Thursday 24 July 2014

நான் கதாநாயகன் ஆன கதை! படவிழாவில் ப்ளாஷ்பேக் சொன்ன கே.பாக்யராஜ்

                                

தான் கதாநாயகன் ஆன கதையின் ப்ளாஷ்பேக் கூறி படவிழாவில் கே.பாக்யராஜ் கலகலப்பூட்டினார்.இது பற்றிய விவரம் வருமாறு;

ஆயுதங்களே மனிதனைத் தீர்மானிக்கின்றன என்கிற கருத்து வாசகத்தை மையமாக்கி உருவாகியுள்ள படம் 'திலகர்'

துருவா, மிருதுளா,கிஷோர்,அனுமோல் நடித்துள்ள இப்படம் ஒரு ஹாரர் த்ரில்லர். ஜி.பெருமாள் பிள்ளை எழுதி இயக்கியுள்ளார். பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் (அட! நிறுவனப் பெயரில் கூட மர்மம்.. துப்பறியும் முத்திரை) சார்பில் உருவாகியுள்ளது

மதியழகன்,ரம்யா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ராஜேஷ்யாதவ் .கண்ணன் இசையமைத்துள்ளார்.
ஒரு துணிச்சல் மிக்க இதயம் கொண்டவனின் வாழ்வில் நடந்ததை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப் பட்டுள்ளது.


'திலகர்' படத்தில் நாயகனாக நடித்துள்ள அறிமுக நடிகர் துருவாவின் ஊடக அறிமுக விழா இன்று மாலை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும் போது
"இந்த திலகர் படக்குழுவினரில் யாரையுமே எனக்குத் தெரியாது. நண்பர் சுரேஷ் காமாட்சிமூலம் இங்கு வந்திருக்கிறேன். அவரும் ஒரு ராங் நம்பர் மூலம் அறிமுகமானவர்தான். இங்கு வந்ததும் பலரும் பேசியதைப் பார்க்கும் போது இது குடும்பவிழா போல உணர்கிறேன்.

இந்த கதாநாயகன் துருவா நன்கு வர வேண்டும், வளர வேண்டும், பெரிய கதாநாயகன் ஆகவேண்டும் என்று மதியழகன். ராஜேஷ் போன்றவர்கள் அக்கறை எடுத்துள்ளது மகிழ்ச்சி. இப்படிப்பட்ட ஊக்கம் தரும் ஆட்கள் அவசியம் தேவை.

நான் சினிமாவுக்கு வந்தபோது எனக்கு இப்படி ஒருவரும் இல்லை. நான் கதாநாயகனாக ஆசைப்பட்ட காலத்தில் பாண்டி பஜார் பக்கம் போவேன். அங்கு விதவிதமாக கலர் கலராக ஸ்டைலாக டிரஸ் போட்டுக் கொண்டு வருபவர்களைப் பார்ப்பேன். நமக்குக் கதாநாயகன் ஆசை சரிப்பட்டு வராது என்று நினைப்பேன். சாப்பாடு ஒருவேளைக்கே அல்லாடும் நிலைமையில் இப்படி எல்லாம் டிரஸ் வாங்க நான் எங்கு போவது?

அதனால் ஆசையை விட்டுவிட்டேன். உதவி இயக்குநராக ஆகி இயக்குநர் ஆனால் போதும் என்று நினைத்தேன்.

அப்படித்தான் எங்க டைரக்டரிடம் சேர்ந்தேன். அவர் ஒருநாள் என்னைக் கூப்பிட்டார். நீ கதாநாயகனாக நடிய்யா என்றார். நான் மறுத்தேன்.

கதாநாயகனாக நடிக்க யாரும் கிடைக்கவில்லை. நீதான் நடிக்கப் போகிறாய் என்றார். நான் சொன்னேன்.. நீங்கள் மூன்று படத்தில் சம்பாதித்ததை நாலாவது படத்தில் விடவேண்டுமா? நன்றாக போசனை செய்யுங்கள் என்றேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது நீ நடி. என்றார். அப்படித்தான் 'புதியவார்ப்புகள்' படத்தில் நடித்தேன்.

