுத்திரக்கனி கதை பிடித்தால்தான் நடிப்பார். அவர் நடித்துள்ளது படத்துக்கு பெரிய பலமாக இருக்கிறது..

இவர்கள் இருவருக்கும் படத்தில் ஜோடியில்லை.

சக்திவேல் வாசு க்ளைமாக்ஸ் காட்சியில் ஏழாவது மாடியிலிருந்து டூப்பின்றி குதித்து அசத்தியுள்ளார். அவருடன் நடிகை அமிதாவும் குதித்து தான் ஒரு ஆக்ஷன் ஹீரோயின் எனக் காட்டியுள்ளார். பெங்களுரில் கட்டிமுடிக்கப்படாத ஒரு கட்டடத்தில்தான் இக்காட்சி எடுக்கப்பட்டது.

படப்பிடிப்புக்கு பிந்தைய இறுதிக்கட்ட மெருகேற்றும் பணி நடந்து வருகிறது. படம் செப்டம்பர் வெளியீடு.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...