Friday 24 July 2015

வடகலையா தென்கலையா? - ஒரு திரைப்பட விழாவில் மோதல்

அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்லவன்' நீண்ட வரலாற்று நாவலான இது, இப்போது 120 நிமிடங்கள் கொண்ட முழுநீள 2டி திரைப்படமாகி வருகிறது.

'பொன்னியின் செல்லவன்' கதை அனிமேஷன் படங்களின் அசத்தல் தன்மை யோடும் அசல் கதையின் ஓட்டம் மாறாமலும் தயாராகிறது. 5 எலிமெண்ட்ஸ் எண்டர்டெய்னர் மற்றும் வளமான தமிழகம் நிறுவனத்துடன் இணைந்து சரவணராஜா தயாரிக்கிறார். எம். கார்த்திகேயன் இயக்குகிறார். பி.லெனின் படத்தொகுப்பு செய்கிறார்.


இன்று நடந்த விழாவில் படத்தின் முன்னோட்டத்தை திரைப்பட இயக்குநர் எஸ்பி. ஜனநாதன் வெளியிட தமிழ்நாடு வேளாண்மைத் துறை இயக்குநர் ராஜேந்திரன் ஐ.ஏ:எஸ். பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சரவணராஜா " இங்கே வந்திருப்பவர்கள் கல்யாணமாலைமோகன், ராஜேந்திரன் ஐ.ஏ:எஸ்.,பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அனைவரும் அழைத்த போது காரணம் கேட்டனர். எல்லாருக்குமே உரிய தகுதியும் தொடர்பும் இருப்பதால் தான் அழைத்து இருக்கிறேன். . அதற்கான காரணத்தை நான் கூறியதும் மகிழ்ச்சியுடன் வர ஒப்புக் கொண்டனர்.

இவர்கள் அனைவரும் திரைப்படம்,அனிமேஷன், வரலாறு என்கிற வகையில் இவ்விழாவுடன் தொடர்பு உடையவர்கள்தான். இது மூன்றாண்டுகால திட்டம். 7 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ளது. மீதி 2 ஆண்டுகள் 4 மாதங்கள் உள்ளன.2017ல் வெளிவரவுள்ள இத்திரைப்படம் டிஸ்னி ,Pixar நிறுவனத் தயாரிப்புகளுக்கு இணையாக சுமார் 20 கோடி தயாரிப்பு செலவில் உருவாகிறது. .அனிமேஷன் படக்குழுவில் 150 பேர் பணிபுரிகிறார்கள் 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் படம் திரைப்படத்துறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என்று நம்புகிறோம்

இதன் தரம் பற்றிய பலருக்கும் சந்தேகங்கள் வரலாம். வரும்; அதற்கு பதில் அளிப்பது போல தரத்தைக் காட்ட அவ்வப்போது இன்னும் 2,.3 முன்னோட்டத்தை வெளியிடவுள்ளோம்.''என்றார்.

கல்யாணமாலை மோகன் பேசும் போது:

"நான் சரவணராஜாவை ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில்தான் சந்தித்தேன். யாரைப் பார்த்தாலும் நல்லா இருக்கீங்களா என்பேன். இப்படி நலம் விசாரிப்பதில் யாருக்கும் நஷ்டம் இல்லை. அவர் பேசும் போது இந்தப்படம் பற்றிக் கூறினார். இதை பழைய கதையாச்சே என்பார்கள். பழையதை சொல்லிப் புரிய வைப்பது நம் கடமையல்லவா? இம்முயற்சியின் மூலம் 'பொன்னியின் செல்லவனை' அடுத்த தலைமுறை சமூகத்துக்கு எடுத்துச் செல்கிறீர்கள். இதில் இலக்கையும் தாண்டி வெற்றிபெற வாழ்த்துகிறேன். "என்றார்.

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேசும்போது :

"இந்த அனிமேஷன் முயற்சி வரலாற்றில் முக்கிய நிகழ்வு. இது சாதாரண விஷயமல்ல. எம்.ஜி.ஆரே இதை எடுக்க விரும்பியிருக்கிறார்.
நானும் ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அனிமேஷன் என்று ஈடுபட்டு பைத்தியமாகத் திரிந்தவன்தான்.