பிறகு 'சுவர் இல்லாத சித்திரங்கள்' எடுக்கும் போதும் கூட நமக்கு நடிப்பு வேண்டாம். இயக்கினால் போதும் என்றே நினைத்தேன். நடிக்கத் தேர்வு செய்து வைத்திருந்த பையன் படப்பிடிப்பு ஒருவாரம் இருக்கும் போது ஓடிவிட்டான். வேறு வழியில்லாமல் நான் மறுபடியும் மேக்கப் போட வேண்டியிருந்தது. நடித்தேன்.

கதாநாயகனாக அறிமுகமாவது சிரமம். நுழைந்து விட்டால் நின்று விடலாம். ஒரு படம் ஓடிவிட்டால் நாலுபடம் ஒடவில்லை என்றால் கூட தாக்குப் பிடித்து விடமுடியும். வண்டி ஒடும். நாலுபேர் நாலு படம் இயக்கினால் ஒருத்தர் மூளையைக் கசக்கி படடெடுத்தால் கூட படம் ஓடிவிடும்.

இயக்குநர்கள் அப்படியில்லை. செய்கிற வேலையிலேயே நொந்து நூலாகி விடுவார்கள். விழுந்தால் நானே எழுந்தால்தான் உண்டு. யாரும் கை தூக்கி விட மாட்டார்கள்.

கதாநாயகனுக்கு நாலு படத்தில் ஒன்று நன்றாக இருந்தால் போதும். இந்த வசதி இயக்குநருக்கு இருக்காது.

இன்று நடிகர்கள் தினசரி ஹோம் ஒர்க் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

'கிழக்கே போகும் ரயில்' படத்தின் போது எப்போதும் என்னுடன் இருப்பார் ஒருவர் .அவர் விஜயன். கேரளாக்காரர் நான்தான் அவரை எங்கள் இயக்குநரிடம் உதவியாளராகச் சேர்த்து விட்டேன். ஆனால் அவருக்கு நடிக்க ஆசை. ஏதாவது வேடமிருந்தால் தரச்சொல்லி நச்சரிப்பார். அப்படி அவரை நடிக்கச் சொன்னேன். ஒரு சிறு வேடம் என்று எங்கள் டைரக்டரிடம் சொன்னேன். நான் அவருக்கு எழுதியிருந்த வசனங்களைப் பார்த்து என்னய்யா எங்க பார்த்தாலும் வருகிறான் என்றார். கதாநாயகன் மாதிரிவருகிறான் என்றார்.

படத்தில் சுதாகரையும், ராதிகாவையும் துரத்தும் காட்சியில் இடையில் நுழைந்து பட்டாளத்தானாக விஜயன் வந்து நிற்பது நல்ல வரவேற்பை பெற்றது. போகிற இடமெல்லாம் அவருக்கு அத்தனை கைதட்டல்கள்; வரவேற்பு.இதை எங்கள் இயக்குநர் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

'நிறம் மாறாத பூக்கள்' படத்தின் கதையை சொல்லி எங்கள் இயக்குநரிடம் சம்மதம் வாங்கியிருந்தேன். ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். விஜயனே நடித்தால் போதும் நன்றாக இருக்கும் என்றார் அவர். அப்படித்தான் விஜயன் பெரிய ஆளானார்.

அதே விஜயன் என்னுடன் நடிக்கும் சந்தர்ப்பம் வந்தது. என்னை மூன்று மணிநேரம் காக்க வைத்தார். அலட்சியமாக தாமதமாக வந்து சேர்ந்தார். நான் அவரிடம் கேட்டேன் 'என்னய்யா சிறுவேடம் இருந்தால் கொடுங்கள் என்று கெஞ்சியது நினைவில்லையா?' என்று. நெளிந்து கொண்டே 'சாரி' என்றார். இப்படிப்பட்ட வசதி வாய்ப்பெல்லாம் கதாநாயகர் களுக்கு மட்டுமே உண்டு. படத்தின் பாத்திரம் பேசும் வசனம் முக்கியம். பரோட்டா சூரி அந்த ஒரு வசனத்தின் மூலம் பெயர் பெற்று இன்று வளர்ந்து விட்டார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...