Thursday 2 April 2015

நண்பேண்டா விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா,  மற்றும் சந்தானம் நடிக்கும் மூன்றாவது படம்தான் நண்பேண்டா இப்படத்தை  அறிமுக இயக்குனர் ஜெகதீஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இன்று வெளியாகியுள்ளது.

எந்த வேலை வெட்டிக்கு செல்லாமல் மாதாமாதம் திருச்சியில் இருக்கும் தனது நண்பனான சந்தானத்தின் சம்பள தேதியன்று வந்து அதை மொத்தமாக செலவு செய்துவிட்டு தஞ்சாவுருக்கு திரும்புகிறார் உதயநிதி. இதையே வேலையாக செய்யும் உதயநிதி யதார்த்தமாக திருச்சியில் நயன்தாராவை ரோட்டில் பார்த்து அவர் மீது இவருக்கு காதல் வருகிறது.

ஹாஸ்டலில் தங்கி வங்கியில் பணிபுரியும் நயன்தாராவின் எதிர்த்த வீடு தான் சந்தானத்தின் வீடு என்பதை அறிந்த உதயநிதி அங்கேயே தங்குகிறார் உதயநிதி. நயன்தாராவை  கரெக்ட் செய்வதற்காக அவருக்கு பிடித்த அனைத்தையும் செய்து அவரை இம்ப்ரெஸ் செய்கிறார். சுமூகமாக செல்லும் இவர்கள் காதலில் விழுகிறது ஒரு பேரிடி, இதற்கு முன்பு சென்னையில் வேலை பார்த்த போது மேனேஜர் மீது உள்ள கோவத்தில் அவரது நாய்யை உதைக்க அது இறந்துவிடுகிறது. இதனால் தான் ஜெயிலில் இருந்ததை உதயநிதியிடம் கூற அவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

வந்தது கோவம் நயன்தாராவுக்கு என்னுடைய சோகம் உனக்கு சிரிப்பா, நீயும் ஜெயிலுக்கு போனாதான் உனக்கு அந்த வலி புரியும் என்று சொல்லி உதயநிதியை விட்டுபிரிகிறார். இந்த சோகத்தை தனது நண்பன் சந்தானத்திடம் உதயநிதி கூற, இவர்களை சேர்த்து வைக்க சந்தானம் போடும் திட்டம் இவர்களுக்கு எதிராகவே அமைய, நயன்தாராவுக்கு உதயநிதி மீதான கோபம் அதிகரிக்கிறது.

இதற்கிடையில் திருச்சியில் பெரிய தாதாவாக இருக்கும் ஸ்கார்பியோ சங்கர் (இவருக்கு எல்லாமே அந்த ஸ்கார்பியோ தான்) என்ற பெயருடன் வலம் வரும் மொட்டை ராஜேந்திரன் லோனில் வாங்கிய காருக்கு பணமே கட்டாததால் அந்த காரை பேங்க் ஆட்கள் தூக்குகின்றனர். தன்னுடைய காரை திருப்பி தருமாறு நயன்தாராவிடம் ஸ்கார்பியோ சங்கர் கேட்க, அவரோ பணத்தை கட்டிட்டு எடுத்துக்கோ என்று கூறுகிறார்.

இதனால் கோவமடைந்த ஸ்கார்பியோ சங்கர் நயன்தாராவை போட்டு தள்ள திட்டமிடுகிறார், இது ஒரு புறம் இருக்க சின்ன வயதில் தன்னை கலாய்த்து அசிங்கப்படுத்திய உதயநிதி மற்றும் சந்தானத்தை எஸ்.ஐ யாக இருக்கும் கருணாகரன், செய்யாத கொலையை செய்ததாக கூறி கைது செய்கிறார்.

ஜெயிலுக்கு போன உதயநிதி, சந்தானம் வெளியே வந்தார்களா… நயன்தாரா உதயநிதியை மன்னித்து ஏற்றுக்கொண்டாரா…ஸ்கார்பியோ சங்கரை கொலை செய்தது யார்..என்பது கிளைமேக்ஸ்.

உதயநிதி இந்த படத்திலும் எளிமையான, யதார்த்தமான நடிப்பும், தனது முந்தைய படங்களை விட இப்படத்தில் அழகாக நடனமும் ஆடியிருக்கிறார். அதோடு ரொமான்ஸ் கலந்த சண்டைக் காட்சியில் அமர்களமான நடிப்பை வெளிபடுத்துகிறார்.

நயன்தாரா படத்திற்கு படம் அழகு கூடிக்கொண்டே செல்கிறது என்றே சொல்லும் அளவுக்கு இந்த படத்தில் இவரது அழகு ரொம்பவும் பளிச்சிடுகிறது. படம் முழுக்க வரும் இவருடைய அழுத்தமான கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.

சந்தானம் வழக்கம் போல இந்த படத்திலும் தன்னுடைய காமெடி சரவெடியை கொளுத்தி போட்டிருக்கிறார். அதிலும் பாடிலேங்குவேஜ் சூப்பர், அதோடு ஷெரினுடன் இவரது காதல் காமெடி கலாட்டா. கருணாகரன், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் தங்கள் பங்குக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஒகே ரகம் தான், பின்னனி இசை படத்திற்கு பலம், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவு, பாடல்கள் காட்சிகள் அற்புதம்.

ஒகே ஒகே படத்தில் உதவி இயக்குனராக இருந்த ஜெகதீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் அவருக்கு வாழ்த்துகள். தன்னுடைய குரு இயக்கிய படத்தை அப்படியே பட்டி டிங்கரிங் பார்த்து தன் முதல் படமாக கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள் தான் அதில் தனித்துவத்தை காட்டுகிறார்.

மொத்தத்தில் நண்பேண்டா குடும்பத்தோடு சிரிச்சு பாக்க வேண்டிய படம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...