சோழர்கால வரலாறு மிகப்பெரியது.பேராசிரியர் ஞானசம்பந்தன் ஒரு தகவலைக் கூறினார் ஆச்சரியப்பட்டேன். சோழர் களின் கப்பல்படை பெரியது. இப்போதாவது திசைகாட்ட கருவி உள்ளது. அப்போது திசையை அறிய தேவாங்கை பயன்படுத்தினார்களாம்.

அது எப்போதும் மேற்கு நோக்கியே பார்க்குமாம். பிறந்த குட்டியும்கூட மேற்கு நோக்கியே பார்க்குமாம் அதை வளர்த்து கப்பலில் பயன்படுத்தியிருக்கிறார்கள். என்ன ஒரு விஞ்ஞான நுணுக்கம் பாருங்கள். இந்த முயற்சியில் என்னால் முடிந்த உதவியை செய்யத் தயாராக இருக்கிறேன்.''என்றார்.

பிரபல கார்ட்டூனிஸ்டும் எழுத்தாளருமான மதன் பேசும்போது
'' படம் எடுப்பதே சவால். அதையும் 'பொன்னியின் செல்வனை'அனிமேஷன் படமாக பிரமாண்டமாக எடுப்பது அதைவிட பெரிய சவால். இது எல்லாமே மிகப்பெரிய விஷயம்.

அதனால் இதைத் தயாரிக்கும் சரவணராஜா வந்தியத்வேனை விட பெரிய வீரனாகத் தெரிகிறார். சுமார் 2500 பக்கங்கள் கொண்ட இக்கதையை 10முறை படித்தவர்களே பல ஆயிரம் பேர் இருப்பார்கள். அவர்கள் எல்லாருமே அத்தாரிடி போல் பேசுவார்கள்

இம்முயற்சி காலத்தின் கட்டாயம். எவரெஸ்ட்டில் ஏறிய எட்மண்ட் ஹிலாரியிடம் ஏன் ஏறினே என்றபோது சிகரம் இருந்தது ஏறினேன் என்றாராம். அது காலத்தின் கட்டாயம்.3டிஎன்பது சிக்கல் நிறைந்தது. ஆனால் 2டி பல வசதிகள் கொண்டது. ஸ்பீல்பெர்க் 'டின்டின்' எடுத்தபோது 3டி பற்றி கேள்வி வந்தது. பெரிய ஹிட்டான லயன்கிங், ஜங்கிள்புக் எல்லாம் 2டி யில்பார்த்து இருப்பார்கள்.

இன்னொரு தலைமுறைக்கு கொண்டு செல்லும் இம்முயற்சி சாகாவரம் பெறப் போகிறது. இதில் வரும் ஆழ்வார்க் கடியான் பாத்திரத்தில் உள்ள நாமம் வடகலையா? தென்கலையா? என்கிற சர்ச்சையை உண்டாக்கும் .அதற்காகத் தமிழகத்தில் கலவரமே நடக்கப் போகிறது. ஏற்கெனவே காஞ்சிபுரம் கோவில் யானைக்கு நாமம் போடும்போது வடகலையா? தென்கலையா? சர்ச்சையாகி நீதிமன்றமே போனார்கள். இது பெரிய வேலை தஞ்சைப் பெரிய கோவில் கட்டியதைப் போல பெரிய வேலை ,கட்டி முடிக்க வேண்டும். "என்று கூறி வாழ்த்தினார்.

ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். பேசும்போது:

"இது எம்.ஜி.ஆரே முயன்ற முயற்சி என்று அறிந்தேன். 'பொன்னியின் செல்வன்' கதை முதல்அத்தியாயம் ஆடி மாதத்தில்தான் ஆடி.18ல்தான் தொடங்கும்.

