Sunday 26 July 2015

கல்வி கற்காதவன் மனிதனே இல்லை – ராஜ் டிவி முதல்வன் விருது விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேச்சு

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை பாராட்டுகின்ற வகையிலும், அவர்களது படிப்பாற்றலை ஊக்குவிக்கின்ற வகையிலும் ராஜ் டி.வி.யின் சார்பில் ஆண்டு தோறும் ’முதல்வன் விருது’ வழங்கப்படுகிறது.


கடந்த பதினாறு ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் இந்த விழாவில், பல அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.


2015 ஆம் ஆண்டிற்கான முதல்வன் விருது வழங்கும் விழா அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை ஹாலில் 25.07.2015 மாலை நடைபெற்றது.


இந்த விழாவுக்காக முப்பத்திரெண்டு மாவட்டங்களில் இருந்து தொன்னூற்றி ஐந்து மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுடைய பெற்றோருடன் இரண்டு நாட்களுக்கு முன்பு வரவழைக்கப்பட்டனர். அவர்களை ஹோட்டலில் தங்க வைத்து துறைமுகத்தில் உள்ள போர் கப்பல், பிர்லா கோலா அரங்கம், போர் நினைவுச் சின்னம், விஜிபி.தங்க கடற்கரை, மெட்ரோ ரயில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் பார்வையிட ராஜ் டிவி ஏற்பாடு செய்திருந்தது.

விழாவின் முதல் நாள் அன்று, கவர்னர் ரோசைய்யா அவர்களுடன் மாணவர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது ஆளுனர் ஆற்றிய உரையும், மாணவர்களுக்கு அவர் சொன்ன அறிவுறையும் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.


முன்னதாக, ராஜ் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு மேள தாளத்துடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜ் டி.வி. நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு, படத்தொகுப்பு, ஒளிபரப்பு ஆகியவற்றை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

மாணவர்களுடைய கல்வி திறனை மேம்படுத்துகின்ற வகையிலே இன்று நடைபெற்ற இந்த முதல்வன் விருது வழங்கும் விழாவில் பழங்குடியினர் துறை மத்திய மந்திரி ஜூவல் ஓரம் முன்னிலை வகிக்க, உயர்நீதி மன்ற நீதிபதி என்.கிருபாகரன், தேர்தல் அதிகாரி டாக்டர் சந்தீப் சக்‌சேனா, மாநில உயர்கல்வித் துறை ஆணையத்தின் செயலாளர் கலைமாமணி டாக்டர் கரு.நாகராஜன், வி.ஜி.பி.ரவீந்திரதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ‘முதல்வன் விருதுகள்’ வழங்கி சிறப்பித்தனர்.


விழாவில் பேசிய முதன்மை விருந்தினரும் மத்திய அமைச்சருமான ஜூவல் ஓரம், மாணவர்கள் கடின உழைப்பு, நேர்மை, திட்டமிட்ட இலக்குடன் செயல்பட்டால் எந்த சாதனையையும் படைக்கலாம் என்றார்.

உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேசுகையில், கல்விதான் ஒருவனை அங்கீகரிக்க செய்யும். தலை நிமிரச்செய்யும். கல்வி இல்லாதவன் மனிதனே இல்லை. அந்த அளவுக்கு கல்வி முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவர்கள் பெற்றோரையே கடவுளாக நினைக்க வேண்டும். போட்டி நிறைந்த இந்த உலகில் வெற்றி பெற அல்லும் பகலும் அயராது உழைக்க வெண்டும். மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய, உயர் கல்வித்துறை உறுப்பினர் செயலர் கரு.நாகராஜன், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் உலகளாவிய சாதனைகளை மாணவர்கள் படைக்கலாம் என்று அறிவுறுத்தினார்.

மாவட்ட அளவில் முதலிடம் என்ற சாதனையைத் தொடர்ந்து, மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் மாணவ, மாணவிகள் செயல்பட வேண்டும் என்று விஜிபி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் ரவிதாஸ் அறிவுரை வழங்கினார்.

சாதனை மாணவ, மாணவியர்களை கௌரவிக்கும் ராஜ் டிவியின் முதல்வன் விருது விழா தொடர்ந்து நடைபெறும் என்று ராஜ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் எம்.ராஜேந்திரன் பெருமிதத்துடன் தெரிவித்தார் .


ராஜ் டிவியின் நிர்வாக இயக்குநர் எம்.ராஜேந்திரன் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த விழாவில், பின்னணி பாடகர், பாடகிகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் முதலில் நடைபெற்றது.

விழாவுக்கு வந்த அனைவரையும் இயக்குநர்கள் எம்.ராஜரத்தினம், எம்.ரவீந்திரன், எம்.ரகுநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...