Saturday 8 August 2015

சண்டிவீரன் திரைவிமர்சனம்

பக்கத்துப் பக்கத்து ஊர்கள் . ஒரு ஊரில் தண்ணீர் பிரச்னை. இன்னொரு ஊரோ தண்ணீர் கொடுக்க மறுக்கிறது . தண்ணீர் உள்ள ஊரைச் சேர்ந்த ஒரு நல்லவர் (போஸ் வெங்கட்) பக்கத்து ஊருக்கு உதவி செய்யப் போய் உயிர் இழக்கிறார்.

அவரது மகன் பிழைப்புக்காக சிங்கப்பூர் போய் அங்கும் பெரிதாக சம்பாதிக்க முடியாமல் ஊருக்கு வருகிறான். தன் அப்பாவைப் போலவே , தண்ணீர் இல்லாமல் வாடும் ஊருக்கு உதவி செய்ய விரும்புகிறான் .(அதர்வா)

அதற்கிடையே தனது ஊரைச் சேர்ந்த அரிசி மில் அதிபரும் அடியாள் பலத்தில் அடாவடி செய்பவருமான ஊர்ப் பெரியமனிதரின் (லால் ) மகளை (ஆனந்தி) காதலிக்கிறான் . மில் அதிபருக்கு மகளின் காதல் தெரிய வருகிறது . தன் மகளைக் காதலிக்கும் ஏழையான ஹீரோவை கொலை செய்ய முடிவு செய்கிறார் .அதற்கு தக்க தருணம் பார்த்துக் காத்து இருக்கிறார் .

நாயகன் பக்கத்து ஊருக்கு உதவ முயல்வதும் அவருக்கு தெரிய வருகிறது . தனது மகளைக் காதலிப்பதோடு தனக்கு பலன் தரும் குளத்து நீரையும் பக்கத்து ஊருக்கு வாங்கித் தர அவன் போராடுவது, அவரை இன்னும் எரிமலை ஆக்குகிறது .

தண்ணீர் பிரச்னையை வைத்து கலவரத்தை உண்டு பண்ணி எதிர் ஊர் மக்கள் , நாயகன் அனைவரையும் கொல்ல அவர் திட்டமிடுகிறார் .

நாயகன் தப்பினானா? அவர்களின் காதல் பிழைத்ததா ? பக்கத்து ஊருக்கு தண்ணீர் கிடைத்ததா என்பதே ….

ஸ்ரீகிரீன் புரடக்ஷன் சார்பில் எம் எஸ் சரவணன் வெளியிட , இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அதர்வா – ஆனந்தி இணை நடிப்பில் சற்குணம் இயக்கி இருக்கும் படம் சண்டி வீரன்.

ஹீரோவின் தந்தை ஊர்க் கலவரத்தில் கொல்லப்படும் அந்த முதல் காட்சியே மிகப்பிரமாதமாக எடுக்கப்பட்டு இருக்கிறது .

பி ஜி முத்தையாவின் கேமராவில் பசுமையான அந்த ஊர் அவ்வளவு அற்புதமாக விரிகிறது . நம்மையும் கிராமத்துக்குள் நுழைய வைக்கிறது யதார்த்தமான காட்சிகள். ஹீரோ ஹீரோயின் காதல் கலாட்டாக்கள் அருமை .

காதல் முதல் கிரிக்கெட் வரை செல்போன் ஒரு கேரக்டராக இருப்பது பாராட்ட வைக்கிறது.

ஹீரோவின் அம்மா கதாபாத்திரம் அருமை . அலுங்குற பாடல் இனிமை . தாய்ப்பாலும் தண்ணீரும் கண் கலங்க வைக்கிறது. சண்டைக்காட்சிகள் அதிரடியாக இருக்கின்றன.

அதரவா ஆனந்தி இருவரும் கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள். நடிப்புதான் பற்றாக்குறை.

திரைக்கதை தடுமாறுகிறது . கிளைமாக்ஸ் போதுமான கனத்தில் இல்லை .

தண்ணீர் பிரச்னையை இன்னும் கனமாக சொல்லி இருக்கலாம்

எனினும், அருமையான கிராமத்து அனுபவமாக இருக்கிறது சண்டி வீரன்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...