பின்னர்தான் ஆடி மாதம் பீடை மாதம் என்றானது ஜேஸ்டா மாதம் என்றானது. 8ஆம் நூற்றாண்டு வரை ஆடிமாதம் மங்கலமாதமாகவே கருதப்பட்டது. 9ஆம் ,10ஆம் நூற்றாண்டில் பீடை மாதம் என்று மாற்றப்பட்து. ஜேஸ்டாதேவி என்று வணங்கப்பட்ட வழிபாட்டுத் தெய்வம் வெளியேற்றவும் பட்டது. இளையவளான லட்சுமி வழிபடப் பட்டாள்.

சோழர் சாம்ராஜ்யம் பிரமாண்டமானது. 846முதல் 1279வரை433 ஆண்டுகள் ஆண்ட வம்சம் உலகத்திலேயே சோழ வம்சம்தான்.

உலகில் தமிழ்நாட்டை காட்சிப்படுத்த சோழர் கால பெருமையை காட்டலாம். பழமை ,நிர்வாகம், கலை, வீரம் ஆட்சி, கட்டடக்கலை, இலக்கியம் எல்லாமும் நிறைந்தது.

தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய போது இது'நான் எழுப்பிய கோவில்' என்கிறான் ராஜராஜன்.
ராஜராஜனால் கட்டப்பட்டது என்று பல இடங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. ராஜராஜன் சரியான நிர்வாகி. ராஜராஜன் வரலாற்று அறிவு நிறைந்தவன்.
எல்லாவற்றையும் சரியாகப் பதிவு செய்து இருக்கிறான். இது தொடர்பாக ஏராளமான செப்பேடுகள் உள்ளன. ஆனைமங்கலம் செப்பேடுகள் உள்ளன. மகன்காலத்து கரந்தை செப் பேடுகள் 56 ,திருவாலங்காடு செப்பேடுகள் ,
திருச்செங்கோடு செப்பேடுகள் 8 என உள்ளன. அவற்றை வைத்து கல்கி அழகாக வர்ணித்திருப்பார்.

கதையில் வரும் ஆழ்வார்க்கடியான் இட்டுள்ள நாமம் வடகலையா? தென்கலையா என மதன் கேள்வி எழுப்பினார். என்னைக் கேட்டால் தென்கலையே போடலாம் என்பேன். எவ்வாறு என்றால் அனிருத்த பிரம்மராயர் அன்பிலைச் சேர்ந்தவர். அவரது தாயார் தங்கத்தட்டில் வைக்கும் உணவைத்தான் பெருமாள் சாப்பிடுவாராம் .
அனிருத்த பிரம்மராயர் தென்கலை. எனவே அவரது சீடன் ஆழ்வார்க்கடியானும் தென்கலையாகவே இருக்கமுடியும் என்று கூறலாம்.

இங்கே ஜனநாதன் வந்துள்ளார் இதுவும் பொருத்தமே .ஏனென்றால் ராஜராஜனின் 15 பெயர்களில் ஜனநாதனும் ஒன்று.

மதுரை சோழவந்தான் அருகே ஜனகை மாரியம்மன் கோவில் உள்ளது. ஜனகை என்பது என்ன என்றால் ஜனநாத மங்கலம் தானாம்
குமுளி எல்லையில் உள்ள கண்ணகி கோயிலும் ராஜராஜன் கட்டியதுதான் .கேரள எல்லை என்பதால் ஏதோ பாகிஸ்தான் எல்லை போல தமிழர்கள் பதற்றத்துடன் போய் வழிபட வேண்டியிருக்கிறது. மலையாளிகள் 1 லிட்டர் ,2 லிட்டர்தண்ணீர் பாட்டில் கூட கொண்டு போக முடியாதபடி கெடுபிடிகள் செய்கிறார்கள். தோற்றவர்களைக் கேவலப் படுத்துவது அன்றைய கேரள மன்னன் பரசுராமன் பழக்கம் . அன்றைய பரசுராமன் முதல் இன்றைய மலையாளிகள் வரை கேவலப் படுத்துவது தொடர்கிறது. நம் தமிழ்நாட்டிலிருந்து அவர்களுக்காக கேரளா போகிற 300 லோடு காய்கறியை இப்போதும் தடுத்து வழிமறித்து தினமும் பூச்சிமருந்து சோதனை செய்கிறார்கள்.'' இவ்வாறு ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் பேசினார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...